Sat. May 18th, 2024

தேமுதிக.வின் இன்றைய நிலை தெரியாமல், கேப்டன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும், அவரது சகோதரரும், விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே.சுதீஷ், ஒவ்வொரு தேர்தலின் போதும் ஆடும் தப்பாட்டங்கள், அவர்களின் தலையில் மட்டும் அல்ல, அவர்களது கட்சி நிர்வாகிகளின் தலைகளிலும் மண்ணை அல்ல, கொள்ளியையே அள்ளி போட்டுக் கொள்ளதான் துடிக்கிறார்கள்.

கேப்டன் விஜயகாந்த், உடல் நலிவுற்ற பிறகு, தேர்தல் காலங்களில் அவர்கள் இருவரும் எடுத்து வரும் முடிவுகள் மட்டுமல்ல, அவர் பூரண நலத்துடன் இருந்தபோது எடுத்த தப்பான முடிவால்தான், அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு முதலமைச்சராக இருக்கிறார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க.வோடு கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிற வாய்ப்பு கை கூடி வந்த கடைசி நிமிடத்தில், துணை முதலமைச்சர் பதவி கேட்டு அடம் பிடித்தார் விஜயகாந்த். அவரின் பிடிவாதத்தால், தேமுதிக.வை கழற்றிவிட்டு தேர்தலை எதிர்கொண்டது, தி.மு.க

தி.மு.க. மற்றும் தே.மு.தி.க இடையே ஏற்பட்ட முரண்பாட்டால், அ.தி.மு.க. பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. ஆயிரம், இரண்டாயிரம் வாக்கு வித்தியாசத்தில், நிறைய தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்து, ஆட்சியை கோட்டை விட்டது, தி.மு.க..

அதற்குப் பிறகுதான் விஜயகாந்தின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, 2019ல் கொள்கை ரீதியாக தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி 4 தொகுதிகள் பெற்றிருந்தால்கூட, இன்றைக்கு தே.மு.தி.க.வுக்கு 4 எம்.பி.கள் கிடைத்திருப்பார்கள். ஆனால், அ.தி.மு.க.விடம் கோடிக்கணக்கான பணத்திற்கு ஆசைப்பட்டு, அ.தி.மு.க. கூட்டணியிலேயே நீடித்தது.

அப்போதும் கூட, அந்த கூட்டணிக்கும் விசுவாசமாக இல்லாமல், அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்திலேயே, தி.மு.க.வுடனும் எல்.கே.சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். துரைமுருகனை சந்தித்து அவர் நடத்திய பேச்சுவார்த்தையை, அடுத்த நிமிடமே ஊடகங்களில் போட்டு உடைத்தார் துரைமுருகன். இதனால், அசிங்கப்பட்டு போனது தே.மு.தி.க.

வீட்டிலேய விஜயகாந்த் முடங்கி கிடப்பதால், தே.மு.தி.க. தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் சோர்வடைந்து இருக்கிறார்கள். 234 தொகுதிகளிலும் இன்றைய நிலையில், தே.மு.தி.க.வுக்கு சராசரியாக 2000 ஓட்டுகள் கிடைப்பதே அதிகம் என்பதுதான் யதார்த்தமான கள நிலவரம். அதனை உணர்ந்து கொள்ளாமல், பா.ம.க.வுக்கு வழங்கிய 23 தொகுதிகளுக்கு இணையாக எங்களுக்கும் தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த்தும், எல்.கேசுதீஷும், அதிமுக தலைமையை மிரட்டி பணிய வைக்க பார்க்கிறார்கள்.

அவர்களின் மிரட்டலான பேச்சு மட்டுமின்றி அவர்களின் செயல்பாடுகளும் அரசியல் நாகரிகமற்ற முறையில் இருப்பதால், அவர்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவே, அதிமுக தலைமை தற்போது, யோசிக்க தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில், 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க.வுக்கு அமோக செல்வாக்கு இருப்பதைப் போல, எல்.கே.சுதீஷ், சற்றுமுன், தனது முகநூலில் விஜயகாந்த்தான் முதல்வர், என ஒரு பதிவு போட்டுள்ளார்.

இப்படிதான் சிறுபிள்ளைத்தனமாக ஒவ்வொரு தேர்தலிலும் அவசரப்பட்டு, தங்களுக்கு கிடைக்கும் பொன்னான வாய்ப்புகளை இழந்து கொண்டிருக்கிறார்கள் பிரேமலதாவும், எல்.கே.சுதிஷும். 2

34 தொகுதிகளிலும் தே.மு.தி.க. வீம்புக்கு போட்டியிட்டால், ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க மாட்டார்கள் என்று கூறும் அவரது கட்சித் தொண்டர்கள், விஜயகாந்த் கஷ்டப்பட்டு நடித்து சம்பாதித்து வாங்கிய சொத்துகளை வைத்துக் கொண்டு, பிரேமலதாவும், சுதீஷும் எஞ்சிய காலத்தை ஓட்டிக் கொள்வார்கள்.

ஆனால், கேப்டனை நம்பி அரசியலுக்கு வந்த நாங்கள், ஒவ்வொரு தேர்தலிலும் அவமானப்பட்டு நிற்க வேண்டியிருக்கிறது. இவர்களுக்காக கொடி கட்டி, போஸ்டர் அடித்து எங்கள் சொந்த காசை செலவழித்துவிட்டு, இன்றைக்கு அன்னகாவடிகளாக நாதியற்று நிற்கிறோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக படுதோல்வியை சந்தித்த அந்த நேரத்திலேயே, வேறு கட்சிக்கு மாறியிருந்தால் கூட, வரும் தேர்தலில் எங்களில் யாருக்காவது ஒருவருக்கு எம்.எல்.ஏ., தேர்தலில் போட்டியிட அதிமுக.விலோ, தி.மு.க.விலோ வாய்ப்பு கிடைத்திருக்கும்.

கட்சி விசுவாசம், கேப்டன் மீது பாசத்தை வைத்ததால், நாங்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டிய தலையெழுத்து உருவாகிவிட்டது என கோபமாக குரல் கொடுக்கிறார்கள், மாவட்டங்களில் உள்ள தே.மு.தி.க. நிர்வாகிகள்.