Sat. May 18th, 2024

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வந்த நாளில் இருந்து மௌன விரதம் மேற்கொண்டு வருவதைப் பார்த்து, அவரது ஆதரவாளர்கள் மட்டுமல்ல, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சிலிப்பர் செல்லாக, அ.தி.மு.க.வில் இருக்கும் அவரது சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், மனக்குமறல்களை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள்.

சசிகலாவின் விடுதலைக்கு முன்பாக, அவரைப் பற்றி கேள்விகளுக்கு பொத்தம் பொதுவாக பதிலளித்து வந்த ஓ.பி.எஸ்., சில நேரங்களில் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக அதிமுக தலைமை கூடி முடிவெடுக்கும் என்று கூறியிருக்கிறார் ஆனால், பெங்களூரில் இருந்து சசிகலா சென்னை வந்து, தியாகராயநகரில் 20 நாள்களுக்கு மேல் தங்கியிருக்கும் இந்த காலகட்டத்தில், சசிகலா பற்றி ஒரு வார்த்தைக் கூட வாய் திறந்து ஓ.பி.எஸ். கூறாதது எங்களுக்கு எல்லாம் அதிர்ச்சியளித்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் தென்மாவட்டங்களில் பொறுப்புகளில் உள்ள ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்.

ஆனால், அவரது எண்ணவோட்டத்தை அறிந்துகொள்ளும் சக்தி கொண்ட அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் தரப்போ, ஓ.பி.எஸ். எப்போதுமே நம்ம ஆளு. அவருக்கு சமுதாயப் பற்று அதிகம். அதனால், சின்னம்மாவுக்கு சாதகமாகதான் முடிவெடுப்பார். பிப்ரவரி 14 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வந்தவுடன் அவரோடு கலந்துபேசிவிட்டு, சசிகலாவையும், அ.ம.மு.க.வையும் அ.தி.மு.க.வில் சேர்க்க, இணைக்க, ஓ.பன்னீர்செல்வம் ஓங்கி குரல் கொடுப்பார் என்று நம்பிக்கையோடு பேசி வந்தனர். அவர்களின் உற்சாகம், எங்களையும் தொற்றிக் கொண்டதால், சசிகலாவை உள்ளடக்கிய அ.தி.மு.க.வின் வெற்றி எப்படியிருக்கும் என்பது தொடர்பான விவாதம், எங்கள் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக உள்ள தென் மாவட்டங்களில், சூட்டை கிளப்பி வருகிறது.

பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டார். அன்றைய தினம் மேடையில், வழக்கத்திற்கு மாறான உடையலங்காரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காட்சியளித்தார். இளம்மஞ்சள் நிறத்தில் மேற்சட்டை அணிந்திருந்த அவர், தன்னை பா.ஜ.க. நிர்வாகிப் போல அடையாளப்படுத்திக் கொண்டார். தனது அரசியல் வாழ்க்கையில் இதுவரை இதுபோன்ற நிறத்திலான சட்டையை அணிந்துகொண்டு எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டதில்லை.

ஒரு சமிக்கைப் போல, தனது நிலையை அவர் வெளிப்படுத்திய போதும், அன்றைய தினம் பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச ஓ.பி.எஸ்.ஸுக்கு அனுமதி கிடைக்கவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மட்டும் அழைத்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதையடுத்து, பா.ஜ.க. மேலிடத்தில் தனக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டதாக உணர தொடங்கிவிட்டார் ஓ.பி.எஸ்.

அன்றைய தினம் பிரதமர் மோடியை சந்தித்து பேச தனியாக நேரம் கிடைத்திருந்தால், அ.ம.மு.க.வை இணைப்பது, சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது தொடர்பாக, பிரதமரின் அனுமதியை கேட்டு பெற்றிருப்பார் ஓ.பி.எஸ். என்று அவருக்கு நெருக்கமான விசுவாசிகள் முன்கூட்டியே எங்களிடம் தெரிவித்திருந்தனர். ஆனால், ஓ.பி.எஸ்.ஸை புறக்கணித்துவிட்டு மோடி புறப்பட்டுச் சென்றதால், ஓ.பி.எஸ் மட்டுமல்ல அவரது ஆதரவாளர்களான நாங்களும் அப்செட் ஆவி விட்டோம்.

அடுத்து, கடந்த மாதம் 25 ஆம் தேதி கோவைக்கு பிரதமர் வந்திருந்தபோதும், சசிகலா விவகாரத்தை பேச ஆர்வமுடன் இருந்தும், அதற்கான நேரம் அமையாததால், ஓ.பன்னீர்செல்வம் தளர்ந்துவிட்டார். அன்றைக்கும் பிரதமர் மோடி பங்கேற்ற அரசு விழாவில், இளம் மஞ்சள் நிறத்தில்தான் ஓ.பி.எஸ். மேற்சட்டை அணிந்திருந்தார். பிரதமர் மோடியின் பாராமுகத்தால் உடைந்து போய்விட்டார், ஓ.பன்னீர்செல்வம்.

சசிகலாவுக்கு ஆதரவான மனநிலையில் தான் மட்டுமே கட்சியில் இருப்பதாக, பிரதமர் மோடியிடம் முதல்வர் இ.பி.எஸ். போட்டுக் கொடுத்திருப்பாரா? என்று சந்தேகம், ஓ.பி.எஸ்.ஸுக்கு வலுக்க ஆரம்பித்துவிட்டது. அதனால், கோவை விழாவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம், தனது பேச்சு மற்றும் செயல்பாடுகளை முற்றிலுமாக மாற்றிக் கொண்டதைக் கண்டு, தென்மாவட்டத்தைச் சேர்ந்த அவரது சமுதாய மக்கள் அதிர்ச்சியில்தன் உள்ளோம்.

கடந்த ஒருமாதத்திற்கு மேலாக தனக்கு மிக நெருக்கமான நிர்வாகிகளிடம் மனம் விட்டு பேசிய நேரங்களில் எல்லாம், சசிகலாவை பற்றியும், அ.ம.மு.க.வை பற்றியும் பேசினால், கொஞ்சம் பொறுமையாக இருங்கள். நல்லது நடக்கும் என்று சொல்லி வந்தாராம் ஓ.பி.எஸ்.ஆனால், கடந்த 10 நாள்களுக்கு மேலாக இதுபோன்று பேசும் நேரங்களில், அந்த பேச்சு வந்தாலேயே ஓ.பன்னீர்செல்வம், அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றுவிடுகிறார் என்று சோகமாக கூறுகிறார்கள் அவருக்கு மிக, மிக நெருக்கமான தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள்.

சசிகலா விவகாரத்தில், ஜனவரி மாதத்தில் அவருக்கு ஆதரவான மனநிலையில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், பிப்ரவரி 14 முதல் ஒருவிதமான மனஉளைச்சலில்தான் இருந்து கொண்டிருக்கிறார். மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் வருகைக்குப் பிறகுதான், ஓ.பி.எஸ்.ஸிடம் இறுக்கம் அதிகமாவிட்டது. நேற்றைய நள்ளிரவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனான சந்திப்பின் போதும், ஓ.பி.எஸ். வார்த்தைகளுக்கு எந்த முக்கியத்துவமும் கிடைக்கவில்லை என்கிறார்கள் அவரது மனநிலையை நன்கு அறிந்த அவரது விசுவாசிகள்.

இன்று காலையில் இருந்தே அவரிடம் ஏகப்பட்ட மாற்றங்கள் தெரிகிறது. சென்னையில் உள்ள அவரது பங்களாவில், பெரும்பாலான நேரங்களில் தனித்து இருக்கவே விரும்புகிறார். அவரிடம் காணப்படும் மாற்றங்களும், முகபாவங்களும் எங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் துணிந்து, சசிகலா ஆதரவு நிலை எடுப்பார் என்ற தைரியத்தில்தான், சொந்த ஊர்களில் இ.பி.எஸ் ஆதரவு மனப்பான்மையில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிளிடம் இருந்து விலகி நின்றதுடன், அ.ம.மு.க.வில் உள்ள எங்கள் சமுதாய மக்களுடன் உறவாடினோம்.

சசிகலா சிறைக்கு சென்றப் பிறகு, ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் இருபிரிவாக எதிரும் புதிரும் நின்று அரசியல் செய்து வந்த நிலையில், நான்காண்டுகளுக்குப் பிறகு, சசிகலா வெளியே வந்தவுடன், அவரது தலைமையை ஏற்றுக் கொள்வதில் தனக்கு எந்த தயக்கமும் இருக்காது என்பதை சில செயல்கள் மூலம் ஓ.பன்னீர்செல்வமும் வெளிப்படுத்தியிருந்தார். அவரின் செயல்பாடுகள் எங்களுக்கு மேலும் உற்சாகத்தைத் தர, சொந்த ஊரில் பிரிந்திருந்த சமுதாய மக்கள் மீண்டும் இணைந்து உற்சாகமாக அரசியல் செயல்பாடுகளில் ஆர்வம காட்டினோம்.

ஆனால், கடந்த பத்து நாட்களாக, சசிகலாப் பற்றி பேசுவதையோ, அ.ம.மு.க.வை அதிமுகவில் இணைப்பதை பற்றி அவர் காது பட பேசுவதையே ஓ.பன்னீர்செல்வம் விரும்புவதில்லை என்று அவருக்கு நெருக்கமான கட்சி நிர்வாகிகள் மனம் நொந்து எங்களிடம் பேசுகிறார்கள். ஓ.பி.எஸ்.ஸை நம்பி நாங்களும் உள்ளுரில் சசிகலாவுக்கு ஆதரவான நிலையை வெளிப்படையாக எடுத்திருந்ததால், இ.பி.எஸ். ஆதரவாளர்கள் எங்களை எதிரிகள் போல பார்க்க தொடங்கிவிட்டனர்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில், சென்னையில் ஓ.பி.எஸ்.ஸுக்கு எல்லா மரியாதையும் கிடைக்கிறது. ஆனால், அவரை நம்பி, களத்தில் புதிய வேஷம் கட்டிய நாங்கள்தான், எதிர்காலம் என்னாகுமோ என்று கவலைபட்டுக் கொண்டிருக்கிறோம்.

அம்மா மறைந்த நாள் முதலாவவே, தெளிவான, தீர்க்கமான முடிவை எடுக்காமல், புரியாத புதிராகவே இருக்கிறார் ஓ.பி.எஸ்., இதுதான் என்னுடைய அரசியல்பாதை என்பதை தெளிவாக கூறிவிட்டால், அவரது நிழலிலேயே நடந்து அரசியல் செய்து வரும் எங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காதே. உள்ளூரிலேயே சொந்தக் கட்சிக்குள்ளேயே அசிங்கப்படாமல் இருக்கலாம் அல்லவா. அவரின் இரட்டை நிலைப்பாட்டால் அவரது சொந்த மாவட்டமான தேனியிலேயே அவருக்கு எதிராக அண்மைக்காலமாக அதிமுக தொண்டர்கள் எதிர்ப்புக் குரலை ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிடடனர். இந்த நிலை தொடர்ந்தால் அவருக்கு மட்டுமல்ல, அவரது தலைமையை கொண்டாடி வரும் எங்களின் எதிர்காலமும் அரசியலில் கேள்விகுறியாகிவிடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.

தர்ம யுத்தம் நடத்திய காலத்தில் இருந்து இன்று வரை, ஓ.பி.எஸ்., சொந்த சமுதாயத்திற்கு நன்றிக்குறியவராக இருக்கிறாரா, அல்லது தன்னை தமிழகத்திற்கு அடையாளம் காட்டிய அ.தி.மு.க. மீதாவது பக்தியாக இருக்கிறாரா என்று புரியாமல் குழப்பத்தில் தவித்து வருகிறோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எடுத்துக் கொள்ளுங்கள். துணிச்சலாக சசிகலாவையும், தினகரனையும் எதிர்க்கிறார். அதனால், அவரது விசுவாசிகள், அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், நிம்மதியாக, மான மரியாதையோடு அவரவர் ஊரில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ஓ.பி.எஸ்.ஸை நம்பி அரசியல் செய்து வரும் அவரது சமுதாயத்தைச் சேர்ந்த எஙகளுக்கு இந்த நிமிடம் கூட குழப்பமாகதான் இருக்கிறது.

இன்றைக்கு இருக்கும் இதே மனநிலையோடு, தேர்தல் முடியும் வரை ஓ.பி.எஸ்., இருப்பாரா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இப்படி மதில்மேல் பூனையாக இருக்கும் ஓ.பி.எஸ்.ஸின் பாதையில் தொடர்ந்து அரசியல் செய்தால், எதிர்காலம் பிரகாசமாக இருக்குமா, அல்லது இருண்டு விடுமா என்பதே தெரியவில்லை. எங்கள் மனக்குமறல்களை ஓ.பி.எஸ்.ஸிடம் நேரடியாக தெரிவிக்க முடியவிலை. உங்கள் வாயிலாக அவரின் கவனத்திற்கு சென்று சேர்ந்தால், ரெம்ப நிம்மதியாக தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டும் என்று வேதனையோடு பேசினார்கள், தென்மாவட்ட ஓ.பி.எஸ். சமுதாய மக்கள்.

ஓ.பி.எஸ் ஸின் ஊசலாட்டததை நன்றாக புரிந்து வைத்திருப்பதால்தானே, இ.பி.எஸ்., எல்லா அரசியல் விளையாட்டுகளிலும் ஸ்கோர் செய்து கொண்டிருக்கிறார்.