3 நாள் பயணமாக தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டச் சுற்றுப்பயணங்களை நிறைவு செய்து, நிறைவு நாளான இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் தேர்தல் பரப்புரை ஆற்றினார். அவரின் உரையில் இடம் பெற்ற முக்கியமான அம்சங்கள் இதோ….
தமிழ்நாட்டிற்கு தற்போது தேவையானது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், விவசாயிகளுக்கு பாதுகாப்பும் தான்.
இந்தியாவில் மீண்டும் ஓர் சுதந்திர போராட்டம் நடத்த வேண்டும்;அது ஒரு அறப்போராட்டமாகவே இருக்க வேண்டும்.
என்னுடைய வேலையானது நம் நாட்டில் திறமைசாலிகளை கண்டறிந்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவுவதுதான்.
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைகள் ஏழைகள், சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், கடைக்காரர்கள், விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளது.
நிதிச் சுமை, ஆள் பற்றாக்குறை என்று பல்வேறு அதிகாரிகள் எதிர்த்த போதும், குழந்தைகளின் கல்விதான் முக்கியம் என்று விடாப்பிடியாக நின்று, சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி, இந்தியாவிற்கே வழிகாட்டியாக விளங்கியவர் காமராஜர்.
தமிழ் மொழியை அழிக்க நினைக்கும் RSS க்கு எந்த காரணம் கொண்டும் நாம் வழிவிட்டுவிட கூடாது.
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும், வரலாற்றையும் பாதுகாப்பது ஒரு இந்தியனாக எனது கடமை.
இவ்வாறு அவர் பேசினார். இடையிடையே கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல், வர்த்தகர்களின் குறைகளை கேட்டறிந்தால் என அனைத்து தரப்பு மக்களின் பிரச்னைகளையும் கேட்டறிந்த அவர், மத்தியில் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்தால், மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்கள் தீட்டப்படும் என உறுதியுடன் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை முளகுமூடு உள்ள தனியார் கல்லூரியில் மாணவ, மாணவியர்களுடன் நடனமாடி, தனது தேர்தல் சுற்றுப் பயண பதற்றமான நேரத்திற்கு இடையே கொஞ்சம் இளைப்பாறவும் செய்தார், ராகுல்காந்தி…