Fri. Nov 22nd, 2024

சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் பாரதத்தின் தலைமகனாக இருந்த ஜவஹர்லால் நேருவின் பேரனான ராகுல்காந்தி, தமிழகத்தில் 2 கட்டமாக மேற்கொண்டு வரும் தேர்தல் பரப்புரையை பார்த்து, காங்கிரஸுக்கு ஜென்ம விரோதிகளான தமிழ் தேசியவாதிகள்கூட, ஆறுதலாய், ஆதரவாய் நான்கு வார்த்தைகள் இன்றைக்கு உதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். மாநில சுயாட்சிக் கொள்கைகளை குழிதோண்டி போட்டு உடைத்ததில் முக்கியப் பங்கு, முதன்மையான பங்கு, காங்கிரஸ் கட்சிக்கே இருக்கிறது என்பதும், மத்தியில் அக்கட்சி ஆட்சியில் இருந்தபோதெல்லாம், மாநில உணர்வுகளை எவ்வளவு உதாசீனப்படுத்தப்பட்டது என்பதற்கும் வரலாற்று நிகழ்வுகள் ஏராளமாக உள்ளன.

அவற்றையெல்லாம் மறந்திருந்தாலும், மன்னித்திருந்தாலும், 2019 ல் ஈழத்தில், தமிழர்களை ஒட்டுமொத்தமாக சிங்கள ராணுவம் அழித்தொழிக்க பின்னணியில் இருந்து செயல்பட்டதற்கும், தேவைக்கு அதிகமான அதிநவீன போர் தளவாடங்களை இலங்கைக்கு அனுப்பி வைத்ததும், அன்றைக்கு மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசுதான் என்பதும், ராகுல்காந்தியின் தாய் சோனியாவின் கட்டளைகளுக்கு ஏற்ப, அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசுதான் என்பதையும், பத்தாண்டுகள் கடந்த நிலையிலும், தமிழ் ரத்தம் ஓடும் ஈழத்தின் சொந்தங்களான தமிழக மக்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள். அந்த கோபத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள், காங்கிரஸை எந்த காலத்திலும் மன்னிக்கவும் மாட்டார்கள்.

இப்படி, காங்கிரஸுக்கு ஆதரவு நிலைக்கு மேலாக, எதிர்ப்பு அலை, தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது என்பதை தெரிந்த பிறகும், தமிழகத்திற்கு வரும்போதெல்லாம், உண்மையாகவே விளிம்பு நிலை மக்களை நேசிக்கக் கூடிய மனிதராகவும், அடிதட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்ற சிந்தனையுள்ள அரசியல்வாதி தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே ராகுல்காந்தி, தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள மெனக்கெடுவதைப் பார்க்க முடிகிறது.

கடந்த ஜனவரியில் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை காண வந்த ராகுல்காந்தி, அதே இடத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார் என்பதை கேள்விபட்டு, எந்த பந்தாவும் பார்க்காமல், தன் அருகே அவரை அழைத்து அமர வைத்து நட்புணர்வோடு பேசிய காட்சியெல்லாம், மனிதநேயமிக்க மனிதராக, அல்லது ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்க துடிக்கும் அரசியல்வாதியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முனைப்புக் காட்டுகிறார், ராகுல்காந்தி என்றுதான் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.


அந்த நிகழ்வை தொடர்ந்து, காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கிராம பொங்கல் விழாவில், ஏழை எளிய மக்களோடும், நடுத்தர மக்களோடும் இரண்டற கலப்பதை விரும்பியதையும், மொழி பிரச்னை இருந்தபோதும், எவ்வளவு தூரம் உளப்பூர்வமாக ரசித்தார் என்பதையும் அவரது உடல்மொழி வெளிப்படுத்தியது.

அடுத்த கட்டமாக, தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக, மேற்கு மாவட்டங்களுக்கு வந்த போதும் சரி, நேற்று முன்தினம் இரண்டாவது முறையாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அவர் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையின் போதும் சரி, கிராமங்களில், சிறுசிறு நகரங்களில் நிலவும் பிரச்னைகளை காது கொடுத்து கேட்பதில் அதீத ஆர்வம் காட்டினார், ராகுல்காந்தி. கோவை, ஈரோடு மாவட்டங்களில் சிறு,குறு தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, கிராமத் தொழில்கள் நசிந்து வருவதற்கான காரணங்கள், தமிழகத்தின் பாரம்பரியமான வாழ்வியல் முறை என ஒவ்வொன்றுக்கும் செவி மடுத்த விதம், இதுவரை டெல்லியில் இருந்து தமிழகம் வந்த அரசியல்வாதிகளிடையே வித்தியாசமான அரசியல்வாதியாகதான், ராகுலை பார்க்க முடிகிறது என்கிறார்கள், திராவிட சிந்தாந்தவாதிகள்.


ராகுலைவிட அறிவிலும், சிந்தனையிலும் சிறந்த விளங்கிய, விளங்குகிற எண்ணற்ற தேசியத் தலைவர்கள் தமிழகத்திற்கு வந்திருக்கலாம், இனிமேலும் வரலாம். ஆனால், நடுத்தர மக்களின் மனங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுபவராக, அவர்களின் பார்வையில் பிரச்னைகளை அணுகக் கூடிய மனப்பக்குவதை பெருக்கி கொள்ள வேண்டும் என்ற துடிப்பும், ராகுலிடம் மிகுதியாக இருப்பதை பார்க்க முடிகிறது என்கிறார்கள் அவர்கள்.

கரூரில் கிராமத்து சமையல் குழுவினரோடு, அவர் உரையாடிய, உறவாடிய பாங்கை, அரசியலோடு பொருத்தி பார்ப்பது என்பது முட்டாள்தனம் என்கிறார்கள். தமிழக மக்களிடம் இருந்து அரசியல் பாடத்தை கற்றுக் கொள்வதை, அல்லது, பாசத்திற்கு, பண்பாட்டிற்கு முக்கியத்தும் கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மக்களின் தொன்மையான குடும்ப வாழ்க்கை முறையை, ராகுல்காந்தி பெரிதும் விரும்புகிறார், ரசிக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. மிகப்பெரிய செல்வாக்குமிக்க குடும்பத்தின் இளவரசனாக இருப்பதாக தன்பை பலர் மதிக்கிற போதும் தமிழகத்தில் உங்களில் ஒருவராக, சகோதரராக ஏற்றுக் கொள்ளுங்கள், ராகுல் என்ற தன்நிலையிலேயே பாருங்கள் இறங்கி வந்து சொல்கிற மனப்பான்மை, எத்தனை பெரிய குடும்பத்து வாரிசுகளுக்கு வரும் என்கிறார்கள் காங்கிரஸை இன்றும் வெறுத்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய பற்றாளர்கள்.

3 வது கட்டமாகவும் தேர்தல் பரப்புரைக்காவும் ராகுல்காந்தி தமிழகம் வரலாம். அவர் எத்தனை முறை வந்தாலும், தி.மு.க. கொடுக்கும் 30 சீட்டோ, அதற்கு மேலாகவோ கொடுத்தாலும், அதில் பாதியிடங்களில் காங்கிரஸ் வெற்றிபெறுவதென்பது, சந்தேகத்திற்குரிய ஒன்றுதான்.

ஆனால், தமிழகத்தில் காங்கிரஸுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது, திமுக எத்தனை தொகுதிகள் தரும், அதில் எத்தனை தொகுதிகளில் வெற்றிப் பெற்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்திற்கு செல்வார்கள் என்ற அரசியல் லாப நஷ்ட கணக்கெல்லாம் பார்க்காமல், மத்திய அரசின் விவசாய, தொழிலாளர், மக்கள் விரோதப் போக்கை மக்கள் மனங்களில் ஆழமாக பதிய வைக்க வேண்டும் என்பதற்காகதான், ராகுல்காந்தி ஊர்,ஊராக எளிய மனிதரைப் போல சுற்றி சுற்றி வந்து தேர்தல் பரப்புரையை மேற்கொண்டிருக்கிறார். இந்த இடத்தில்தான், அவரோடு, பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அரசியல் அடிப்படையில் பொருத்தி பார்க்க வேண்டும்.

பிப்ரவரி மாதத்தில், இரண்டு முறை பிரதமர் மோடி, தமிழகம் வந்தார். சென்னை மற்றும் கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இரண்டு விழாவிலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, சிறப்பாக, நேர்மையாக ஆட்சி நடத்துகிறது என்று மனதார பாராட்டு தெரிவிக்க முடியவில்லை. ஆனால், கோவையில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். தமிழகத்தில் இன்றைய நிலையில், காங்கிரஸைவிட பரிதாப நிலையில்தான் இருக்கிறது, பாஜக.

மத்திய அரசின் அதிகாரத்தை வைத்து அரசியல் ஆதாயத்தை, அதிமுக தோளில் ஏறி வேடடையாட நினைத்து செயலாற்றிக் கெண்டிருக்கிறார்கள், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்.
மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசை, அவர் உயிரோடு இருக்கும்போதே ஊழல் ஆட்சியென விமர்சனம் செய்தவர், இப்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷா. ஆனால், அன்றைக்கு அதிமுக அமைச்சர்களுக்கு எதிராக வருமான வரித்துறை சோதனையோ, தேர்தல் கமிஷனில் எந்தவொரு முறைகேடு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.

ஆனால், இன்றைககு முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அமைச்சர்கள் வேலுமணி, டாக்டர் விஜயபாஸ்கர், கே.டி.ராஜேந்திர பாலாஜி என பலருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு புகார்களும், வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்த வழக்கும் நீதிமன்றங்களிலும், மத்திய வருமான வரித்துறை அலுவலகங்களிலும் நிலுவையில் இருக்கின்றன. இப்படிபட்ட ஆட்சியைதான், விழுப்புரத்தில் நேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நல்ல ஆட்சி என்று பாராட்டு மழை பொழிகிறார்.

ராகுலை சின்ன பையன் என்று மோடியும், அமித்ஷாவும் கிண்டலடிப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டாலும்கூட, தேர்தல் களத்தில், இந்த நிமிடம் வரை திமுக.வுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று ராகுல்காந்தி கேட்கவில்லை. எடப்பாடி அரசையும் அவர் தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சனம் செய்யவில்லை. உங்களுக்கு இருக்கிற பதவி வெறி போல அவருக்கு இருப்பதாக தெரியவில்லை. 5 சதவிகித வாக்குகளை கூட தமிழகத்தில் இன்றைக்கும் பெற முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிற நிலையில், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற அதிகார வெறி ராகுலுக்கு இல்லை என்பதும் வெளிப்படையாக தெரிகிறது.

உங்கள் இருவரோடு ஒப்பிடும்போது, வயதில் இளையவராக இருந்தாலும்கூட, ராகுல்காந்தி, தன்னுடைய சிந்தனைகளால், எளிய மக்களின் உணர்வுகளை காதுகொடுத்து கேட்பதால், தமிழ் மண்ணை அந்த பண்பாட்டோடு காப்பாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டால், அவர் உங்கள் இருவரைவிட உயர்ந்தவராக காட்சியளிக்கிறார். அன்றாட வாழ்விற்கு போராடும் எளிய மக்களை ஏமாற்றி அரசியல் ஆதாயம் தேடாத அந்த நற்பண்பாலும், உங்களை விட ராகுல்காந்தி, அரசியலுக்கு, ஆட்சிக்கு தகுதியானவராகவே மிளிருகிறார்.

இன்னும் பத்தாண்டுகள் ஆனால்கூட அவர் பிரதமராக வர முடியாது என்பதை தெரிந்திருந்தும், அவர் பிரதமராக வர வேண்டும் என்ற ஆசைப்படுகிற, விருப்பத்தை அவர் முன்பே தெரிவிக்கிற மனஎழுச்சி மக்களிடம் இருப்பதை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை பார்ப்போர், மக்கள் பிரதமராகதான் ராகுலை பார்த்துக் கொண்டிருகிறார்கள்.

படை பரிவாரங்களோடு வரும் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரின் அரசியல் சதித்திட்டங்களை உடைக்க வேண்டும் என்றால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இப்போதிருக்கும் ஒரே கேடயம் ராகுல்காந்திதான். அவரின் தேர்தல் பரப்புரை, திமுக கூட்டணிக்கு பலம் சேர்க்கக் கூடியவைதான். அதை புரிந்து கொண்டு, காங்கிரஸுக்கு உடனடியாக தொகுதிகளை ஒதுக்கிக் கொடுப்பதுடன், மூன்றாம் கட்டமாக தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரும் ராகுலை மரியாதை நிமித்தமாவது திமுக மாவட்டச் செயலாளர்கள் அல்லது, இரண்டாம் கட்ட திமுக தலைவர்கள் அவரை வரவேற்பது, கூட்டணி தர்மத்திற்கு உகந்ததாக இருக்கும்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால், கூட்டணியில் உள்ள தேசிய கட்சியின் தலைவர் ஒருவர், தன்னந்தனியாக வந்து தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள ஒருபோதும் அனுமதித்திருக்கமாட்டார். சிறு குச்சியும் பல் குத்த உதவும் என்ற பழமொழிக்கு ஏற்ப, தேர்தல் வியூகங்களை விரைவாக அமைத்து, கூட்டணி கட்சிகளோடு இணைந்தே தேர்தல் பிரசாரத்தை கலைஞர் கருணாநிதி முன்னெடுத்திருப்பார்.

அவரின் மகன் என்ற அடையாளத்தோடு , அவரின் வழியில் நடப்பதாக கூறிக்கொள்ளும் மு.க.ஸ்டாலின், கல் போன்ற இறுக்கமாக இருப்பதைவிட, கொஞ்சம் இறங்கி வந்து ராகுல்காந்தியோடு நட்பு பாராட்ட வேண்டும்.இணைந்து தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் காங்கிரஸ், தி.மு.க. தொண்டர்களிடையே புதிய எழுச்சியும், உற்சாகமும் ஏற்படும் என்று கூறுகிறார்கள் கிராம அளவிலான திமுக தொண்டர்கள். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா மு.க.ஸ்டாலின்..