Sun. May 5th, 2024

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக.வும் திமுக.வும் சமபலத்தில் களத்தை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு கட்சிகளும் தலா 170 தொகுதிகளில் குறியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும்கட்சியான அதிமுக.வும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவும், தத்தம் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க, துரிதமாக செயல்பட்டு வருகின்றன.

தி.மு.க.வை முந்திக் கொண்டு, அதிமுக தனது கூட்டணியில் பா.ம.க.வை உறுதி செய்ததுடன், அக்கட்சிக்கு 23 தொகுதிகளை வழங்கி, பிள்ளையார் சுழியை முதலாவதாக போட்டிருக்கிறது. அடுத்தகட்டமாக தே.மு.தி.க.வுடனும் ஓரிரு நாள்களில் தொகுதி பங்கீடு முடிந்துவிடும் என்கிறார்கள். அக்கட்சிக்கு அதிகபட்சமாக 15 தொகுதிகள்தான் வழங்கப்படும் என மணியான அமைச்சர்கள் உறுதிபட தெரிவித்து விட்டார்களாம்.

இதேபோல, பாஜக.வுடனான தொகுதி பங்கீடும் இன்றிரவு அல்லது நாளைக்குள் உடன்பாடு எட்டப்பட்டுவிடுமாம். தேமுதிக.வைப் போல பாஜக.வுக்கும் 15 தொகுதிகள்தான் என்பதில் அதிமுக தலைமை உறுதியாக இருக்கிறதாம். டெல்லி மேலிடத்தில் இருந்து அழுத்தம் வந்தால் கூடுதலாக ஒன்றிரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்கிறாகள், அதிமுக அமைச்சர்களுக்கு நெருக்கமான பிரமுகர் ஒருவர்.

ஜி.கே.வாசனுக்கு 5 தொகுதிகள் என தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 176 தொகுதிகளை கைவசம் வைத்துக் கொண்டு, எஞ்சிய 6 தொகுதிகளை புதிய தமிழகம், ஜான் பாண்டியனின் கட்சி, இஸ்லாமிய கட்சிகள் கூட்டணியில் சேர முன்வந்தால், அவர்களுக்கு பிரித்து தரும் யோசனையில் இருக்கிறதாம் அதிமுக தலைமை. இவை தவிர, கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்றவர்களுக்கு,இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கலாமா என்பது குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம் அதிமுக தலைமை.

பாஜக மற்றும் தேமுதிக.வுடனான தொகுதி பங்கீடு முடிந்தவுடனேயே, அதிமுக உள்பட கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதி விவரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட அதிமுக தயாராகி வருகிறதாம்.

இதேபோல, திமுகவும், தனது கூட்டணி கட்சிகளுக்கு 64 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, 170 தொகுதிகளில் களம் காண திட்டமிட்டுள்ளதாம்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் 27, (எம்.பி. தொகுதி அடிப்படையில் 9/3) இந்திய கம்யூனிஸ்ட் 8, மார்க்சிஸ்ட் 8, மதிமுக 8, விசிக 5 என்ற எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யலாம் என திமுக தேர்தல் குழு, அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலோசனைகளை கூறியுள்ளதாம். மேலும், திமுக 170 தொகுதிகளில் போட்டியிடுவது என்பதில் உறுதியாக இருப்பதால், இந்திய யூனியன் முஸ்லீம் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொ.ம.தே.க 2, தமிழக வாழ்வுரிமை 2 இடம் என தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய முன்வந்திருப்பதாகவும் கூறுகிறார்கள், இரண்டாம் கட்ட திமுக தலைவர்களுக்கு நெருக்கமான நிர்வாகிகள்.

அ.தி.மு.க மற்றும் தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் சம பலத்தில் தேர்தல் களத்தை சந்திக்க முடிவெடுத்திருப்பதால், போட்டி கடுமையாக இருக்கும் என்றும் தேர்தல் பரப்புரையும் அனல் பறக்கும்.