ஆளும்கட்சியோடு கூட்டணியில் இருந்த நடிகர் சரத்குமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு வி.கே.சசிகலாவை, தனது துணைவியார் ராதிகா சகிதமாக சென்று பார்த்து ஆலோசனை நடத்தி விட்டு திரும்பினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நட்பு ரீதியிலான சந்திப்புதானே தவிர, அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்று அழுத்தம் திருத்தமாக பேட்டியளித்தார். ஆனால், இரண்டு நாட்கள் ஆகவில்லை. நடிகர் சரத்குமாரின் வண்டி ஆழ்வார்ப்பேட்டையை நோக்கி சென்றுவிட்டது.
மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவர் நடிகர் கமல்ஹாசனுடன் கைகோர்த்துவிட்டார் நடிகர் சரத்குமார். இரண்டு நாளில் கூட்டணி மாறும் ஞானேதயம், சசிகலாவுடனான சந்திப்புக்குப் பிறகுதான் உதயமானது என்கிறார்கள், ச.ம.க. நிர்வாகிகள். சசிகலாவின் தொலைநோக்கு பார்வையும், நடிகர் கமல்ஹாசனின் தொலைநோக்குப் பார்வையும், ரயில் தண்டவாளம் போல, இணைந்தே போகப் போகிறது என்கிறார்கள், இருவருக்கும் நெருக்கமான தொழில் அதிபர்கள்.
அ.தி.மு.க. வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் முதல்வராகி விடக் கூடாது என்பதுதான் சசிகலாவின் சிங்கிள் பாயின்ட் அஜெண்டா. அப்படியொரு விசேஷ குறிக்கோள் எல்லாம் நடிகர் கமல்ஹாசனுக்கு இல்லை. திருமண விழாவாக இருந்தாலும்,துக்க வீடாக இருந்தாலும் தனக்குதான் மாலை விழ வேண்டும் என்ற சினிமா ஹீரோவுக்கு இருக்கும் அதே சிந்தனைதான், அரசியல்வாதியான பிறகும் கமல்ஹாசனுக்கு இருக்கிறது என்கிறார்கள் ம.நீ.ம., நிர்வாகிகள்.
இன்றைய தேர்தல் களத்தில், தி.மு.க.வும் வேண்டாம், அ.தி.மு.க.வும் வேண்டாம் என்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த மனநிலை உள்ளவர்கள், கடந்த தேர்ல்களில் நாம் தமிழர் கட்சி சீமானை பெரும்பான்மையாக ஆதரித்தனர். அதற்கடுத்துதான் கமல்ஹாசன் உள்ளிட்ட சில்வண்டு கட்சிகள் இருந்தன. ஆனால், இன்றைய கள நிலவரம், நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமானை மிஞ்சிவிட்டார் கமல்ஹாசன் என்பதும், மாற்றம் வரட்டுமே என்ற மனப்பான்மையில் உள்ளவர்களால், மக்கள் நீதி மய்யத்திற்கு 5 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதத்திற்குள்ளாக வாக்கு வங்கி உயர்ந்துக் கொண்டே வருகிறது என்கிறார்கள், களத்தில் கருத்துக் கணிப்பு மேற்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள்.
அந்த அடிப்படையில், கமல்ஹாசனுக்கு 8 சதவிகித வாக்குகள் வரும் சட்டமன்றத் தேர்தலில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், நடிகர் சரத்குமார், ம.நீ.ம. த்துடன் இணைந்துள்ளார். அவருக்கென்று தனிப்பட்ட வாக்கு வங்கி ஒரு சதவிகிதம் கூட இல்லையென்றாலும், சசிகலாவுக்கு நன்றிக் கடன் செலுத்தும் விதமாக, புதிய கூட்டணி ஆடையை அணிந்துக் கொண்டிருக்கிறார், நடிகர் சரத்குமார். அதற்கான விலைதான் எவ்வளவு ? என்று தெரியவில்லை.
சரத்குமாரை அடுத்து, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் கூட், தங்களின் எதிர்பார்ப்புக்கு குறைவாக தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டால், கமல்ஹாசன் பக்கம் தாவக் கூடும் என்கிறார்கள் மூத்த ஊடவியலாளர்கள். கமல்ஹாசன் பக்கம் செல்ல தயங்கும் கட்சிகளுக்கு நம்பிக்கையையும், தேவையான உதவிகளையும் செய்யக் கூட தயாராகிவிட்டாராம் சசிகலா. அதில் உண்மை இருக்கிறது என்று கூறும் மூத்த ஊடகவியலாளர்கள், மறைந்த செல்வி ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது அவரை கடுமையாக எதிர்த்த , விமர்சனம் செய்த மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையா, சசிகலாவை, சின்னமா என்று வாய் மணக்க அழைத்ததுடன், அவருக்கு ஆதரவாகவும் பேசி வரும் நிலையில்,அவரும் கமல்ஹாசனுடன் இணைந்திருப்பதை, திரைமறைவாக நடக்கும் அரசியல் நகர்வோடு பொருத்திப் பார்த்தால், எடப்பாடியும் முதல்வராகவிடக் கூடாது, ஸ்டாலினும் முதல்வராக பதவியேற்றுவிடக் கூடாது என்று கங்கணம் கட்டியுள்ளவர்களின் ஸ்கீரின் பிளே பின்னணியில் இருப்பதை யூகித்து கொள்ள முடியும் என்கிறார்கள், அனுபவமிக்க ஊடகவியலாளர்கள்.
ஆக, மொத்தத்தில், அ.தி.மு.க. வுக்கு எதிரான அதிருப்தி ஓட்டுகள், தி.மு.க. பக்கம் சாய்வதை தடுத்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைமையிலான கூட்டணிக்கு திருப்பி விடுவதுதான், சசிகலா, டிடிவி.தினகரன், கமல்ஹாசன் ஆகியோரை உள்ளடக்கிய மூவர் கூட்டணியின் தேர்தல் அஜென்டா என்கிறார்கள், அரசியல் கள ஆய்வாளர்கள்.
நடிகர் கமல்ஹாசனைப் பொறுத்தவரை, கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த கலவை நான், வெளியே மிருகம், உள்ளே கடவுள், விளங்கா முடியா கவிதை நான் என்று அவரின் ஆளவந்தான் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலைப்போல, எப்போதுமே புரியாத புதிர்தான். ரைட் இன்டிகேட்டர் போட்டு லெப்டில் செல்கிற குணம் கொண்ட கமல்ஹாசன், காங்கிரஸுக்கு கடவுளாகி பாஜக.வுக்கு மிருகமாகப் போகிறாரா அல்லது பாஜக.வுக்கு கடவுளாகி, காங்கிரஸுக்கு மிருகமாகப் போகிறாரா என்பதுதான் இன்றைய அரசியல் களத்தில் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது, என்கிறார்கள் அவரது அரசியல் பயணத்தை கூர்ந்து கவனித்து வரும் மூத்த ஊடகவியலாளர்கள்.
தனக்கு எதிராக அணி திரள்வோரின் வியூகங்களையும், எடப்பாடி பழனிசாமியின் அதிரடி அறிவிப்புகள், சசிகலா தினகரனின் காய்நகர்த்தல்களை எல்லாம் நாள்தோறும் பார்த்துக் கொண்டிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது தலைமையிலான கூட்டணியில் உள்ள எந்தவொரு கட்சியும், வெளியேறி செல்ல, இன்றைய சூழ்நிலையில் அனுமதிக்க மாட்டார் என்கிறார்கள், அண்ணா அறிவாலயத்தின் மூதத நிர்வாகிகள்.
தி.மு.க. கூட்டணி ஸ்டராங்காக இருப்பதால், இன்னும் சொல்லப்போனால், பாஜக.வுக்கு எதிரான மனநிலையில் உறுதியாக உள்ள கட்சிகள் எல்லாம் ஓர் அணியில் திரண்டிருப்பதால், அந்த கூட்டணியில் பெரிதாக சலசலப்பு ஏற்படுத்த முடியாது என்பதால், டெல்லி பாஜக எடுத்துள்ள ஆயுதம்தான், கமல்ஹாசனா? தமிழ்நாட்டு ஓவைசி கமல்ஹாசன்தானா?இ.பி.எஸ், மு.க.ஸ்டாலின் போல தமிழக அரசியல் களத்தில் தானும் பிக் பாஸ்தான் என்பதை நிரூபிக்க அணி சேர்க்க தயராகிவிட்டாரா கமல் ?என கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார்கள், திராவிட தலைவர்கள்.
தி.மு.க.வை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க டெல்லி பாஜக, என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராகவுள்ளது போல, எடப்பாடி பழனிசாமி, மீண்டும் முதல்வராகிவிடக் கூடாது என்பதற்காக எந்த எல்லைக்கும் போக துணிச்சல் உள்ளவர்கள்தான், சசிகலாவும் தினகரனும். எதிரும் புதிருமாக இருந்தாலும் பொது எதிரி என்ற ஒற்றைப் புள்ளியில், கமல்ஹாசன் அணி வலுப் பெற்று, பாஜக.வின் B TEAM ஆக களம் காண்பதற்கு மறைமுகமாக மட்டுமல்ல, நேரடியாகவும் ஆதரவு கொடுக்க தயங்க மாட்டார்கள் சசிகலாவும் தினகரனும் என்கிறார்கள், அண்மைக்கால அரசியல் நகர்வுகளை அலசி வரும் அரசியல் விமர்சகர்கள்.
அடுத்தடுத்த நாட்களில் தமிழக அரசியலில என்ன கூத்தெல்லாம் நடக்கப் போகிறதோ…
என்னமோபோடா மாதவா…