Mon. Apr 29th, 2024


தாரை வே இளமதி., சிறப்புச் செய்தியாளர்..

ஆளும்கட்சியான திமுகவிலும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலும்தான், தலைவர் பதவிக்கு வருபவர்களுக்கு எந்தவொரு தியாகமும், ஆளுமைத்திறனும் தேவையில்லை என்ற நிலைமை, அண்மைக்காலத்தில் ஏற்பட்டுவிட்டது. திராவிட கட்சிகளுக்கு இணையாகவே, அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியிலும் 2014க்கு முன்பே, அரசியல் வாழ்க்கையில் அரிச்சுவடி படித்தவர்களும் கூட உச்சப்பட்ச பதவிக்கு வரலாம் என்று 2014 நாடாளுமன்றத் தேர்தல் மூலம் நிரூபிக்கப்பட்டுவிட்டது.


அதுபோன்ற துரதிர்ஷ்டம், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்பட்டிருப்பதுதான், தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்த காங்கிரஸ் தொண்டர்களிடம், நிர்வாகிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம் தொடர்பாக பேச்சு எழுந்தபோதே, 40 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியிலேயே பயணத்தை தொடர்பவராகவும், சிறந்த சிந்தனையாளர், சிறந்த சட்டப்பேரவை ஆளுமை, விசுவாசமிக்க நிர்வாகி என்ற பாராட்டுகளைப் பெற்ற பீட்டர் அல்போன்ஸ் முதன்மையான இடத்தில் இருந்தார்.


ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் அழுத்தமான பரிந்துரையின் பேரில், அவரது தீவிர ஆதரவாளராக வெளிப்படுத்திய கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். 2019 ஆம் ஆண்டிலேயே பீட்டர் அல்போன்ஸ் அடைந்த மனத்துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று அவரது ஆதரவாளர்கள் குமறுகிறார்கள். தலைவர் கனவில் இல்லாதது போதும், டெல்லி மூத்த பத்திரிகையாளர் ராஜகோபால், அடுத்த தலைவர் பீட்டர் தான் என்று கூறி முன்கூட்டியே தெரிவித்த நல்வாழ்த்துக்களை, வேதவாக்காக எடுத்துக்கொண்டிருந்த பீட்டரின் விசுவாசிகளும் கூட ரத்தக் கண்ணீர் வடித்தார்கள்.


1996ல் தமிழ்நாடு காங்கிரஸை, பாதிக்கு மேல் உடைத்து, தமிழ் மாநில காங்கிரஸை மறைந்த தலைவர் ஜி.கே.மூப்பனார் உருவாக்கியபோதே, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரும்பான்மையான தொண்டர்கள் மூப்பனார் தலைமையை ஏற்றுக்கொண்டார்கள். அன்றைய தேதியில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில், நீரழிவுக்கு ஆட்பட்ட முன்னாள் தலைவர்கள், முன்னாள் எம்பிக்கள் உள்ளிட்டோர் விரல் விட்டு எண்ணும் அளவுக்குதான் காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த பலமும் அமைந்திருந்தது.


எலும்புக்கூடாக காட்சியளித்த காங்கிரஸ் கட்சிக்கு, முழுமையான உயிரோட்டம் கொடுத்தவர் என்று சொல்லும் அளவுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனனின் அதிரடி செயல்பாடுகள்தான் அமைந்திருந்தது. அவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராக நியமிக்கப்பட்ட போதுதான், கல்லறையில் புதைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியே உயிர்த்தெழுந்து, தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.


ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு முன்பும், பின்பும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராக நியமனம் செய்யப்பட்டவர்கள் எல்லாம், வந்தார்கள்..சென்றார்கள்..என்ற கணக்கில்தான் வந்தது. தற்போதைய காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வரையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தவிர்த்து, எஞ்சியவர்கள் தலைவர்களாக பதவி வகித்த காலத்தில், சத்தியமூர்த்தி பவன், வாகனங்கள் நிறுத்தும் இடமாக காட்சியளித்தது.


தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதுமே காங்கிரஸ் கட்சி தேய்பிறையாக கரைந்து கொண்டிருக்கும் நேரத்தில், ஒற்றை மனிதராக ராகுல்காந்தி, நாடு முழுவதும் நடைப்பயணத்தை மேற்கொண்டு, இந்திய தேசிய காங்கிரஸுக்கு புது ரத்தம் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் மீது இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கை ஏற்படும் நேரத்தில், காங்கிரஸில் இருந்து பெரும் தலைவர்கள் வெளியேறி பாரதிய ஜனதாவில் சேர்ந்து கொண்டிருப்பதை பார்த்து, பில்டிங் ஸ்டராங்..பேஸ்மென்ட் வீக் என்ற கணக்காக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியே தள்ளாடிக் கொண்டிருப்பதை பார்த்து பரிதாபப்படும் நேரத்தில், தமிழக ஆளும்கட்சியான திமுகவின் தயவால் உயிர்ப்போடு வலம் வரும் காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டுமொத்தமாக மூடுவிழா நடத்தும் வகையில்தான் செல்வப் பெருந்தகையின் நியமனம் அமைந்திருக்கிறது என்று விமர்சனம் செய்கிறார்கள்.


கடந்த ஓராண்டுக்கு மேலாகவே, கே.எஸ்.அழகிரி மாற்றப்படுவார் என்ற பேச்சு அடிபட்டு வந்த நிலையில், தலைவர் பதவியை கைப்பற்றும் முயற்சியில் கிருஷ்ணகிரி எம்பி மருத்துவர் செல்லகுமார், கரூர் எம்பி ஜோதிமணி, சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, ரூபி மனோகரன் எம்எல்ஏ ஆகியோர் முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியானது. இந்தப் பட்டியலிலும் கூட, மகாத்மா காந்தியின் போதனைகளை முழுமையாக உள்வாங்கியவரும், காங்கிரஸ் சித்தாந்தத்தில் ஊறிப்போயிருக்கும் பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா உள்ளிட்ட மூத்த தலைவர்களின் பலரின் பெயரும் இடம் பெறவில்லை என்பதுதான் காங்கிரஸ் தொண்டர்களின் துயரத்தை அதிகமாக்கியது.


தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு அடிக்கடி பறந்த செல்வப்பெருந்தகை எம்.எம்.ஏ., நினைத்ததை சாதித்து காட்டும் ஆற்றல் தனக்கு இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பரிந்துரையை செல்லாக்காசாக்கிவிட்டு, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் பதவியை எப்படி கைப்பற்றினாரோ, அதேபோலவே, செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியையும் கைப்பற்றியிருக்கிறார் என்றும் உண்மையான விசுவாசத்திற்கும் தியாகத்திற்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் மரியாதையே கிடையாது என்றும் பொங்குகிறார்கள் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகள்.


செல்வப்பெருந்தகை என்ற தனிநபருக்கு கிடைத்திருக்கும் செல்வாக்கு மீது பொறாமை படாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள், செல்வப்பெருந்தகை கடந்து வந்த அரசியல் பாதையும், மகாத்மா காந்தியின் தத்துவங்களுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக எதிர்திசையில் பயணித்து வந்ததும் தான், செல்வப்பெருந்தகையை, காங்கிரஸ் தலைவராகக் நினைத்து கூட பார்க்க முடியாது என்று குமறுகிறார்கள், மாநிலம் முழுவதும் மாவட்ட அளவில் பதவிகளை வகிக்கும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள்.


புரட்சி பாரதத்தில் இருந்து தொடங்கி, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சி என நீண்ட அரசியல் பயணம், கடைசியாக சங்கமித்தது காங்கிரஸ் கட்சி என்றாலும் கூட, காந்திய வழியில் பயணித்து, காமராஜர் பாதையில் கொள்கைகளை முழங்கி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உயரத்தை எட்டியவர் செல்வப்பெருந்தகை என்று அவரது மனசாட்சியே ஒப்புக்கொள்ளாது.


தலைவர் பதவி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, தனது நியமனம் மூலம் சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று பெருமிதமாக பேட்டியளித்தார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இன்று சமூக நீதிக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது என்றால், அது தலித் சமுதாயத்திற்கு எதிரான பாதிப்பை விட, சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குதான் அதிகமான சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


இப்படிப்பட்ட நேரத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்கு 100 க்கு ஆயிரம் சதவீதம் பொருத்தமானவராக பீட்டர் அல்போன்ஸ் மட்டுமே தகுதியுடையவராக இருப்பார். பீட்டர் அல்போன்ஸின் கடந்த கால அரசியல் வரலாற்றை புரட்டினால், திராவிட இயக்கங்களின் ஆளுமைமிகுந்த தலைவர்களாக திகழ்ந்த மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் வாழ்ந்த காலத்திலேயே திராவிட இயக்க ஆட்சிக் காலங்களில் தமிழ்நாடு பல பெருமைகளை இழந்துள்ளது என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டியவர் பீட்டர் அல்போன்ஸ் என்பது சட்டப்பேரவை குறிப்புகளில் பதிவாகியிருக்கிறது.

கலைஞருக்கு எதிராவும் செல்வி ஜெலலிதாவுக்கு எதிராகவும் சட்டப்பேரவையில் நேருக்கு நேர் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தவர் என்று பீட்டர் அல்போன்ஸ்ஸை பிடிக்காத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூட மனம் திறந்து பேசிய தருணங்கள் உண்டு.
பீட்டர் அல்போன்ஸ்ஸின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சி அங்கீகரிக்காதது போதும், திராவிட மாடல் அரசியலை முன்னெடுத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பதவியில் அமர்த்தி பீட்டருக்கு புகழைத் தேடித் தந்துள்ளார்.


இன்றைய தேதியில், திமுக மீது என்னென்ன குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறதோ.. வாரிசு அரசியல், குடும்ப அரசியல், ஊழல் கட்சி என அனைத்து குற்றச்சாட்டுகளையும் காங்கிரஸ் கட்சியும் சுமந்து கொண்டே இருக்கிறது.
அந்த வகையில், பீட்டர் அல்போன்ஸைப் பொறுத்தவரை இன்றைய தேதியில், காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவிற்கும் இடையே மனம் ஒப்புக்கொள்ளாத அளவுக்கு எந்தவொரு கொள்கை முரண்பாடுகளும் இல்லை.

செல்வப் பெருந்தகையை, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்துவிட்ட நிலையில், செல்வப் பெருந்தகைக்கு வாழ்க கோஷம் போடுவதால், எம்பி ஆகவோ, மத்திய அமைச்சராகவோ பீட்டர் அல்போன்ஸ் அகில இந்திய அளவில் செல்வாக்கு பெறுவதற்கான வாய்ப்பு, நெல்முனையளவு கூட இல்லை. அதற்குப் பதிலாக, முதல்வர் மு.க.ஸ்டாலினோடும், 2 ஆம் கட்டத் தலைவர்களுடன் உறவாடி வருவதைப் போல, உதயநிதி ஸ்டாலினையும் மனப்பூர்வமாக வாழ்த்தத் தொடங்கினால், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலேயே எம்பி ஆவதற்கும் அல்லது 2026 ல் திமுக வேட்பாளராக தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்து, அமைச்சராக பவனி வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது என்கிறார்கள் அவரது விசுவாசிகள்.


பீட்டர் அல்போன்ஸ்ஸுக்கு தன்மானமும், சுயமரியாதையும் அதிகமாக இருந்தால், கதர் சட்டையை தூக்கி எறிந்துவிட்டு, கருப்பு, சிவப்பு வண்ண கரைவேட்டியை கட்டுவதற்கான அருமையான தருணம் இப்போதுதான் உருவாகி உள்ளது என்று உறுதிபட கூறுகிறார்கள் தென்மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள்.

தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமின்றி தலித் அரசியலிலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக களமாடி வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் ஏற்படுத்திவிட முடியாத மாற்றத்தை காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் செல்வப் பெருந்தகையால் நிகழ்த்தி காட்டி விட முடியுமா என்று ஆவேசமடைகிறார்கள் தமிழக காங்கிரஸ் பெண் தலைவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *