Mon. Apr 29th, 2024

ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மிகுந்த பனிவு காட்டி வழியனுப்பி வைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், செய்தித்துறை இயக்குனர் மோகன் ஐஏஎஸ் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் நடைபெற்ற பணிமாறுதல் என்பதால், பொதுதளங்களில் பெரிய அளவில் விவாதப் பொருளாக மாறவில்லை என்ற போதிலும், மோகன் ஐஏஎஸ்ஸுக்கு எதிராக ஊழல் புகார்கள் அடுக்கடுக்காக கூறப்பட்டதும், நிர்வாகச் சீர்கேடுகளை தவிர்த்து, ஐஏஎஸ் பதவிக்குரிய கண்ணியத்துடன் நடந்து கொள்வில்லை என்பதுமே, மோகன் ஐஏஎஸ் அதிரடியாக தூக்கியடிக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள மர்மம் என்று திகில் கிளப்புகிறார்கள் செய்தித்துறையில் நீண்ட கால அனுபவம் பெற்ற உயர் அதிகாரிகள்.

டி.மோகன் ஐஏஎஸ் அதிகாரி பணியிட மாற்றத்தின் பின்னணியில் உள்ள மர்மத்தை விரிவாக பார்ப்போம்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, 33 மாதங்களில் தமிழ்நாடு அரசின் செய்தித்துறையின் இயக்குனர் பதவியில் இருமுறை நடைபெற்றுள்ள பணியிட மாற்றம் பத்திரிகையாளர் உலகத்தை கடந்து தலைமைச் செயலகத்திலும் சூட்டை கிளப்பியிருக்கிறது.
2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரியணையில் அமர்ந்த போது, செய்தித்துறையின் இயக்குனராக நியமிக்கப்பட்ட முனைவர் வீ.ப.ஜெயசீலன் ஐஏஎஸ் மீது, ஊடகத்துறையினர் பார்வை அழுத்தமாக பதிந்தது. காரணம், இளம் வயது ஐஏஎஸ் அதிகாரியான ஜெயசீலனுக்கு, நிர்வாகத்துறையில் போதுமான அனுபவம் இல்லாத போதும், அனுபவம் மிகுந்த உயர் ஐஏஎஸ் அதிகாரிக்குரிய பதவியில் ஜெயசீலன் ஐஏஎஸ் எப்படி நியமனம் செய்யப்பட்டார் என்ற கேள்வி, ஊடகத்துறையினரால் மட்டுமல்ல, அனுபவம் மிகுந்த தலைமைச் செயலக அதிகாரிகளிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


ஊடகத்துறையினர், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோரின் கண் பார்வையில் விழுந்த ஜெயசீலன் ஐஏஎஸ், செய்தித்துறை இயக்குனராக பதவி வகித்த 20 மாத காலத்தில், மின்னலைப்போல பாய்ச்சல் காட்டிய சமூக ஊடகங்கள் , அதிகளவு தாக்கத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்த தொடங்கியிருந்தது. சமூக ஊடகங்களுக்கு சவால்விடும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்பான செய்திகளையும், தமிழ்நாடு அரசின் நிர்வாகச் சிறப்பையும் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் அளவுக்கு குறுகிய காலத்திலேயே தமிழ்நாடு அரசின் செய்தித்துறை உத்வேகம் அடைந்தது.
நவீன தொழில் நுட்பங்களை உள்வாங்கி, செய்தித்துறை அலுவலர்கள் விறுவிறுப்பாக பணியாற்றிய அதேநேரத்திலேயே, இயக்குனர் ஜெயசீலன் ஐஏஎஸ், நிர்வாக நடவடிக்கைகளில் அராஜகமாக நடந்து கொள்கிறார் என்றும், அப்போது கூடுதல் இயக்குனர் பதவியில் இருந்த அம்பலவாணனின் தவறான ஆலோசனைகளின் பேரில் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கிறார் என்ற முணுமுணுப்புகளும் ஒட்டுமொத்த செய்தித்துறையில் பரவலாக எழுந்தது.

ஜெயசீலன் ஐஏஎஸ்ஸுக்கு எதிராக பிஆர்ஓ என்று சொல்லப்படும் மக்கள் தொடர்பு அலுவலர் முதல், உதவி இயக்குனர், துணை இயக்குனர், இணை இயக்குனர், கூடுதல் இயக்குனர் என செய்தித்துறையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக போர்க்கொடி தூக்கினார்கள். மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியம் உள்பட முதல்வருக்கு மிகவும் நெருக்கமான அமைச்சர்களின் பரிந்துரைகளை கூட ஜெயசீலன் ஐஏஎஸ் உதாசீனப்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டும், முதல் அமைச்சர் அலுவலகத்தில் சூட்டை கிளப்பியது.

ஜெயசீலன் ஐஏஎஸ்ஸின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு உடந்தையாக இருப்பவர் கூடுதல் இயக்குனர் அம்பலவாணன்தான் என்று புகார் தெரிவித்த செய்தித்துறை அதிகாரிகள், இருவரும் கூட்டணி அமைத்து திமுக ஆதரவு செய்தித்துறை அலுவலர்களை குறி வைத்து பழிவாங்குகிறார்கள். முந்தைய அதிமுக ஆட்சியில் கூடுதல் இயக்குனராக பணியாற்றிய எழிலகனை விட மிகவும் மோசமாக, இருவரின் நடவடிக்கைகளும் இருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் நேரடியாகவே முறையிட்டனர்.

தலைமைச் செயலகம் முதல் மாவட்ட தலைநகரங்களில் பணியாற்றிய மக்கள் தொடர்பு அலுவலர்கள் வரை அனைவருமே ஜெயசீலன் ஐஏஎஸ் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியதை அடுத்து, 20 மாதங்களிலேயே செய்தித்துறையின் இயக்குனர் பதவியில் இருந்து முனவைர் வீ.ப. ஜெயசீலன் ஐஏஎஸ் அதிரடியாக மாற்றப்பட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய மோகன் ஐஏஎஸ், 2023 ஜனவரி 30 ம் தேதியன்று செய்தித்துறை இயக்குனராக வீ.ப.ஜெயசீலன் ஐஏஎஸ்ஸுக்கு பதிலாக நியமனம் செய்யப்பட்டார். நேரடி ஐஏஎஸ் அதிகாரி இல்லை என்ற போதும், அரசுப் பணியில் படிப்படியாக பதவி உயர்வு பெற்று ஐஏஎஸ் பதவிக்குரிய அந்தஸ்தை பெற்றவர் மோகன் என்பதால், அவரின் நீண்ட கால அனுபவம், செய்தித்துறையை மேலும் மேலும் பொலிவு படுத்தும் என்று நம்பினார்கள் அனுபவம் மிகுந்த ஊடகவியலாளர்கள்.

இயக்குனர் பதவியில் அமர்ந்தவுடன் சில மாதங்கள் மட்டுமே ஐஏஎஸ் பதவிக்குரிய கண்ணியத்துடன் இயக்குனர் மோகன் ஐஏஎஸ் நடந்து கொண்டார் என்றும் அதற்குப் பின்பு அடுத்தடுத்த மாதங்களில் தனது சுயரூபத்தை வெளிப்படுத்தியதைப் பார்த்து, ஒட்டுமொத்த செய்தித்துறையும் அதிர்ந்து போய்விட்டது என்கிறார்கள் தலைமைச் செயலக அலுவலர்கள்.
மோகன் ஐஏஎஸ்ஸுக்கு முன்பு பதவியில் இருந்த முனைவர் வீ.ப.ஜெயசீலன் ஐஏஎஸ்ஸே பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு அதிகமாக கெட்ட பெயரை வாங்கிக் கட்டிக் கொண்டார் மோகன் ஐஏஎஸ்.


செய்தித்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டங்களில், இணை இயக்குனர் பதவிக்குரிய அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதுடன், அநாகரிகமான வார்த்தைகளை வெளிப்படுத்தியதால், மோகன் ஐஏஎஸ் மீது ஒட்டுமொத்த செய்தித்துறை பணியாளர்களும் கோபத்தை வெளிப்படுத்த தொடங்கினார்கள். செய்தித்துறைக்கு குறைந்தளவுதான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்ற போதிலும், நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் விளம்பரங்களுக்கு உரிய கமிஷன் தொகையை, அந்தந்த நிறுவன உரிமையாளர்களிடம் மோகன் ஐஏஎஸ்ஸே நேரிடையாக பேசி, லஞ்சமாக பெற்றார் என்பதும் துறை ரீதியான பதவி உயர்வில் செய்தித்துறை அலுவலர்களிடம் லஞ்சம் பெற்றார் என்றெல்லாம் அணுகுண்டுகளை தூக்கிப் போட்டு அதிர வைத்தார்கள் செய்தித்துறை பணியாளர்கள்.


இயக்குனர் பதவிக்குரிய கண்ணியத்தை காற்றில் பறக்கவிட்டதுடன், லஞ்சப் புகாரிலும் மோகன் ஐஏஎஸ் சிக்கிக்கொண்டது தொடர்பாக விசாரணை நடத்திய முதல்வரின் அலுவலகச் செயலாளர்கள், திராவிட மாடல் ஆட்சிக்கே மோகன் ஐஏஎஸ் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார் என்று நொந்து கொண்டிருக்கிறார்கள்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் மட்டுமே மோகன் ஐஏஎஸ்ஸுக்கு எதிராக ஊழல் புகார்கள் றெக்கை கட்டி பறந்த நேரத்தில், மாவட்டங்களில் நடைபெறும் அரசு பொருட்காட்சிகளில், அரங்குகள் அமைப்பதற்கும் கறாராக கமிஷன் வசூலிக்கும் மோகன் ஐஏஎஸ்ஸின் வேகத்தைப் பார்த்து மக்கள் தொடர்பு அலுவலர்கள் அச்சமடைந்தார்கள்.

ஊழல் தொடர்பாக விசாரணை நடைபெற்றால், கீழ்நிலை அதிகாரிகளான தங்கள் பதவிக்கே ஆபத்து வந்துவிடும் என்று பயந்து போன மக்கள் தொடர்பு அலுவலர்கள், அவரவருக்கு உரிய வழிகளில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு புகார் மனுக்களை அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மோகன் ஐஏஎஸ்ஸுக்கு எதிராக லஞ்ச புகார்கள் குவிந்ததைப் பார்த்து, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினே அதிர்ச்சியடைந்துவிட்டார் என்று கூறும் திமுக இளைஞரணி முக்கிய நிர்வாகிகள், லஞ்சப் புகார்களை தாண்டி, மோகன் ஐஏஎஸ்ஸின் கண்ணியமற்ற செயல்பாடுகள்தான், அமைச்சர் உதயநிதியை அதிகமாக கோபம் கொள்ள செய்துவிட்டது என்றும் பீடிகை போட்டு அதிர்ச்சியை அதிகப்படுத்தினார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்கும் அரசு விழாக்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக கலந்து கொள்ளும் தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார் மோகன் ஐஏஎஸ் என்ற அதிரடி குற்றச்சாட்டுகள் குறித்து தீர விசாரித்து உண்மையை அறிந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செய்தித்துறையின் இயக்குனர் பதவியில் இருந்து மோகன் ஐஏஎஸ்ஸை உடனடியக தூக்கி எறியுங்கள் என்று அதிரடி உத்தரவை முதல்வர் அலுவலக செயலாளர்களுக்கு பிறப்பித்தார் என்கிறார்கள்.
தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டிருப்பதை உணர்ந்துகொண்ட மோகன் ஐஏஎஸ், ஊழல் குற்றச்சாட்டுகளால் பணியிட மாற்றம் என்ற அவப்பெயரில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவியை வைத்து மோகன் ஐஏஎஸ் ஆடிய நாடகத்தைப் பார்த்துதான், முதல்வர் மு.க.ஸ்டாலினே அனல் கக்கிவிட்டார் என்கிறார்கள் செய்தித்துறை மூத்த அதிகாரிகள்.


தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்த ஆர்.என்.ரவியின் அராஜக செயல் அமைந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஒட்டுமொத்த அமைச்சரவையும், ஆளும்கட்சி, தோழமை கட்சி எம்எல்ஏக்களும் ஆளுநருக்கு எதிராக கொந்தளித்த கொண்டிருந்த நேரத்தை நினைவுக்கூர்ந்த செய்தித்துறை உயர் அலுவலர்கள், தமிழக அரசை அவமதித்த ஆர்.என்.ரவி, அவருக்கு எதிராக கண்டன தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்படவுள்ளது என்பதை அறிந்து, தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாகவே பேரவையில் இருந்து வெளியேறினார்.

அந்தநேரத்தில்ஆளுநர் ஆர்.என்.ரவியின் அநாகரிகமான செயலைக் கண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சரவை ஆவேசமானார்கள். ஆளுநர் பதவிக்குரிய கண்ணியத்தை காற்றில் பறக்கவிட்ட ஆளுநரை பாரம்பரிய முறைபடி வழியனுப்புவதை சபாநாயகரே புறக்கணித்த நேரத்தில், அரசு மரபை மீறி, ஆளுநர் ஆர்.என்.ரவி காரில் ஏறி ராஜ்பவனுக்கு புறப்பட்ட போது, செய்தித்துறை இணை இயக்குர் தமிழ் செல்வராஜுடன் இணைந்து இயக்குனர் மோகன் ஐஏஎஸ் மிகுந்த பவ்யம் காட்டி வழியனுப்பி வைத்தது, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோரை எரிச்சல் அடைய வைத்துவிட்டது என்கிறார்கள் சட்டப்பேரவை அலுவலர்கள்.
மோகன் ஐஏஎஸ்ஸின் அதிகார துஷ்பிரயோகத்தைப் பார்த்து கோபமடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ்ஸிடம் எரிந்து விழுந்தார் என்றும் அதன் காரணமாகவே, செய்தித்துறை இயக்குனர் பதவியில் இருந்து மோகன் ஐஏஎஸ் அதிரடியாக தூக்கியடிக்கப்பட்டார் என்றும் லஞ்ச லாவண்யத்தால் புரையோடியிருக்கும் செய்தித்துறைக்கு அவசர கால சிகிச்சை அளித்து காப்பாற்றும் வகையில் துடிப்பு மிகுந்த இளம் ஐஏஎஸ் அதிகாரி மரு. இரா.வைத்திநாதன் ஐஏஎஸ்ஸை தேர்ந்தெடுத்து, செய்தித்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள் தலைமைச் செயலக மூத்த ஊடகவியலாளர்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரின் கோபத்தை மோகன் ஐஏஎஸ் ஒருசேர சம்பாதித்துக் கொண்டது மட்டுமின்றி, ஒட்டுமொத்த செய்தித்துறை அலுவலர்களையும் பகையாளியாக மாற்றியதாலும், மோகன் ஐஏஎஸ்ஸின் பணியிட மாற்றத்தை ஆரவாரமாக வரவேற்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் செய்தித்துறை அலுவலர்கள்.
திராவிட மாடல் ஆட்சியின் முதல் 20 மாதங்கள் ஜெயசீலன் ஐஏஎஸ்ஸால், செய்தித்துறைக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது என்றால், அதைவிட பலமடங்கு துயரமாக, செய்தித்துறையின் இருண்ட காலம் என்று சொல்லும் அளவிற்கு மோகன் ஐஏஎஸ்ஸின் 13 மாத கால நிர்வாகம் அமைந்துவிட்டது என்று மனம் நொந்து கூறுகிறார்கள் செய்தித்துறை உயர் அலுவலர்கள்.

முனைவர் வீ.ப.ஜெயசீலன் ஐஏஎஸ், மோகன் ஐஏஎஸ் ஆகிய இரண்டு அதிகாரிகளின் சர்வாதிகாரப் போக்கால் சீரழிந்த செய்தித்துறையின் மாண்பை மீட்டெடுக்கும் ரட்சகராகதான் இளம் ஐஏஎஸ் அதிகாரி இரா.வைத்திநாதன் சாரை பார்க்கிறோம் என்று கூறும் செய்தித்துறை உயர் அலுவலர்கள், திருச்சி மாநகராட்சி ஆணையராகவும், கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியராகவும் மருத்துவர் வைத்திநாதன் ஐஏஎஸ் ஆற்றிய சீரிய பணிகளை அறிந்து கொண்டதில் இருந்தும், கஜா புயல் பாதிப்பின் போது திருவாரூர் மாவட்டத்தில், பகல் இரவு பாராமல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்தவர் வைத்திநாதன் ஐஏஎஸ் என்ற தகவலும் கூட அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைப்பதற்கு உரிய காரணம் என்று கூறும் செய்தித்துறை அலுவலர்கள், நேர்மையாளர் என பெயரெடுத்திருக்கும் வைத்திநாதன் ஐஏஎஸ், செய்தித்துறையை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் ஆற்றல் கொண்டவராகவே இருப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

செய்தித்துறை அதிகாரிகள் அனைவரின் நம்பிக்கைக்கும் எந்தவிதமான பாதகமும் ஏற்பட்டு விடாமல், முந்தைய ஐஏஎஸ் அதிகாரிகள் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, பத்தாண்டுகளுக்கு முன்பு மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி ஆட்சிக்காலத்தில், அப்போது செய்தித்துறையின் செயலாளராக பணியாற்றிய முனைவர் வெ.இறை அன்பு ஐஏஎஸ் காலத்தில் செய்தித்துறை எட்டிய சிறப்புகளை அறிந்து, அதன் வழியில் நிர்வாகத்தை செம்மைபடுத்தினாலேயே பாழ்பட்டு கிடக்கும் செய்தித்துறையை வெகு விரைவாக சீரமைத்துவிட முடியும் என்றும் செய்தித்துறையில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களையும் தட்டிக் கொடுத்து, விருப்பு, வெறுப்பு இன்றி பணியாற்றும் வகையில் அறிவுரை கூறி வழிநடத்தினாலே போதும், மரு.இரா.வைத்திநாதன் ஐஏஎஸ்ஸின் தலைமையின் கீழ் செய்தித்துறை ஏற்கெனவே இழந்திருக்கும் பெருமைகளை, புகழை எளிதாக மீட்டெடுத்திட முடியும் என்று அசாத்திய நம்பிக்கையோடு கூறுகிறார்கள் தலைமைச் செயலக மூத்த ஊடகவியலாளர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *