Sat. Apr 20th, 2024

 இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன.  இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் நீடிக்கிறது.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக (பிங்க் பந்து டெஸ்ட்) குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நேற்று தொடங்கியது. 

பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 48.4 ஓவர்களில் 112 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 57 ரன்களுடனும் (82 பந்து, 9 பவுண்டரி), ரஹானே ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து இன்று 2வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. ரோகித் 66 மற்றும் கில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.  கேப்டன் கோலி 27 ரன்களுக்கு போல்டாகி வெளியேறினார்.  மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 145 ரன்களை எட்டுவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இந்தியா இழந்தது.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, அக்ஸர் மற்றும் அஸ்வினின் சுழற்பந்துகளை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 81 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக அக்ஸர் படேல் 6 விக்கெட்டுகளை எடுத்தார். அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்களை கடந்து சாதனை படைத்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் 33 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததை அடுத்து, இந்திய அணிக்கு 48 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக ரன்களைக் குவித்து 7.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. இதனால் 71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது நாளிலேயே முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது