Thu. Apr 25th, 2024

ஐபிஎல் போட்டியில் நான்காவது முறையாக கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை திரும்பியது. வெற்றிக் கோப்பையை, அணியின் உரிமையாளரும், இந்தியா சிமெண்ட்ஸ் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது.

வெற்றிக் கோப்பைக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான வெங்கடேஸ்வரா கோயில் சன்னதியில் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர், வெற்றிக் கோப்பையை சீனிவாசனும், இந்தியா சிமெண்ட்ஸ் முழு நேர இயக்குநரும், கிரிக்கெட் சங்கத் தலைவருமான ரூபா குருநாத்தும் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீனிவாசன், 4 வது முறையாக கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாதனை மகத்தானது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு அங்கம் தோனி, தோனி இல்லாமல் சென்னை அணி கிடையாது. தற்போது டி20 உலக கோப்பை போட்டியையொட்டி இந்திய அணியின் ஆலோசகர் பணியை தோனி ஏற்றுள்ளார். அந்த போட்டி முடிந்தவுடன், சென்னைக்கு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, முதல்வர் மு.க.ஸ்டாலினை வெற்றிக் கோப்பையுடன் சந்தித்து வாழ்த்து பெறவுள்ளார். முதல்வருடனான தோனி சந்திப்பு தொடர்பான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு இந்தியா சிமென்ட்ஸ் துணைத் தலைவர் சீனிவாசன் தெரிவித்தார்.

முதல்வர் தலைமையில் பாராட்டு விழா

தோனி இந்தியா திரும்பியவுடன் சென்னையில் ஐபில் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று, தோனி உள்ளிட்ட வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.