Sat. Nov 23rd, 2024

முஸ்லீம் லீக்கின் மிரட்டல் வெத்து வேட்டா…?

அதிமுக கூட்டணியில் இருந்து பாரதிய ஜனதா வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், ஆளும்கட்சியான திமுக தலைமையில் உள்ள கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்று மூத்த ஊடகவியலாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் ஆரூடம் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கை, திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வந்து கொண்டிருக்கும் நேரத்தில், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம் என்ற கொள்கைகளை அமல்படுத்த துடித்துக் கொண்டிருக்கும் அகில இந்திய பாஜகவுக்கு எதிராக கடுமையாக எதிர்ப்புகளை பதிவு செய்து கொண்டிருக்கும் மதசார்ப்பற்ற கட்சிகளில் திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதன்மையான  இடத்தில் இருந்து கொண்டிருக்கிறது.

ஆளும்கட்சியான திமுகவை விட, பாரதிய ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் மற்றொரு தேசியக் கட்சியான காங்கிரஸை விட, நாடு முழுவதும் பரவியிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளை விட அதிகமாக பொதுக்கூட்டங்களை நடத்தி, அகில இந்திய பாஜகவை, மத்திய பாரதிய ஜனதா ஆட்சியை கடுமையாக எதிர்த்தவர, எதிர்த்துக் கொண்டிருப்பவர் தொல் திருமாவளவன்.

நாட்டில் பரவும் மதவெறியை தடுத்து நிறுத்தி ஜனநாயகத்தை காப்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரதான நோக்கம். மத்திய பாஜக அரசை எதிர்ப்பதால், அரசியலில் அங்கீகாரம் தரும் பதவிகளை இழப்பதற்கும் தயாராகவே இருக்கிறது என்று அறைகூவல் விடுத்தவர் தொல் திருமாவளவன். அகில இந்திய பாரதிய ஜனதாவுக்கு எதிராக மதசார்ப்பற்ற கொள்கையில் பிடிவாதமாக இருந்து வருவதால்தான், அகில இந்திய அளவில் தொல் திருமாவளவனுக்கு மரியாதை கூடியிருக்கிறது. தென் மாநிலங்களைக் கடந்து வட மாநிலங்களிலும் தலித் அரசியலில் மட்டுமின்றி, மத வெறி பிடித்த அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டும் வல்லமை கொண்ட தலைவராகவும் தொல் திருமாவளவனை அங்கீகரிக்கிறார்கள் வடமாநிலத்தைச் சேர்ந்த பழுத்த அரசியல்வாதிகள்.

ஆளும்கட்சியான திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இன்றைய தேதியில் தேசிய அளவிலான இந்தியா கூட்டணியிலும் இடம் பெற்று, பாரதிய ஜனதாவுக்கு எதிராக வலுவான எதிர்ப்பை தெரிவிப்பதற்கு நாடு முழுவதும் களங்கள் அமைந்திருக்கின்றன. தேர்தல் அரசியலை விட, சமுதாய முன்னேற்றத்திற்கு குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான வெறுப்பை துடைத்தெறிந்து, உயர்ந்த சாதிகளுக்கு இணையான முக்கியத்துவதை பெற்ற தருவதையே இலட்சியமாக கொண்டிருக்கிறோம் என்று தொல் திருமாவளவன் அடிக்கடி கூறிக் கொண்டிருப்பதால் தான், இன்றைய தேதியில் அவரை, சமூக நீதி காவலர் என்று நாடு முழுவதும் பிரபல அரசியல் தலைவர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தான் பங்கேற்கும் பொதுக் கூட்ட மேடைகளில் மட்டுமின்றி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் மேடைகளிலும் கூட சனாதனத்திற்கு எதிராக, ஆதிக்க சாதிகளுக்கு எதிராவும் கடுமையான எச்சரிகைகளை கொடுக்க வேண்டும் என்று தான் தொல் திருமாவளவன் அரசியல் பாடம் கற்பித்திருக்கிறார்.

திமுக கூட்டணியில் விசிக இடம் பெற்றிருப்பதற்கு முக்கிய காரணம், வெறும் அரசியல் ஆதாயம் மட்டுமல்ல, வட மாவட்டங்களில் தாண்டவமாடும் சாதி வெறியை அடியோடு அழிப்பதற்கும், ஆண்ட பரம்பரைகளின் ஆணவத்தை மண்ணோடு மண்ணாக புதைப்பதற்கும், தமிழ்நாட்டின் ஆதிக் குடிகளான தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான வன்மத்தை வேரோடு அறுத்து, சமுதாயத்தில் சம உரிமை கொண்டவர்களாக மீட்டு எடுப்பதற்கும் தான், சமூக நீதியை தமிழ்நாட்டில் நிலை நிறுத்திய திமுகவோடு கூட்டணி வைத்திருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் என்று பல நூறு மேடைகளில் முழங்கியிருப்பவர்தான் தொல் திருமாவளவன்.

சமூக நீதி கொள்கையிலும், மதசார்ப்பற்ற கோட்பாட்டிலும் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருக்கும் தொல் திருமாவளவனை பின்பற்றி, அவரது தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அரசியல் பயணம் மேற்கொள்ள வேண்டுமே தவிர, அவரின் சிந்தனையோட்டத்திற்கு எதிராக, குறுகிய கால அரசியல் லாபத்திற்காக, அடிப்படை கொள்கைகளை குழி தோண்டி புதைக்கும் வகையில், பொதுமக்களின் நம்பகத்தன்மையை இழக்கும் வகையில் அரசியல் ஆதாயம் தேடி பாதை மாறுவது என்பது விஷமத்தனமானது என்று எச்சரிக்கிறார்கள் விசிகவுடன் ஒத்த கருத்து உள்ள அரசியல் கட்சி தலைவர்கள்.

பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறியவுடனேயே மதசார்ப்பற்ற கொள்கையை தூக்கி பிடிக்கும் அதிமுக, அரசியல் ஆதாயம் பெறுவதற்கான காய் நகர்த்தல்களை தொடங்கிவிட்டது. எதிர்முகாமில், குறிப்பாக ஆளும்கட்சியான திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை இழுப்பதற்கான முயற்சியில் அதிமுக இறங்கி விட்டது என்று கூறும் அரசியல் ஆய்வாளர்கள், அதிமுகவின் முதல் குறி விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது விழுந்திருக்கிறது என்கிறார்கள். உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தொல் திருமாவளவனை கைபேசியில் தொடர்பு கொண்டு எடப்பாடியார் நலம் விசாரித்ததிலேயே உள்நோக்கம் இருக்கிறது என்கிறார்கள் திமுக முன்னணி நிர்வாகிகள்.

நலம் விசாரிப்பு என்பது மனிதாபிமான செயலாக இருந்தாலும் கூட அதற்குள்ளும் கூட அரசியல் கணக்கு இருக்கிறது என்று சந்தேகத்தை எழுப்பும் திமுக முன்னணி நிர்வாகிகள், கொள்கை அடிப்படையில் கூட்டணியில் அங்கம் வகிப்பதை முக்கியமாக, முதன்மையாக கருதாமல், அரசியல் ஆதாயம் பெறும் வகையில் தொகுதிகளை கூடுதலாக பெறுவதற்காக பாதை மாறுகிறதா விசிக என்ற சந்தேகத்தை எழுப்புகிறது  விசிகவின் இளைஞரணி தலைவர் சங்கத்தமிழனின் பேச்சு என்கிறார்கள்கள்.

அதிமுகவிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. ஐந்து எம்பி தொகுதிகளை ஒதுக்க கூட தயாராக இருக்கிறார்கள். எங்கள் தலைவர் தொல் திருமாவளவன் மத்திய அமைச்சராக வேண்டும் என்ற ஆசை, விசிக நிர்வாகிகள் , தொண்டர்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று கூறுகிறார் சங்கத்தமிழன்.

இவரை போன்ற நிர்வாகிகளின் ஆசையை நிறைவேற்ற கூட்டணி மாறுவாரா தொல் திருமாவளவன் என்பதுதான் அரசியல் களத்தில் இன்றைய தேதியில் சூடான கேள்வியாக இருக்கிறது. விசிக வழியில், முஸ்லீம் லீக்கும் இரண்டு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் கேட்போம் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்கமாக கூறியிருக்கிறார்கள் இஸ்லாமிய தலைவர்கள்.

கூட்டணி கட்சிகளிடம் இருந்து எழுந்திருக்கும் கேள்விகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்படி எதிர் கொள்ள போகிறார்? நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்றும் 8 மாதங்கள் அவகாசம் இருக்கிறது. திமுக மற்றும் அதிமுக தலைவர்களின் காய் நகர்த்தல்களை, ராஜதந்திரத்தை பொறுத்திருந்து பார்ப்போம்.