தமிழ்நாட்டில் இன்றைய தேதியில் அரசியல் களத்தில் அதிகமாக பேசப்பட்டு வருவது அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் தான்.
மத்திய பாஜக அரசிடம் அடிமை போல இருக்கிறது அதிமுக என்ற விமர்சனம் பல தளங்களில் எழுந்து கொண்டிருந்தது.
இப்படிபட்ட நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பெரும்பான்மையானோர், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைகளுக்கு அஞ்சாமல், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி இருப்பதை பார்த்து, அதிமுகவுக்கு எதிராக கடந்த பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த எதிர் முகாமில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது என்பதை கண்டறிய அவரவருக்கு உரிய வழிகளில் தகவல்களை திரட்டி கொண்டிருக்கிறார்கள்.
பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதற்கு சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும் கூட, யூ டியூப்புகளில் கடந்த பல நாட்களாக பேசி வருகிற மூத்த ஊடகவியலாளர்கள், யூ டியூப்பர்கள் அதிமுகவின் திடீர் எழுச்சியை நம்ப முடியாமலேயே இருக்கிறார்கள்.
அக்டோபர் 1 ஆம் தேதி காலையில் சாணக்யா டிவியின் நிறுவனர், பிரபல ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று அரசியல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது. அதிமுகவின் மூத்த தலைவர் கே.பி. முனுசாமிக்கு சவால் விடும் வகையில் பாண்டே பேசியுள்ளார்.
அதிமுகவின் கோரிக்கையான, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கலைக்காததால் தான் பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்டதாக, செய்தியாளர்களிடம் கே.பி. முனுசாமி பேசியுள்ளதை சுட்டிக்காட்டி, அவசர அவசரமாக ரங்கராஜ் பாண்டே வீடியோ வெளியிட்டுள்ளார்.
கே.பி.முனுசாமி என்ன பேசினார். பாண்டே என்ன விளக்கம் அளித்துள்ளார் என்பதையெல்லாம் விரிவாக ஆராய்வதற்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையிலான அதிமுகவில் இன்றைய தேதியில் திடீர் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா மீது அதிமுக முன்னணி தலைவர்களுக்கு திடீர் பாசம் ஏற்பட்டிருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.
2016 டிசம்பர் 5 ஆம் தேதி செல்வி ஜெயலலிதா மறைந்தார். வரும் டிசம்பர் மாதத்தில் அவரது 7 வது ஆண்டு நினைவு நாள் கடைப்பிடிக்கப்படவுள்ள நேரத்தில், திடீரென்று எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடியாரை தொடங்கி அதிமுக நிர்வாகிகளிடம் திடீரென்று செல்வி ஜெயலலிதா மீதான பக்தி அபரிதமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
செல்வி ஜெயலலிதா மீண்டும் உயிர்த்து எழுந்துவிட்டார் போல ஒரு தோற்றத்தை அதிமுக முன்னணி தலைவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வியப்பிற்குரிய ஒன்று.
எடப்பாடியார் தொடங்கி கே.செங்கோட்டையன் எஸ்.பி.வேலுமணி உள்பட முன்னணி தலைவர்கள் வரிசையாக சமூக ஊடகமான டிவிட்டரில் செல்வி ஜெயலலிதாவுடன் அவரவர் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, என்னெற்றும் அதிமுகதான் என்று சபதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
2016 தொடருவோம் என்று பிரதமர் மோடியிடம் பாரதிய ஜனதா கூட்டணியை விட்டு வெளியேறி விட்ட அதிமுக, இன்னும் 7 மாதங்களில் வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் மீண்டும் கூட்டு சேராமல்தான் போட்டியிடுமா என்று சந்தேகங்களை எல்லாம் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.
பாரதிய ஜனதாவுடன் கூட்டணி இல்லாமல், அதிமுக தலைமையில் தனி அணி களத்தில் குதித்தால், ஆளும்கட்சியான திமுக தலைமையில் உள்ள கூட்டணியில் இருந்து கூட பல கட்சிகள் தொகுதி பங்கீடு ஏற்படும் பிரச்னைகளால் , அதிமுக கூட்டணிக்கு தாவக் கூடிய நிலை ஏற்படலாம் என்று உறுதிபட கூறுகிறார்கள். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பரும் இல்லை என்பதற்கு ஏற்ப, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் கூட கூட்டணிகளில் அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம் என்பதை கடந்த கால தேர்தல் நேர நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கூட்டணியில் ஏற்பட்டிருக்கிற பிரிவை, நிரந்தரமானது தான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அடித்து கூறுவதை நாம் பார்க்கிறோம்.
சீமானைப் போல மேலும் பல அரசியல் தலைவர்கள், இருகட்சிகளுக்கு இடையே மீண்டும் கூட்டணி ஏற்படும் என்றால், அந்த கூட்டணியை வாக்காளர்கள் ஆதரிக்கமாட்டார்கள். பொதுமக்களிடம் அவநம்பிக்கை ஏற்பட்டு, அதிமுகவும் பாரதிய ஜனதாவுக்கும் ஒன்று இரண்டு எம்பி தொகுதிகளில் கிடைக்க கூடிய வெற்றி வாய்ப்பும்கூட பாழ்பட்டு போகும் என்று வெளிப்படையாக பேசுகிறார்கள்.
இந்த பின்னணியோடு மற்றொரு விவகாரமும் அதிமுக உட்கட்சிக்குள் மட்டுமல்ல, சமூக ஊடகங்களிலும் சூடான விவாதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
பாரதிய ஜனதா விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கூட்டணிக்கு அதிமுக வரவில்லை என்றால், எடப்பாடியார் தலைமையிலான அதிமுகவை உடைத்து, எடப்பாடியாருக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணியை உருவாக்கி, அதை பலமுள்ள அதிமுகவோ கட்டமைப்போம் என்று பாஜக மேலிட தலைவர்கள், எடப்பாடியாரிடமே நேரடியாக எச்சரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் பரவலாக பகிரப்பட்டு கொண்டிருக்கின்றன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான அரசை கவிர்த்து பாஜக கூட்டணியில் ஆட்சியை அமைப்பதற்கு ஏக்நாத் ஷிண்டோவை தயார் செய்ததைப் போல, தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே தான் எஸ்.பி.வேலுமணி என்று கூட பிரபல யூ டியூப்பர்கள் பேட்டியளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எஸ்.பி.வேலுமணியை முன்னிலைப்படுத்தி சர்ச்சை கிளப்பட்டதை அடுத்து, உடனடியாக அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எஸ்.பி.வேலுமணி, தமது டிவிட்டர் பக்கத்தில் கோவை மாவட்ட அதிமுகவில் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த தாமோதரன் கோவை மாவட்ட அதிமுகவில் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த நேரத்தில் அவரது தலைமையை ஏற்று கட்சிப் பணியாற்றிய புகைப்படத்தை வெளிட்டு, என்று என்றும் அதிமுகதான் என பதிவிட்டிருந்தார் எஸ்.பி.வேலுமணி.
இந்த புகைப்படம் அதிமுக தொண்டர்களுக்கு பல ஆயிரம் கதைகளை கூறிக் கொண்டிருக்கிறது.
அதிமுக நிறுவனரும் மறைந்த முதல்வருமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர், அதிமுகவை எஃகு கோட்டையாக மாற்றி அமைத்த மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆகியோரின் தலைமைக்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டேன் என உறுதிபட தெரிவித்திருக்கிறார் எஸ்.பி.வேலுமணி என்று அதிமுக தொண்டர்கள் பெருமிதமாகவே கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
எஸ்.பி.வேலுமணி பகிர்ந்த புகைப்படமும், அவர் தெரிவித்துள்ள கருத்துகள் விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது.
அதிமுகவுக்கு தான் என்றைக்கும் கடமைப்பட்டுள்ளேன் என்று தான் எஸ்.பி. வேலுமணி காட்டியிருக்கிறாரே தவிர, எடப்பாடியார் தலைமையிலான அதிமுகவுக்கு என்றைக்கும் கட்டுப்பட்டு இருப்பேன் என்று எஸ்.பி.வேலுமணி குறிப்பிடவில்லை என்று கிண்டலடிக்கிறார் பிரபல யூ டியூப் பேட்டியாளர் ரவீந்திரன் துரைசாமி.
அவருடைய பார்வையில் எடப்பாடியாரின் தலைமை மாற்றத்திற்கு உரியது என்பதை போலதான் இருக்கிறது.
சமூக ஊடகங்களில், பொது தளங்களில் எப்படிபட்ட கருத்துகள் பகிரப்பட்டு வந்தாலும் கூட இன்றைய தேதியில், பாரதிய ஜனதா கூட்டணியில் அதிமுக இல்லை என்பது அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கு மிகுதியான நிம்மதியை கொடுத்திருக்கும் வேளையில், திமுகவுக்கு எப்போதுமே மாற்று அதிமுகதான் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி தந்திருக்கும் எடப்பாடியாரை அடிமட்ட தொண்டர்கள் கொண்டாடவே செய்கிறார்கள் என்பதுதான் நூறு சதவீதம் உண்மை.
அதிமுகவுக்கு எஸ்.பி.வேலுமணி உண்மையாக இருக்கிறாரோ அல்லது எடப்பாடியாருக்கு வேலுமணி உண்மையாக இருக்கிறாரா அதெல்லாம் எங்களுக்கு முக்கியம் இல்லை.
இன்றைய தேதியில் கோவை மாவட்டத்தில் ஆளும்கட்சியான திமுகவில் பலம் பொருந்திய தலைவர்கள் யாரும் இல்லை. உள்ளூர் மக்களிடம் பிரபலமான திமுக நிர்வாகிகளும் கண்களுக்கே தென்படவில்லை. ஆனால், அதிமுகவைப் பொறுத்தவரை எஸ்.பி.வேலுமணி, அசைக்க முடியாத மனிதர். அவரை நம்பினால் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்களிடம் இருப்பதை கோவை மாவட்டத்திற்கு வந்து பார்த்தால் தெரியும் என்று காலரை தூக்கிவிட்டவாறு கூறுகிறார்கள் கோவை அதிமுக நிர்வாகிகள்.
அவர்களின் வார்த்தைகளில் காணப்படும் உற்சாகம் போலதான், மாநிலம் முழுவதும் அதிமுக நிர்வாகிகளிடம் இதுவரை இல்லாத வகையில் புதிய எழுச்சியை காண முடிகிறது.
எஸ்.பி.வேலுமணியை பின்பற்றி, எடப்பாடியார், 30 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் கட்சி பணியாற்றியதை நினைவு கூரும் வகையில் அதிமுக கொடியோடு களப்பணியாற்றிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
எஸ்.பி.வேலுமணியை விட, எடப்பாடியாரை விட எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவில் களப் பணியாற்றிய கே.ஏ.செங்கோட்டையன், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா வோடு 30 ஆண்டுகளுக்கு முன்பு களத்தில் நின்று ஆற்றிய கட்சிப் பணியை தமது டிவிட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.
இப்படி வரிசையாக முன்னணி தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை பழங்காலம் முதலே இருந்து வரும் அதிமுக மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தும் விதமாக புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் திடீர் உற்சாகம், நாடாளுமன்றத் தேர்தலை தனித்தே எதிர்கொள்ள உற்சாகம் அளிக்கும் என்று மிகுந்த மகிழ்ச்சியோடு கூறுகிறார்கள் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள்.
தமிழ்நாட்டில் எப்போது திராவிட இயக்கங்கள்தான் வெற்றி கொடி நாட்டும். ஜார்ஜ் கோட்டையில் ஒன்று திமுக அமர்ந்திருக்கும் அல்லது அதிமுக அமர்ந்திருக்கும். இந்த இரண்டு கட்சிகளை தவிர்த்துவிட்டு மூன்றாவதாக தேசியத்தை தூக்கிப் பிடிக்கும், தமிழ் மண்ணுக்கு எப்போதுமே பாதகங்களை மட்டுமே செய்து கொண்டிருக்கும் தேசிய கட்சிகளுக்கு இடம் இல்லை என்பதை மத்திய பாஜக அரசின் உருட்டல்களுக்கு துளியும் பயப்படாமல் வெளிப்படுத்தியிருக்கிறார் எடப்பாடியார் என்று உற்சாகமாக பேசுகிறார்கள்.
பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை அடுத்து ஒட்டுமொத்த அதிமுகவுக்கும் புது ரத்தம் பாய்ச்சப்பட்டதை போல புதுவிதமான எழுச்சி ஏற்பட்டிருக்கிறது.
இந்த எழுச்சியை 2026 சட்டமன்றத் தேர்தல் வரை கட்டி காப்பாற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு எடப்பாடியாருக்கு இருக்கிறது என்று அதிமுக ஆதரவு பிரபலங்கள் வேண்டுகோளாக வைக்கிறார்கள்.
ஒட்டுமொத்த அதிமுகவிலும் எழுந்துள்ள எழுச்சியையும், பாரதிய ஜனதாவை விலக்கி வைத்துள்ளதால் மதசார்ப்பற்ற மக்களிடம் ஏற்பட்டுள்ள நம்பிக்கையையும் குழி தோண்டி புதைக்கும் வகையில் பாரதிய ஜனதாவுடன் மீண்டும் என்ற கூட்டணியை, எந்தவொரு நிர்ப்பந்தத்திற்கும் அடிபணிந்து எடப்பாடியார் ஏற்றுக் கொள்வார் என்றால், பழுத்த அரசியல்வாதியும், தமிழ் தேசியத்தின் மீது அசாத்திய நம்பிக்கை கொண்டிருப்பவருமான பழ கருப்பையா கூறுவதை போல, எடப்பாடியார் தனக்கு தானே குழி வெட்டி அதில் விழுந்து மண் மூடி கொண்டதைப் போல, அரசியல் மரணத்தை எடப்பாடியார் மட்டுமல்ல, அதிமுகவுக்கும் ஏற்பட்டு விடும் என்பதுதான் நல்லரசுவின் அறிவுரையாகவும் இருக்கிறது.
நன்றி நண்பர்களே. மற்றொரு சிறப்பு செய்தி தொகுப்போடு மீண்டும் சந்திக்கிறோம்.