Fri. Nov 22nd, 2024

தி.மு.க. தலைமை அலுவலகமான சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில், திராவிட ஆட்சி மாற்றமும், வளர்ச்சியும் என்று நூலை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

“இந்திய மாநிலங்களிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரம் படைத்த மாநிலமாக விளங்கும் மாநிலம், தமிழ்நாடு. வெவ்வேறு குறியீடுகள், தமிழகம் வளர்ந்துள்ளது என்பதைச் சுட்டுகின்றன. தமிழகத்தின் வளர்ச்சி என்பது வெறும் எண்களின் உயர்வும், தாழ்வும் அன்று. அது சமுதாயத்தில் நடந்தேறிய, தொடர்ந்து நடந்தேறும் மாற்றம். இந்த மாற்றத்தை விதைத்தது திராவிட இயக்கமும், அதிலிருந்து தோன்றிய கட்சிகளும். இந்த மாற்றம்தான் நமது சமுதாயத்தின் வலிமை. வளர்ச்சி அதனிலிருந்து விளைந்தது.

இது எப்படி நிகழ்ந்தது? தமிழ்நாட்டின் வளர்ச்சி மாற்றப் பயணம் தனித்துவமானது. மகத்தானது. இந்தப் பயணம் எப்படி ஆரம்பித்தது? – இதனைச் சாத்தியமாக்கியது சமூகநிதி பயணம்தான்” என்ற கோணத்தில் பொருளாதார ஆய்வறிஞர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் மற்றும் பல ஆய்வறிஞர்கள், பல்வேறு காலக்கட்டங்களில் எழுதிய 12 கட்டுரைகளின் தொகுப்பை, ‘திராவிட ஆட்சி – மாற்றமும் வளர்ச்சியும்’என்ற தலைப்பில் புத்தகமாக, இன்று (25-2-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அப்புத்தகத்தின் பிரதிகளை பொதுச்செயலாளர் துரைமுருகன், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் வாசகர் ஆசிரியர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.