Sun. Dec 3rd, 2023

தாரை இளமதி., சிறப்புச் செய்தியாளர்..

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல்களை பற்றி செய்தி தொகுப்பு வெளியிட நல்லரசுக்கு துளியும் விருப்பம் இல்லை.

திராவிட மாடல் ஆட்சியை தேர்ந்தெடுத்த மக்களின் விருப்பத்திற்கு மாறாகதான் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் அமைந்திருக்கிறது என்பதுதான் பெரும்பான்மையானோரின் குற்றச்சாட்டாக இருக்கிறது என்பதை மட்டும் பதிவு செய்கிறது நல்லரசு.

முதல்வர் மற்றும் ஆளுநர் இடையேயான மோதலை விட, தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் தனிநபர் செலுத்தி வரும் அராஜகத்தை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வருவதையே முதன்மையான ஊடக கடமையாக நல்லரசு கருதுகிறது. அதன் வெளிப்பாடுதான் இந்த செய்தி தொகுப்பு…

அறப்போர் இயக்கம் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணத்தை ஒவ்வொரு நாளும் வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறது. அந்தவரிசையில், கார்த்திகேயன் ஐஏஎஸ்ஸை நகராட்சி நிர்வாகத்துறை முதன்மைச் செயலாளராக பணி மாறுதல் செய்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு  கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, ஜூலை 2 ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அறப்போர் இயக்கம்.

அறப்போர் இயக்கத்தின் அறச்சீற்றம் நியாயமானதுதான் என்று வெளிப்படையாகவே கூறும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், உயர்கல்வித்துறை செயலாளராக பணியாற்றிய கடந்த  இரண்டு ஆண்டுகளில் கார்த்திகேயன் ஐஏஎஸ்ஸின் முதிர்ச்சியற்ற செயல்பாடுகளால் உயர்கல்வி பயிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.

அறப்போர் இயக்கத்தின் எதிர்ப்பு மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ள ஆதங்கத்திற்கு வலு சேர்க்கும் வகையிலேயே, பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியும் கார்த்திகேயன் ஐஏஎஸ்ஸுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், திராவிடமாடல் ஆட்சியையும் கேவலப்படுத்தியுள்ளார்.

தலைமைச் செயலாளராக பணியாற்றிய வெ. இறை அன்பு ஐஏஎஸ், ஓய்வுப் பெற்று 48 மணிநேரங்கள் கூட கடந்துவிடவில்லை. இந்தநேரத்தில், புதிதாக தலைமைச் செயலாளர் பதவியை ஏற்ற ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ் மேற்கொண்டுள்ள இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற அறிவிப்பு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதை, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல, திமுக அரசுக்கு ஆதரவாக ஓங்கி குரல் கொடுத்து வரும் மூத்த ஊடகவியலாளர்களும் ஆழ்ந்த கவலையுடனேயே விவாதித்து வருகிறார்கள்.

 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் ஏன் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. விரிவாக பார்ப்போம்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இரண்டு ஆண்டு காலம் பணியாற்றிய முனைவர் வெ.இறை அன்பு ஐஏஎஸ், அரசு நிர்வாகத்தில் என்ன சாதித்தார் என்ற முணுமுணுப்புகள் சமூக ஊடகங்களில் தலைகாட்டுவதை, ஜூலை முதல் தேதியில் இருந்தே கண்களில் படுகிறது.

வாட்ஸ் அப், டிவிட்டர் போன்ற தளங்களில், ஒன்றிரண்டு பதிவுகள் பகிரப்பட்டு வருவதை பெரும்பான்மையானவர்களின் பார்வைக்கு செல்லாததால், அறவழியில் மட்டுமே அரசு நிர்வாகத்தில்  35 ஆண்டுகளுக்கு மேல் முழு கவனத்தையும் செலுத்தி வந்ததற்கு, வெ.இறை அன்பு ஐஏஎஸ் ஓய்வுப் பெற்ற ஜுன் 30 ஆம் தேதியன்று நாடு முழுவதும் நிரம்பியிருக்கும் நல்லோர்களிடம் இருந்து குவிந்த பாராட்டுகளே சான்றாக உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் 2 ஆண்டு காலம் தலைமைச் செயலாளராக பணியாற்றிய வெ.இறை அன்பு ஐஏஎஸ், தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை செம்மையாக நடத்தி வந்திருக்கிறார் என்பதற்கு பல அம்சங்களை உதாரணங்களாக எடுத்துக் கூறலாம்.

ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்திலும் அவருடைய சக்திக்குட்பட்டு தவறுகள் நடைபெறாமல் இருக்க தடுப்பு அரணாகவே நின்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படாமல் தடுத்து நிறுத்தியவர் வெ.இறை அன்பு ஐஏஎஸ் என்பதுதான் தலைமைச் செயலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளின் மதிப்பீடாக இருக்கிறது.

இரண்டு ஆண்டு காலம் தலைமைச் செயலாளராக வெ.இறை அன்பு ஐஏஎஸ் பணியாற்றிய காலத்தில் பலமுறை ஐஏஎஸ் அதிகாரிகள் பணிமாறுதல் நடைபெற்றிருக்கிறது. அப்போதெல்லாம் எழாத சர்ச்சைகள், கடந்த இரண்டு நாட்களில் பல்வேறு தளங்களில் இருந்து எழுந்து கொண்டிருக்கிறது என்றால், வெ. இறை அன்பு ஐஏஎஸ்ஸின் ஆட்சி நிர்வாகம் எந்தளவுக்கு சிறப்பாக இருந்திருக்கிறது என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

ஜுன் 30 மாலை தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று, அரசு அலுவலர்களிடம் விடை பெற்று செல்கிறார் வெ.இறை அன்பு ஐஏஸ். அடுத்த சில நிமிடங்களில் தலைமைச் செயலாளர் பதவியில் அமர்ந்த ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ், முதல் கையெழுத்து போட்டது எந்த கோப்பில் என்று தெரியுமா.. அவரின் சுய விருப்பத்தின் பேரில்தான், அந்த கையெழுத்தை போட்டாரா. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்மை அளிக்கும் வகையிலான உத்தரவிலா ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ் கையெழுத்திட்டாரா என்றால் அதுதான் இல்லை.

பைசா பிரயோசனம் இல்லாத ஒரு உத்தரவில்தான் ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ் கையெழுத்திட்டிருக்கிறார். ஒரே ஒரு ஐஏஎஸ் அதிகாரி பணியிட மாற்ற உத்தரவில்தான் புதிய தலைமைச் செயலாளர் கையெழுத்திட்டு இருக்கிறார்.

பணியிட மாற்றம் பெற்ற அந்த ஐஏஎஸ் அதிகாரி, நேர்மையானவரா.. அரசு நிர்வாகத்தில் மிகுந்த அனுபவம் பெற்றவரா என்றெல்லாம் கேள்வி எழுப்பினால், எல்லாவற்றுக்கும் தகுதியுடையவராகவே இல்லை அந்த ஐஏஎஸ் அதிகாரி. அப்படியென்றால், அவசர அவசரமாக தனியொரு ஐஏஎஸ் அதிகாரியின் பணியிட மாற்றத்திற்கு அவ்வளவு முக்கியத்தும் கொடுக்கப்பட்டது ஏன்..

இந்த கேள்விக்கு உரிய விடையை தேடி விசாரித்தபோதுதான், திமுக ஆட்சியை எப்பாடுபட்டாவது குழி தோண்டி புதைக்க துடிக்கும் உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸின் அதிகார வெறி தலைகாட்டுகிறது.

உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸுக்கு மிகவும் வேண்டப்பட்டவரான நந்தகுமார் ஐஏஎஸ்ஸை பொதுத்துறை செயலாளராக நியமித்துதான் முதல் உத்தரவை வெளியிட்டார் புதிய தலைமைச் செயலாளரான ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ்.

சீரும் சிறப்புமாக செயல்பட்டுக் கொண்டிருந்த தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையை சீரழித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு வரலாற்றில் மிகப்பெரிய அவப்பெயரை தேடித் தர துடித்தவர் உதயச்சந்திரன் ஐஏஎஸ்.

பள்ளிக்கல்வித்துறைக்கு புதிதாக ஆணையர் என்ற பதவியை உருவாக்கி அதில் நந்தகுமார் ஐஏஎஸ்ஸை அமர வைத்தார் உதயச்சந்திரன் ஐஏஎஸ். கடந்த இரண்டு ஆண்டுகளில் நந்தகுமார் ஐஏஎஸ் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை சின்னபின்னமானது. கல்வியாளர்கள் எல்லோரும் கொதித்து, உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸுக்கு சாபமே கொடுத்தார்கள்.

பள்ளிக்கல்வித்துறை சீரழிந்துக் கொண்டிருக்கிறது என்பதை காலதாமதமாக உணர்ந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸை கடிந்து கொண்டதை அடுத்துதான் நந்தகுமார் ஐஏஎஸ், பள்ளிக் கல்வித்துறையில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார். இப்படி பல நிகழ்வுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் கருப்பு பக்கங்களாக மாறி இருக்கின்றன.  

வெ.இறை அன்பு ஐஏஎஸ் ஓய்வுக்குப் பிறகு புதிய தலைமைச் செயலாளர் பதவியில் அமர்வதற்கு தகுதியான, ஆட்சி நிர்வாகத்தில் திறமையான ஐஏஎஸ் உயர் அதிகாரிகள் பலர் இருந்தாலும் கூட, குறிப்பாக தமிழர்களான ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கும் போதும் ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ்ஸுக்கு தலைமைச் செயலாளர் பதவி கிடைத்தற்கு முக்கிய காரணமே உதயச்சந்திரன் ஐஏஎஸ்தான் என்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் அனுபவம் மிகுந்த அரசு உயர் அலுவலர்கள்.

உதயச்சந்திரன் ஆட்சியா.. உதயசூரியன் ஆட்சியா என்று பொங்கி எழுந்த மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு உள்ளிட்டவர்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக சமாதானப்படுத்தியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவராலேயே பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸின் அதிகார திமிர், கனிம வளத்துறையில் பணியாற்றிய ஜெயகாந்தன் ஐஏஎஸ்ஸை அதிரடியாக மாற்றியதில் வெளிச்சத்திற்கு வந்தது.  திமுக ஆதரவு இதழான நக்கீரனே, உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸின் அதிகார திமிரை வெளிச்சம் போட்டு காட்டிய துயரம் எல்லாம் நேர்ந்தது.

கனிம வளத்துறைக்கு பொறுப்பு வகிப்பவர், திமுகவில் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில்,  இரண்டாவது தலைவராக இருக்கும் துரைமுருகன். அவரின்  விருப்பத்திற்கு மாறாக தான் ஜெயகாந்தன் ஐஏஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மிகச் சிறந்த அதிகாரி என பெயரெடுத்த ஜெயகாந்தன் ஐஏஎஸ், மறைந்த முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் முதல் அமைச்சர் அலுவலகத்திலேயே பணியாற்றியவர்.

இப்படிபட்ட நேர்மையான, திறமை வாய்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளை எல்லாம் குறிப்பாக, திமுக ஆதரவு மனநிலையில் உள்ள அதிகாரிகளை எல்லாம் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்துடனேயே அடிக்கடி பணிமாறுதல் செய்கிறார் உதயச்சந்திரன் ஐஏஎஸ் என்பதுதான் மூத்த ஊடகவியலாளர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

தலைமைச் செயலாளராக வெ. இறை அன்பு ஐஏஎஸ் பணியாற்றிய காலத்திலும்கூட ஜெயகாந்தன் ஐஏஎஸ் போன்று ஒன்றிரண்டு அதிகாரிகளை உதயச்சந்திரன் ஐஏஎஸ் பழிவாங்கியபோதுதான், முதல்வர் மு.க.ஸ்டாலினே நேரடியாக தலையிட்டு, முதல் அமைச்சரின் நெம்பர் ஒன் செயலாளர் பதவியில் இருந்து உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸை தூக்கியடித்தார்.

அந்த நேரத்தில் நீலிக்கண்ணீர் வடித்து, கபட நாடகம் ஆடி நிதித்துறை செயலாளர் பதவியில் அமர்ந்து கொண்ட உதயச்சந்திரன் ஐஏஎஸ், தன் சொல் பேச்சை தட்டாதவரும் மாலைநேர உற்சாகத்தில் தோளோடு தோள் நிற்பவருமான முருகானந்தம் ஐஏஎஸ்ஸை, முதல் அமைச்சரின் நெம்பர் ஒன் செயலாளர் பதவியில் அமரும் வகையில் சாமர்த்தியமாக காய் நகர்த்தி வெற்றி பெற்றவர்தான் உதயச்சந்திரன் ஐஏஎஸ்.

உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸை தலைமைச் செயலகத்தில் இருந்து தூக்கியடித்தால்தான் எஞ்சிய மூன்றாண்டுகளையும்  , திராவிட மாடல் ஆட்சி எவ்வித சிக்கல்களையும் எதிர்கொள்ளாமல் முழுமையான ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் என்று மூத்த அமைச்சர்களே ஆவேசத்துடன் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை தன்னுடைய இரும்பு பிடியிலேயே வைத்துக் கொள்ளும் தீய குணத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் உதயச்சந்திரன் ஐஏஎஸ், தனது சொல் பேச்சுக்கு தலை ஆட்டுகிறவரான ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ்ஸை தலைமைச் செயலாளர் பதவியில் அமர்த்தி, தன்னுடைய அதிகார வெறியை, அதிரடியாக நிறைவேற்ற தொடங்கியிருக்கிறார் என்பதற்கான அடையாளங்கள்தான் ஜுன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய அடுத்தடுத்த இரண்டு நாட்களில் வெளியான ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற அறிவிப்பு என்கிறார்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் விசுவாசமாக உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள்.

தலைமைச் செயலாளர் பதவியில் அமர்வதற்காகவே ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவை சுற்றி சுற்றி வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் துறை ரீதியாக பரிமாறப்பட்ட அனைத்து தகவல்களும் ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ் அறிந்து வைத்திருப்பார். இப்போது, உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸின் தயவில் தலைமைச் செயலாளர் பதவியில் அமர்ந்திருப்பவர். முதல்வர் மு.க.ஸ்டாலினால் பெரிதும் மதிக்கப்படும், நம்பிக்கைக்குரியவராக பார்க்கப்படும் மூத்த அமைச்சர் கே.என்.நேருவை காட்டி கொடுப்பாரா ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ் என்கிற சந்தேகம், திருச்சி திமுக பிரமுகர்களிடம் எழுந்திருக்கிறது என்பதுதான் சோகமான ஒன்று.

புதிய தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ் கையெழுத்திட்ட இரண்டாவது ஐஏஎஸ் பணியிட மாற்ற உத்தரவு, ஜூலை முதல் தேதி வெளியானது.

அதில் முதல் பணியிட மாற்றமே, கார்த்திகேயன் ஐஏஎஸ்ஸுக்குதான். ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ் வகித்து வந்த நகராட்சி நிர்வாகத்துறை அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே கடந்த இரண்டு ஆண்டுகள் உயர்கல்வித்துறையை சீரழித்தவர் என்று பிரபல கல்வியாளர்களால் குற்றம் சாட்டப்பட்ட கார்த்திகேயன் ஐஏஎஸ்ஸுக்கு, மூத்த அமைச்சர் கே.என்.நேருவின் விருப்பத்திற்கு மாறாக அவரது துறைக்கே செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

கார்த்திகேயன் ஐஏஎஸ்ஸின் நிர்வாகத் திறமையை பற்றி, அறப்போர் இயக்கம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. முந்தைய அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறையில் நடைபெற்ற பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கான ஊழலில் கார்த்திகேயன் ஐஏஎஸ்ஸின் பங்களிப்பு என்ன என்பதை பற்றியெல்லாம் லஞ்ச ஒழிப்பு துறைக்கே புகாராக கொடுத்திருக்கிறது அறப்போர் இயக்கம். 740 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் விசாரணை வளையத்தில் சிக்கிக் கொண்டிருப்பவர்தான் கார்த்திகேயன் ஐஏஎஸ்.

அதிமுக ஆட்சியில் ஊழலுக்கு துணை போன ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக அறப்போர் இயக்கம் குரல் கொடுத்து வருகிறது. அதில் முதன்மையான அதிகாரியாக உள்ள கார்த்திகேயன் ஐஏஎஸ்தான்., திராவிட மாடல் ஆட்சியை தூக்கி நிறுத்த பகல் இரவு பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸுக்கு மிகவும் திறமையானவராக தெரிந்திருக்கிறார். அவரின் கையாள்தான் கார்த்திகேயன் ஐஏஎஸ் என்பதை தவிர வேறு யாரும் இல்லை.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரான கே.என்.நேருவை உளவு பார்ப்பதற்கு தனது குணநலன்கள் அனைத்தையும் ஒருங்கே பெற்று இருக்கும் கார்த்திகேயன் ஐஏஎஸ்தான் ஆகச் சிறந்த உளவாளி என்பதால்தான் உதயச்சந்திரன் ஐஏஎஸ், 24 மணிநேரத்தில் நகராட்சி நிர்வாகத்துறைக்கு அவரை அதிகாரியாக நியமனம் செய்திருக்கிறார்.

ஜூலை 1 ஆம் தேதி வெளியான ஐஏஎஸ் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் முழுவதுமே உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸின் விருப்பத்தின் பேரிலேயே நடந்திருக்கிறது என்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள மூத்த அதிகாரிகள்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ், ஒப்புக்கு சப்பாணி. அதுபோலவே, முதல் அமைச்சரின் நெம்பர் ஒன் செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ்ஸும் டம்மிதான்.

தலைமைச் செயலாளர் பதவியில் வெ. இறை அன்பு ஐஏஎஸ் நீடித்த வரை , அதிகமாக அதிகார திமிரை வெளிப்படுத்த துணியாத உதயச்சந்திரன் ஐஏஎஸ், ஜுன் 30 ஆம் தேதியில் இருந்து, அவரே தலைமைச் செயலாளர். அவரே முதல்வரின் நெம்பர் ஒன் செயலாளர். அவரே நிதித்துறை செயலாளர். இப்படி செல்வாக்கு மிகுந்த மூன்று பதவிகளை வைத்துக் கொண்டு திமுக ஆட்சிக்கு விரைவாக சமாதி கட்ட துணிந்துவிட்டார் என்பதுதான் மூத்த திமுக அமைச்சர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினை விட சர்வ வல்லமை படைத்தவராக இன்றைய தேதியில் இருப்பவர் உதயச்சந்திரன் ஐஏஎஸ்தான்.

நல்லரசுவின் இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றால், பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி எல்லாம், திராவிட மாடல் ஆட்சியை கேலி, கிண்டல் செய்யும் கொடுமை, துயரம் எல்லாம் நேர்ந்திருக்குமா என்ன…

நாராயணன் திருப்பதியின் வசவுகளை நல்லரசு எதிரொலிக்கும் அளவுக்கு மனம் கல்லாக இல்லை. பார்வையாளர்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்…