Fri. Apr 26th, 2024

தாரை இளமதி, சிறப்பு செய்தியாளர்…


முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் 2021 ம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் புதிய ஆட்சி அமைத்த போது, மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான ஷிவ் தாஸ் மீனா, அமுதா ஐஏஎஸ் ஆகியோர் மத்திய அரசின் பணிகளில் டெல்லியில் பணியாற்றி கொண்டு இருந்தார்கள்.

ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ் – அமுதா ஐஏஎஸ் ஆகிய இருவரின் சேவையும் தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று விரும்பியவர் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள்.

முதல்வரின் விருப்பத்திற்கு ஏற்ப இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளையும் மத்திய அரசு விடுவித்தது..

தமிழ்நாடு அரசு பணிக்கு திரும்பிய ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ்ஸுக்கு முக்கியமான துறையான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஒதுக்கப்பட்டது.. முதன்மைச் செயலாளரான அமுதா ஐஏஎஸ்ஸுக்கு ஊரக வளர்ச்சி துறை வழங்கப்பட்டது..
இரண்டு துறைகளும் ஒட்டுமொத்த தமிழகத்தின் ரத்த நாளங்கள் ஆகும். இவை
நகரங்கள் மற்றும் கிராமங்களின் கட்டமைப்பை மாற்றியமைக்கவும் மேம்படுத்தவும் உருவாக்கப்பட்ட துறைகள் ஆகும்

நல்லவர்கள் மற்றும் வல்லவர்கள் என்ற புகழை சுமந்து இருக்கும் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளும் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் முக்கிய துறைகளின் செயலாளராக பதவி வகித்து வருகிறார்கள் என்பது விளிம்பு நிலை மக்களுக்கு நிம்மதியை தந்திருக்கிறது..

பொதுமக்களின் குறைகளை கனிவுடன் பரிசீலித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வரும் இரண்டு உயர் அதிகாரிகளும் தமிழக அரசுக்கு நற்பெயரை தேடி தந்து கொண்டு இருக்கும் இன்றைய நிலையில் நகராட்சி நிர்வாகத் துறையில் மட்டும் அவலக்குரல் எழுந்திருப்பதை சுட்டிக் காட்ட வேண்டிய கடமை நல்லரசுக்கு ஏற்பட்டிருக்கிறது…

நகராட்சி நிர்வாகத் துறையின் பணியாளர்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் சிந்தும் கண்ணீரை கண்டு கொள்ளாமல் இருக்கிறாரே…, கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் என்பதுதான் நல்லரசுக்கு கவலையை தந்திருக்கிறது…

கீழ் நிலையில் உள்ள அரசுப் பணியாளர்களின் அவலக்குரலை முதல்வர் மு. க. ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சியில் குதித்திருக்கிறது நல்லரசு இணையதளம்..

2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 19 பேரூராட்சி மன்றங்கள், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது..

பேரூராட்சி மன்றங்களில் தலைமை எழுத்தர்கள்…
இளநிலை உதவியாளர்கள்….
வரி தண்டலர்கள் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பதவிகளில் பணியாற்றி வரும் 120 உள்ளாட்சி பணியாளர்கள், தாய் துறை என்று அழைக்கப்படும் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் பணியாற்றவே விருப்பம் தெரிவித்து 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே விருப்ப கடிதம் கொடுத்து இருக்கிறார்கள்..

ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டிருந்த 120 பணியாளர்களின் கோரிக்கை மனுக்கள்
கடந்த அக்டோபர் மாதம் தான் தூசி தட்டி எடுக்கப்பட்டு நகராட்சி நிர்வாகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர்…

120 பணியாளர்களுக்கும் பேரூராட்சி மன்றங்களில் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டிய பேரூராட்சி ஆணையரகம் குறட்டை விட்டு கொண்டிருக்கிறது..

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், திமுக ஆட்சியில் மக்களின் கோரிக்கைகள் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்..

ஆனால் ஓராண்டை எட்டிய நிலையிலும் 120 உள்ளாட்சித் துறை பணியாளர்கள் நிம்மதியின்றி புலம்பி வரும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்களே ஏன்❓

தலைமைச் செயலகத்தில் நல்லரசு முனைப்புடன் விசாரணை மேற்கொண்ட போது அதிர்ச்சிக்குரிய தகவல்கள் கிடைத்தன ..

நகராட்சி நிர்வாகத் துறையின் ஆணையராக உள்ள P.பொன்னய்யா ஐஏஎஸ்ஸுக்கும் பேரூராட்சி துறை ஆணையர், மருத்துவர் ஆர் செல்வராஜ் ஐஏஎஸ்ஸூக்கும் இடையே ஒருங்கிணைப்பு சுத்தமாக இல்லை என்ற தகவல் கிடைத்தது..

இதன் காரணமாகவே 120 பேரூராட்சி மன்ற பணியாளர்கள் திரிசங்கு சொர்க்கத்தில் தவித்து வருகிறார்கள் என்பது எவ்வளவு அவலமான ஒன்று…

தமிழக அரசில், உயர்ந்த பதவியோ கீழ் நிலை பணியிடமோ அரசு பணியாளர்களை நிம்மதியாக பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்பதுதான் அனைத்து துறை அரசு பணியாளர்கள் சங்கங்களின் நீண்ட கால கோரிக்கை..

தற்போது மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் பல்வேறு இடர்பாடுகளை எதிர் கொண்டு வருகிறார்கள்.. தலைநகர் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மட்டுமல்லாமல் பெரும்பாலான மாவட்டங்களும் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய அச்சத்தில் உள்ளன..
பொதுமக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களத்தில் நின்று பகல் இரவு பாராமல் உழைக்க கூடியவர்கள் உள்ளாட்சி துறை பணியாளர்கள் தானே . ….

அமைச்சர் கே. என். நேரு அடிக்கடி நகராட்சி துறை அதிகாரிகளை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்துவதைப் போல…மாநிலம் முழுவதும் வளர்ச்சி திட்டங்களை பார்வையிட்டு ஆய்வு செய்வதிலும் காட்டும் ஆர்வத்தை போல….தனது துறையின் கடைநிலை ஊழியர்களிடமும் அமைச்சர் கருத்துகளை கேட்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாக பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை வைக்கின்றனர்…


அப்போது தான் நகராட்சி நிர்வாக துறையில் நடைபெறும் அனைத்து விஷயங்களும் அமைச்சரின் கவனத்திற்கு வரும் என்கிறார்கள்.

அமைச்சர் கே.என்.நேருவின் சொந்த மாவட்டமான திருச்சியில் மூன்று பேரூராட்சி மன்றங்கள், நகராட்சி மன்றமாக தரம் உயர்த்தப்பட்டு ள்ளன..

தமிழ்நாடு காகித ஆலை, புஞ்சை புகளுர், பள்ளப்பட்டி ஆகிய மூன்று மன்றங்களின் பணியாளர்கள் 5 பேரும் பேரூராட்சி மன்ற பணியாளர்களாகவே நீடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்..

இதேபோல் சேலம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருப்பவரும் கே. என். நேரு தான்.. சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம், இடங்கணாசாலை ஆகிய இரண்டு பேரூராட்சி மன்றங்களும் நகராட்சி மன்றமாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அங்கும் 6 பணியாளர்கள் பேரூராட்சி மன்ற ஊழியர்களாகவே நீடிக்க விருப்பம் தெரிவித்து ஓராண்டாக காத்திருக்கிறார்கள்..

திருச்சி மற்றும் சேலம் மாவட்டத்தில் பேரூராட்சி மன்ற பணியாளர்களை சந்தித்து குறைகளை அமைச்சர் கே. என். நேரு ஒருமுறையாவது கேட்டிருந்தார் என்றால் பல மாதங்களுக்கு முன்பாக பணியாளர்களின் விருப்ப கோரிக்கை கவனத்திற்கு வந்திருக்கும்.. அப்போதே நகராட்சி நிர்வாக ஆணையர் பி. பொன்னையா ஐஏஎஸ் மற்றும் பேரூராட்சி ஆணையர் மருத்துவர் செல்வராஜ் ஐஏஎஸ் ஆகியோரின் அலட்சியம் கவனத்திற்கு வந்திருக்கும்.. அந்த நேரத்திலேயே இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளையும் விரட்டி ஒட்டுமொத்தமாக 120 பணியாளர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு கண்டிருக்க முடியும்..

இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளின் மீதான அதிருப்தியை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ்ஸிடம் அமைச்சர் கே என் நேரு வெளிப்படுத்தி இருந்தால் இன்றைய தேதியில் அறிவுரை சொல்கிற வாய்ப்பு நல்லரசுக்கு ஏற்பட்டிருக்காது..

இப்போதும் ஒன்றும் கெட்டு போய் விடவில்லை.. 120 பணியாளர்களின் பரிதாப நிலை, முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு செல்வதற்கு முன்பாக அமைச்சர் கே என் நேரு விரைந்து செயல்பட்டு தீர்வு கண்டார் என்றால், அவரது துறையில் பணியாற்றி வரும் பணியாளர்கள் அமைச்சர் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்…

2 thoughts on “பேரூராட்சி ஊழியர்கள் 120 பேர் கண்ணீர்… கருணை காட்டுவாரா, கே. என். நேரு…”
  1. நல்லரசுவில் செய்திகள் தருவதற்கு அனுமதி வழங்கி ஆதரிப்பீர்களா… வழிமுறைகளை கூறினால் செய்தியாளராக தயாராக உள்ளேன்.
    என்.எஸ்மாரிமுத்து.
    வேம்பார,
    தூத்துக்குடி மாவட்டம்.
    அலைபேசி மற்றும்….
    வாட்ஸ் ஆப் எண் :
    9688884988.
    வணக்கத்துடனும்,
    நன்றியுடனும்….

    1. மகிழ்ச்சி…செய்தி மற்றும் தகவல்களை அனுப்பி வையுங்கள்.. வாட்ஸ்அப் எண் 9080565758

Comments are closed.