Thu. Apr 18th, 2024

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த நாள் முதலாகவே அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்து, அரசு நிர்வாகத்தில் அனுபவம் வாய்ந்தவராக வலம் வந்து கொண்டிருப்பவர் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி. திமுக தலைமையில் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒருவராக திகழும் ஐ.பெரியசாமி, கடந்த ஓராண்டுக்கு மேலாக நிம்மதியின்றி தவித்து வருகிறார் என்பது அவரது விசுவாசிகளின் ஆதங்கமாக இருக்கிறது.

அவர்களிடம் நல்லரசு பேசியபோது, அதிர்ச்சிக்குரிய தகவல்கள் அலை, அலையாக பெருக்கெடுத்தன….

திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி தென்மாவட்ட திமுகவில் அதீத செல்வாக்குப் பெற்றவரும், மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி உயிரோடு இருந்த காலத்திலேயே, அவரது குடும்ப பஞ்சாயத்துகளை காதும் காதும் வைத்த மாதிரி சுமூகமாக பேசி முடித்தவர் என்பதால், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நன்மதிப்பை பெற்றிருப்பவர் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. அவரது சொந்த மாவட்டத்தில் அவரின் செல்வாக்கை கேலிக்குரியதாக்கும் வகையில், சக்கரபாணியை அமைச்சராக்கியதுடன் ஐ.பெரியசாமிக்கு ஒதுக்கப்பட்ட துறையைவிட செல்வாக்குமிக்க துறையை ஒதுக்கி சீனியரை புறக்கணித்துவிட்டனர் என்ற கோபம் இன்றைக்கும் கூட ஐ.பெரியசாமியின் விசுவாசிகளிடம் கனன்று கொண்டே இருக்கிறது.

முதல்வர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக கடந்த 16 மாதமாக அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் குடியேறாமல், சென்னையில்  தனியார் ஹோட்டலில்தான் கூட்டுறவு அமைச்சர் ஐ.பெரியசாமி தங்கி, அரசுப் பணியையும், அரசியல் பணியையும் மேற்கொண்டு வருகிறார். இந்த ஒரு காரணமே போதும், அமைச்சராக இருந்த போதும் நிம்மதியின்றி தவித்துக் கொண்டிருக்கிறார் ஐ.பெரியசாமி என்பதற்கு என்கிறார்கள்.

திமுகவில் தன்னை விட ஜுனியரான சக்கரபாணிக்கு செல்வாக்குமிக்க துறை ஒதுக்கப்பட்டிருப்பதைக் கூட அமைச்சர் ஐ.பெரியசாமி பொறுத்துக் கொண்டாலும் கூட,  உணவுத்துறையில்தான் அதிகமான கொள்முதல்கள் செய்யப்படுகின்றன. அந்த துறை கொள்முதல் செய்யும் உணவுப்பொருட்களை விநியோகம் செய்யும் பணியை மட்டுமே பார்க்க வேண்டிய கட்டாயம் கூட்டுறவுத்துறைக்கு இருக்கிறது. இந்த நடைமுறைகளை கண்டுதான் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்,  அமைச்சர் ஐ.பெரியசாமி. தன் விருப்பத்திற்கு ஏற்ப, தனது துறைக்கு தேவையான கொள்முதல்களை தனித்து செய்ய முடியாத நிலையிலும், ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்து உணவுத்துறை வழங்குபவற்றை விநியோகிக்க வேண்டிய பொறுப்பு மட்டுமே, அதாவது போஸ்ட்மேன் வேலையை செய்யும் துறையாக மட்டும் இருக்கும் கூட்டுறவுத்துறையை கவனிப்பதற்கு எதற்கு தனியாக ஒரு அமைச்சர் தேவையா? என்பதுதான் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆதரவாளர்களின் ஆதங்கமாக இருந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்திலும், திமுக தலைமையிலும் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே பிரபலமாகிவிட்டவர் ஐ.பெரியசாமி.  திமுகவை சுவாசமாக்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அவரை நாடி வரும் திமுக தொண்டர்களுக்கு, அவர்கள் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்கூட, அவர்களின் குறைகளை, கோரிக்கைகளை பரிவுடன் கேட்டு நிறைவேற்றி வருபவர்தான் ஐ.பெரியசாமி என்று கூறும் அவரது விசுவாசிகள், கடந்த 16 மாதமாக துளியும் உற்சாகமின்றியும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியும் இருப்பதை கண்கொண்டு பார்க்க முடியவில்லை என்று சோக கீதம் வாசிக்கின்றனர். 

இதே குரலிலேயே  கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் வேதனையை வெளிப்படுத்துவதுதான் அதிர்ச்சி ரகம்.

கடந்த ஆண்டு மே மாதம் கூட்டுறவுத்துறைக்கு அமைச்சராக ஐ.பெரியசாமி பொறுப்பு ஏற்றபோது அந்த துறையின் செயலாளராக பதவி வகித்தவர் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்திலான ஐஏஎஸ் முகமது நசிமுத்தீன். இயல்பாகவே இவர் துறையில் ஆர்வத்துடன் பணியாற்றக் கூடியவர் இல்லை என்பதைவிட, அமைச்சர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பணியாற்றும் குணம் படைத்தவர் என்றும் சொல்ல முடியாது.

ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு சிறுசிறு உதவிகளை, அதுவும் சட்டத்திற்குட்பட்டு செய்து தர வேண்டும் என்றாலும்கூட  அமைச்சரின் அறிவுரைகளை எளிதாக நிறைவேற்றமாட்டார் நசிமுத்தீன் ஐஏஎஸ். கூட்டுறவுத்துறை செயலாளராக இவர் நீடித்தவரை கூட்டுறவுத்துறையில் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை சோம்பல்தான் நிலவி வந்தது. ஆனால், கடந்த மாதத்தில் அவர் மாற்றப்பட்டு துடிப்பாக பணியாற்றக் கூடியவர் என்ற  புகழுக்கு உரிய டாக்டர்  ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், உணவு மற்றும் கூட்டுறவுத்துறையின் செயலாளராக பொறுப்பு ஏற்ற நாளில் இருந்தே கூட்டுறவுத்துறை விழித்துக் கொண்டு வேகமாக பணியாற்ற தொடங்கி விட்டது.

நாள்தோறும் கூட்டுறவுத்துறையின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் ஆய்வு செய்து, துறை அலுவலர்கள், பணியாளர்கள் முழுவீச்சில் செயல்பட வேண்டும் என்று உத்தரவுகளை பிறப்பித்து விரட்டிக் கொண்டிருக்கிறார் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை ஆகிய இரண்டு துறைகளிலும் ஆய்வுக் கூட்டங்களை அடிக்கடி நடத்தி, இரண்டு துறைகளிலும் உத்வேகத்தை ஏற்படுத்தி வருகிறார்.

அவரின் வேகத்திற்கு ஏற்ப, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியும் ஈடு கொடுத்து பணியாற்றும் நேரத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சரான ஐ.பெரியசாமி எங்கே என்று தேடும் நிலைதான் இருந்து கொண்டிருக்கிறது. சென்னையில் அவர் இருப்பதைவிட அவரது சொந்த மாவட்டமான திண்டுக்கல்லில்தான் பெரும்பாலும் வாசம் புரிகிறார்.  கடந்த ஒருமாதத்தில் மட்டுமே அமைச்சர் சக்கரபாணியின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்த்தால், நாள் தவறாமல் ஏதாவது ஒரு அரசுப்பணியில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், கூட்டுறவுத்துறை அமைச்சரான ஐ.பெரியசாமி கிட்டதட்ட தலைமறைவாகிவிட்டார் என்று சொல்லும் அளவிற்குதான் அமைச்சர் பணியின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.

அதேநேரத்தில் சீனியரை சீண்டும் வகையில் உணவுத்துறையின் செயல்பாடுகளிலும் திண்டுக்கல் மாவட்டத்தில் கட்சிப் பணியாற்றி வருவதிலும் வழக்கத்திற்கு மாறான வேகத்தை அமைச்சர் சக்கரபாணி காட்டி வருவதாக குமறுகிறார்கள் சீனியரின் ஆதரவாளர்கள்.

கடந்த ஜூலை மாதத்தில் இரண்டொரு நாட்கள் மட்டுமே தமது அமைச்சர் பணியில்  ஐ.பெரியசாமி கவனம் செலுத்தியிருக்கிறார். எஞ்சிய நாட்களில் அமைச்சரின் செயல்பாடுகளை பற்றி எந்தவொரு தகவலும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் டிவிட்டர் பக்கத்தில் பதிவாகவில்லை. அமைச்சர் ஐ.பெரியசாமியின் டிவிட்டர் பக்கத்திலும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இவரோடு அமைச்சர் சக்கரபாணியின் செயல்பாடுகளை ஒப்பீட்டு பார்த்தால், செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் சக்கரபாணியின் டிவிட்டர் பக்கத்தில் நாள்தோறும் அவர் ஆற்றிய பணியின் விவரம், புகைப்படங்களோடு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதுவும், தமிழ்நாடு அரசுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உலகளவில் புகழைத் தேடி தந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு உள்ளிட்ட எந்தவொரு நிகழ்விலும் அமைச்சர் ஐ.பெரியசாமி துளியும் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் அதிர்ச்சிக்குரிய அம்சமாக பார்க்கப்படுகிறது. 

முதல்வர் தலைமையிலான அரசிலும் திண்டுக்கல் மாவட்ட அளவிலும் தலைமைச் செயலகத்திலும் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்ற போட்டியில் சீனியர் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் ஜுனியர் அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவரிடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் பனிப்போரில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பவர், ஐஏஎஸ் அதிகாரியான டாக்டர் ராதாகிருஷ்ணன்தான் என்கிறார்கள் கூட்டுறவுத்துறை உயரதிகாரிகள் சிலர்.

இரண்டு அமைச்சர்களின் துறைகளையும் கவனிப்பதற்கு ஒரே ஒரு அரசு செயலாளர்தான் என்பதால், இந்த இரண்டு துறைகளுக்கு செயலாளராக பொறுப்பு ஏற்றிருக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன், இரண்டு துறைகளின் செயல்பாடுகளிலும் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்.

ரேஷன் கடைகள், நெல் கொள்முதல் நிலையங்கள், அரிசி உற்பத்தி ஆலைகள் என இரண்டு துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து மையங்களுக்கும் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டு , அரசு அலுவலர்கள் வேகமாக பணியாற்ற வேண்டும் என்று உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

உணவுத்துறையின் உயர் அதிகாரிகளின் கூட்டத்தை இரண்டு, மூன்று முறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் கூட்டி, ஆய்வுக் கூட்டத்தை நிறைவு செய்து, பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் ஒரு ஆய்வுக் கூட்டத்தை கூட்டி உணவுத்துறையில் பல்வேறு சீர்த்திருத்தங்களை முன்னெடுத்து வருகிறார்.

ஆனால், கடந்த ஒரு மாத காலத்தில் கூட்டுறவுத்துறையின் ஆய்வுக் கூட்டத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் கூட்ட முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்.

அரசுத்துறையைப் பற்றி துளியளவு ஞானம் இல்லாதவர் அமைச்சராக இருந்தாலும்கூட, அதுவும் முதல்முறையாக அமைச்சராக பதவியேற்றுக்கொள்ளும் புதுமுகமாக இருந்தாலும்கூட அவரவரின் மனப்போக்கிற்கு ஏற்ப செயல்பட்டு, துறை பற்றிய அனைத்து விவரங்களையும் மிகப் பொறுமையாகவும், பக்குவமாகவும்  விளக்கி, வெள்ளந்தியான அமைச்சரைக் கூட சூப்பர் அமைச்சர் என்று பெயர் வாங்கும் அளவுக்கு மாற்றும் சக்தி படைத்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் என்று கூறும் தலைமைச் செயலக அலுவலர்கள், திமுக தலைமைக்கு மிகவும் வேண்டப்பட்ட இரண்டு அமைச்சர்களிடம் நிலவி வரும் பனிப்போரில் சிக்கி, தவித்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

ஒருவரின் துறையை வேகமாக முன்னெடுத்துச் சென்றால் மற்றொரு அமைச்சர் கோபம் கொள்வாரோ என்ற அச்சவுணர்வு ஐஏஎஸ் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் தலைகாட்டுகிறதோ? என்ற சந்தேகம், கூட்டுறவுத்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டங்களின் போது காண முடிகிறது என்கிறார்கள் அந்த துறையின் உயர் அலுவலர்கள் சிலர்.

இரண்டு அமைச்சர்களிடமும் நல்ல பெயரை பெற்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் மதிமேல் பூனை போல மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸுக்கு உருவாகியிருப்பதுதான் மிகவும் பரிதாபதத்திற்குரியது என்கிறார்கள் சக ஐஏஎஸ் அதிகாரிகள்.