Sat. Nov 23rd, 2024

தாரை இளமதி.. சிறப்பு செய்தியாளர்..

சென்னை எழும்பூரில் உள்ளது அரசு தாய் சேய் நல மருத்துவமனை.. சிறப்பு மருத்துவர்கள் நிறைந்துள்ள இந்த மருத்துவமனையில் உயர்தரமான சிகிச்சைககள் வழங்கப்பட்டு வருவதால் தலைநகரில் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலும் இந்த மருத்துவமனை மிகமிக பிரபலம். எல்லா அரசு மருத்துவமனைகளிலும் உள்ளதைப் போல இங்கும் உணவகம் (கேன்டீன்) செயல்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள மற்ற அரசு மருத்துவமனைகளில் இயங்கி வரும் உணவகங்களில் எழாத சர்ச்சை, எழும்பூர் உணவகம் மீது எழுந்துள்ளதும், அந்த சர்ச்சைகளின் கதாநாயகனாக ஊடகத்துறையின் ஆளுமை ஒருவரை சுற்றி வருவதுதான் அதிர்ச்சியான அம்சமாக பார்க்கப்படுவதுடன், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களிடம் சூடான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதுவும் புதிதாக திறக்கப்பட்டுள்ள உணவகத்தை, மதிமுக கேன்டீன் என்றுதான் அழைக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன், எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணையை நடத்திய போது கிடைத்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகம்.

இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இந்த கேன்டீன் துவங்கப்பட்டுள்ளது. அப்போதே அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த எழும்பூர் அரசு மருத்துவமனை இயக்குனர் விஜயா,சிறப்பு யாகம், பூஜை ஆகியவற்றுடன் திறப்பு விழா கண்ட உணவகத்தை, முதல் நாளிலேயே திடீரென்று மூட வைத்துள்ளார் இயக்குனர் விஜயா.

அதற்கு காரணம், மருத்துவமனை நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல், உணவகத்தை திறந்ததுதான். அதே மருத்துவமனையில் ஏற்கெனவே ஒரு உணவகம் செயல்பட்டு வந்த நேரத்தில், இரண்டாவது உணவகத்திற்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? என்று இயக்குனர் விஜயா, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, அவரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

நான் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்ல போக, உணவகத்தை நடத்தியவரிடம் விசாரணையை துவக்கியுள்ளார் இயக்குனர் விஜயா. அப்போதுதான், முதல் அமைச்சரின் செயலாளர்களில் நெம்பர் 2 என்று அழைக்கப்படுகிற மருத்துவர் உமாநாத் ஐஏஎஸ்ஸின் வாய்மொழி உத்தரவின் பேரில், எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் புதிய உணவகம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்திருக்கிறது.

இந்த உணவகத்திற்காக பொதுப்பணித்துறை கட்டுமானப் பணியை மேற்கொண்டுள்ளது என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விசாரணையின் அனைத்து விவரங்களையும் அறிந்துகொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவர் உமாநாத் ஐஏஎஸ்ஸிடம் தொலைபேசி வாயிலாக விசாரணை நடத்தியபோதுதான், இந்த செய்தியின் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கதாநாயகன் பெயர் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கலைஞர் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் திருமாவேலனின் பரிந்துரையை ஏற்று, புதிய உணவகத்திற்கு அனுமதி வழங்கியதாக கூறியுள்ளார் மருத்துவர் உமாநாத் ஐஏஎஸ்.

அதைக் கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான தன்னிடம் கூட ஒரு வார்த்தை கூறாமல், நீங்களாக எப்படி தனியார் ஒருவருக்கு அனுமதி தருவீர்கள்?

வாழ்நாள் முழுவதும் போராட்டம், ஆர்ப்பாட்டம், சிறை வாழ்க்கை எனஇளமைக்காலத்தை தியாகம் செய்துள்ள திமுக நிர்வாகிகள் எண்ணற்ற பேர் இருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் கூட அவர்களுக்கு ஓர் உதவியும் செய்ய முடியாமல் அமைச்சர்களான நாங்களே திணறிக் கொண்டிருக்கும் நேரத்தில், உயர் பதவியில் இருக்கும் நீங்கள் திமுக நிர்வாகிகளின் கோபத்தை தூண்டிவிடும் வகையில் தன்னிச்சையாக செயல்பட்டால் எப்படி ? என்று சத்தம் போட்டுள்ளார்.

மருத்துவர் உமாநாத் ஐஏஎஸ்

அப்போதும்கூட உமாநாத் ஐஏஎஸ் அசரவில்லை. அதன்பிறகு திருமாவேலனிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஐஏஎஸ்ஸைப் போலவே, திருமாவேலனும் அசராத நிலையிலும், அவர் வெளிப்படுத்திய வார்த்தைகள்,  மாண்புமிகுவின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் இருந்ததாக வருத்தப்படுகின்றனர் அமைச்சரின் விசுவாசிகள்.  

இந்தளவு அமைச்சர் மா.சுப்பிரமணியம் கோபப்படுவதற்கு காரணமாக கூறப்படும் தகவல்தான், திமுக தலைமைக்கே சவால் விடும் வகையில் உள்ளது.

திருமாவேலன் பரிந்துரையின் பேரில் எழும்பூர் அரசு மருத்துவமனையில் உணவகத்தை திறந்தவர், மு.க.அழகிரியின் ஆதரவாளர் என்ற தகவலை கேட்டுதான் கொந்தளித்துவிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியம் என்கிறார்கள் அவர்களது ஆதரவாளர்கள்.

துறை அமைச்சர் என்ற முறையில் மா.சுப்பிரமணியம் கொதித்து எழுந்ததைப் போலவே, எழும்பூர் அரசு மருத்துவமனை அமைந்திருக்கும் பகுதி வடசென்னை மாவட்ட திமுகவின் எல்லைக்குள் இருப்பதால், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பி.கே.சேகர்பாபும், டாக்டர் உமாநாத் ஐஏஎஸ், திருமாவேலன் ஆகியோரிடம் தனது கோபத்தை கடுமையாக வெளிப்படுத்தியுள்ளார்.

குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் கட்சிக்காக உயிரைக் கொடுத்து வேலை செய்து கொண்டிருக்கும் திமுக முன்னணி நிர்வாகிகளுக்கே, ஆட்சி அதிகாரம் வந்த பிறகும் கூட அன்றாடம் வருவாயை தேடி தரும் வகையில் நிர்வாகிகளுக்கு ஒரு வழியை ஏற்படுத்தி தர முடியாமல் நாங்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறோம். அரசு அதிகாரியாக இருப்போர் எல்லாம் அவரவர் இஷ்டத்திற்கு திமுக கட்சிக்காரர்களிடமே விளையாட்டை காட்டினால் எப்படி? என்று எரிந்து விழுந்துள்ளார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு.

அவரின் ஆவேசத்தை கொஞ்சம் கூட சட்டை செய்யாத டாக்டர் உமாநாத் ஐஏஎஸ், எதுவாக இருந்தாலும் முதல் அமைச்சரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று அமைச்சர்கள் இருவரையும் முதல்வர் பெயரைச் சொல்லி மிரட்டும் தொனியில் பேசியுள்ளார் என்ற தகவலும் கிடைத்தது.  

அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், பி.கே.சேகர்பாபு ஆகியோரைப் போல, எழும்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஐ.பரந்தாமனும், புதிய உணவகம் திறப்பு விவகாரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்து, சம்பந்தப்பட்ட இருவரிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், இருவரிடம் இருந்து வந்த பதிலை கேட்டு அவரும் கூனி போய்விட்டார் என்கிறார்கள் திமுக முன்னணி நிர்வாகிகள்.

ஐ. பரந்தாமன் எம்எல்ஏ..

புதிய உணவகம் திறப்பிற்கு மாண்புமிகு அமைச்சர்கள், ஆளும்கட்சி எம்எல்ஏ ஆகியோரின் எதிர்ப்பு கடுமையாக இருந்து வரும் நிலையில், புதிய உணவகத்தின் செயல்பாடுகளால், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அவர்களின் ஆதங்கமோ வேறு விதமாக இருக்கிறது.

நாள்தோறும் பல ஆயிரம் பேர் வந்து செல்லும் மருத்துவமனையில் செயல்படும் உணவகம், மிகுந்த தரத்துடன் இருப்பது மிகமிக முக்கியம். கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் ஆயிரக்கணக்கில் சிகிச்சைப் பெறும் மருத்துவமனையில், அவர்களின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் வகையில் உணவுகளும் சத்துள்ளதாகவும் தரம் மிகுந்ததாகவும் இருக்க வேண்டியது முதன்மையான ஒன்று. ஆனால், புதிதாக திறக்கப்பட்டுள்ள உணவகத்தில் விற்பனை செய்யப்படும் பாலே, மிகமிக தரம் குறைந்ததாக இருக்கிறது. மற்ற உணவுப் பொருட்களின் தரத்தை பற்றி சொல்லவே முடியாது.

மருத்துவப் பணி என்பது 24 மணிநேரமும் விழிப்புடனும் உற்சாகத்துடனும் இருக்கும் சேவை துறையாகும்.

அசதி ஏற்படும் போது தேநீர், காபி உள்ளிட்டவற்றை பருக நினைத்து அந்த உணவகத்திற்கு சென்றால் சுகாதாரமற்று இருக்கிறது. உணவும் தரமற்று இருப்பதால், திறப்பு விழா கண்ட நாள் முதலாகவே மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் யாரும் புதிய உணவகத்திற்கு செல்வதே இல்லை. ஏற்கெனவே உள்ள உணவகத்தைதான் பயன்படுத்தி வருகிறோம். புதிய உணவக வருகையால், பழைய உணவகத்திற்கு மூடு விழா நடத்தும் காரியத்தையும் ஒருசிலர் இப்போது கையில் எடுத்துள்ளார்கள்.

துப்புரவுப் பணியாளர்கள், இரவு நேர காவலர்கள் என நூற்றுக்கணக்கானோர், அதிகாலையிலோ, நள்ளிரவிலோ பணி முடித்து வீடு திரும்பும்போது வயிற்றை நிறைத்துக் கொள்ள சிற்றுண்டி எடுத்துக் கொள்ள, அந்த உணவகத்திற்குச் சென்றால், காய்ந்து போனது அல்லது கெட்டுப் போன உணவுகளைதான் வழங்குகிறார்கள். விலையும் அதிகமாக இருக்கிறது என்று ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

அரசு மருத்துவமனைகளில் விலை குறைந்த, தரம் மிகுந்த உணவுப் பொருட்களை வழங்கினால்தான் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும். அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த பணியாளர்களை உள்ளடக்கி கூட்டுறவு பண்டகசாலையை திறந்தால்கூட, அந்த மருத்துவமனைக்கு உரிய வருவாய் கிடைக்கும். அனைவருக்கும் தரமான உணவுகள் கிடைக்கிறதா என்பதை மருத்துவமனை நிர்வாகம் அடிக்கடி ஆய்வு செய்து, உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.

ஆளும்கட்சியினரையோ பிற அரசியல்கட்சியினரையோ மருத்துவமனை வளாகத்திற்குள் வியாபாரம் நடத்த அனுமதித்தால் சேவை நோக்கமே இருக்காது. மக்களுக்கு சேவை அளிக்கும் அரசு நிறுவனங்களில் அரசியல்வாதிகள் தலையிட்டால் அதை கண்டிக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு ஊடகத்துறைக்குதான் அதிகமாக உள்ளது. ஆனால், அந்த ஊடகத்துறையைச் சேர்ந்த ஒருவரே, வியாபார நோக்கத்தில் மருத்துவமனையில் உணவகத்தை தொடங்கி பிரச்னைகளை உருவாக்கி வருகிறார் என்றால், என்னத்தைச் சொல்ல என நொந்து கொள்கிறார்கள் அரசு மருத்துவர்கள்.

ஜுனியர் விகடனில் பணிபுரிந்த போது பெரியோர்களே.. தாய்மார்களே என்ற அரசியல் கட்டுரைகள் எழுதி அரசியல்வாதிகளின் அட்டூழியத்தை, முகமூடிகளை கிழித்தீர்களே திருமாவேலன்… அதே பாதையில் நீங்களும் செல்வதுதான் ஊடக தர்மமா?…

 விகடன் நிறுவனத்தில் இருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு தலைமை செய்தி ஆசிரியராக பணியிடம் மாறிய நாள் முதலாக, கலைஞர் தொலைக்காட்சியில் பத்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த விசுவாசமிக்க எண்ணற்ற ஊழியர்களின் வயிற்றில் அடித்து அவர்களை எல்லாம் வெளியேற்றினீர்கள்.

அதற்கடுத்து கலைஞர் டிவியில் பங்குதாரராக ஆகும் முயற்சியில் வியூகம் வகுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களின் லட்சியக் கனவு நிறைவேற இரண்டு துறைகளை தன் வசம் வைத்துள்ள வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவரும், உயர்த்த இடத்தில் உங்களை வைத்து அழகுப் பார்க்க துடித்துக் கொண்டிருக்கிறார்.

 இந்தளவுக்கான உயரம் போதாது என்று அரசியல்வாதிகளின் வயிற்றில் அடிக்கும் வேலையிலும் இறக்கிவிட்டீர்களே.. இதுதான் இத்தனை ஆண்டுகால ஊடக பயணத்தில் நீங்கள் கற்றுக் கொண்ட தர்மமா?

அரசியல்வாதியின் அத்தனை நற்குணங்களும் உங்களுக்கு கை கூடிய பிறகு நேரடியாகவே அரசியல் களத்திற்கு வந்துவிட வேண்டியதுதானே.. எதற்காக ஊடகவியலாளர் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு பசுந்தோல் போர்த்திய புலியாக வலம் வந்து ஊடகத்துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்…