Thu. Apr 10th, 2025

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கை:

பிரதமர் பதவி தம் மீது திணிக்கப்பட்ட போது அரசியல் பேராண்மையோடு மறுத்தவர் அன்னை சோனியா காந்தி. பதவி மறுப்பாளர்களான சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை களங்கப்படுத்துகிற முயற்சிகளில் பிரதமர் மோடியோ, பா.ஜ.க.வினரோ வெற்றி பெற முடியாது.

சிம்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.வின் எட்டாண்டு கால ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

கடந்த 8 ஆண்டுகால ஆட்சி குறித்து பா.ஜ.க.வினர் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.

ஆனால், மோடியின் ஆட்சிக் காலத்தில் ஏழை, எளியோரின் வாழ்க்கைத்தரம் படுபாதாளத்தில் சென்று கொண்டிருக்கிற போது, மோடியின் நெருங்கிய நண்பர்களான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 400 சதவிகிதமும், கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 1830 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது.

பிரதமர் மோடியின் ஆதரவினால் தான் கௌதம் அதானியின் அசுர வளர்ச்சி ஏற்பட்டது என்பதை பகிரங்கமாக குற்றம் சாட்ட விரும்புகிறோம்.

10 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன்சிங் மற்றும் அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டவர்கள் மீது இந்தியாவிலுள்ள எந்த நீதிமன்றத்திலும் இவர்கள் மீது ஊழல் வழக்கு இருப்பதாக பா.ஜ.க.வினரால் கூற முடியுமா ?

தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதியின்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 3 விலையைக் குறைத்திருக்கிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி தி.மு.க. ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு தமிழக பா.ஜ.க.விற்கு என்ன அருகதை இருக்கிறது ?

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மதவாத அரசியல் மூலம் மக்களைப் பிளவுபடுத்தி, பொருளாதார பேரழிவில் சிக்கியுள்ள மக்களின் கவனத்தை திசைத்திருப்பி, அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற பிரதமர் மோடியின் கனவு நிச்சயம் நிறைவேறாது.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.