Sun. May 5th, 2024

பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று காலை நடைபெற்றது. அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்கு முன்பாக பாமக தலைவர் பதவியில் 25 ஆண்டு காலம் பணியாற்றி வந்த ஜி.கே.மணி, அப்பதவியில் இருந்து விலகியதையடுத்து, பாமக தலைவராக பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர் ராமதாஸ் அறிவித்தார். தொடர்ந்து, அன்புமணி ராமதாஸுக்கு பாமக முன்னணி தலைவர்கள் ஆளுயர மாலை அணிவித்து செங்கோல் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து, தலைவர் பதவியில் இருந்து விலகிய ஜி.கே.மணிக்கு, பாமகவின் கௌரவ தலைவர் பதவி வழங்கப்படுவதாக மருத்துவர் ராமதாஸ் அறிவித்தார். அவரின் அறிவிப்பை அடுத்து பேசி ஜி.கே.மணி, மருத்துவர் ராமதாஸுக்கும், புதிய தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸுக்கும், பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன், தொடர்ந்து தொய்வின்றி கட்சிப் பணியாற்றுவதாகவும் உறுதியளித்தார்.

அன்புமணியை கோட்டையில் அமர வையுங்கள்…

பொதுக்குழுவில் மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது:

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை சொல்லி இருக்கிறேன். கட்சி ஆரம்பித்த ஓராண்டில் டெல்லியில் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். இப்போது பஞ்சாபிலும் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். பாமகவைப் போல சிறப்பான கொள்கைகளை வைத்திருக்கிற கட்சி,இந்தியாவில் எங்காவது இருக்கிறதா.. இல்லையே. அப்படியென்றால் பாமக ஏன் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. 4 இடங்களில் வெற்றிப் பெற்ற பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் ஏன் 40 இடங்களில் வெற்றி பெற முடியவில்லை. இந்த தவறை இனியும் செய்யக் கூடாது. பாமகவுக்கு இளம் தலைவரை கொடுத்திருக்கிறோம்.

கெஜ்ரிவாலின் 6 அம்ச திட்டத்தை கடைப்பிடித்து அங்கு ஆட்சியைப் பிடித்தார்கள். 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை எல்லாம் கட்சியில் சேர்ந்தார்கள். போலி வாக்காளர்களை எல்லாம் நீக்கினார்கள். கைபேசி எண்ணை வழங்கியதை அடுத்து அந்த எண்ணில் 5 லட்சம் பேர் பேசினார்கள். மாற்றத்திற்கான கலைக்குழுவை உருவாக்கினார்கள். மெட்ரோ வேவ் என்ற திட்டத்தை செயல்படுத்தினார்கள். மக்கள் கூடும் இடங்களில் ஆம் ஆத்மி கலைக்குழுவினர் பரப்புரைகளை மேற்கொண்டனர். வாக்குச்சாவடி மேலாண்மை இயக்கம் செய்தார்கள். இவையெல்லாம் நமது அரசியல் பயிற்சி பயிலரங்களில் பல ஆண்டுகளாக செய்து வந்திருக்கிறோம்.


ஒரு தொகுதிக்குட்பட்ட பாமக நிர்வாகிகள் ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு லட்சம் வாக்காளர்களை சேர்க்க முடிவது சிரமமா, யோசித்து சொல்லுங்கள். கட்சியில் பல இடங்களில் கோஷ்டி இருக்கிறது. ரியல் எஸ்டேட் பிசினஸில் நீங்கள் காட்டிய ஆர்வத்தை கட்சிக்கு காட்டவில்லை. சென்னையில் ஒரு வார்டில் பாமகவுக்கு இரண்டே இரண்டு வாக்குகள் விழுந்திருக்கின்றன.


அன்புமணிக்கு சொல்லிக் கொள்கிறேன். காக்கைகள் வரும்,.போகும். உழைப்பவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு தினம்தோறும் என்ன செய்தாய் என்று கேட்டு கட்சியை வளர்க்க வேண்டும். இரவு 9 மணிக்கு மேல் பலர் நன்றாக பேசுகிறார்கள். 43 ஆண்டு காலம் இந்தக் கட்சிக்கு உழைத்திருக்கிறேன். இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். திமுக சுவர் விளம்பரத்தை பார்த்தேன். கலைஞர் பெய வருகிறது. மு.க.ஸ்டாலின் பெயர் வருகிறது. திமுக ஒரு கட்டுப்பாடான இயக்கம். எல்லா கட்சிகளைவிட இளைஞர்கள், இளைஞிகள் அதிகமாக இருக்கிறார்கள். திமுக கூட்டணி வைக்கலமா, அதிமுகவுடன் கூட்டணி வைக்கலமா என்று கேட்டால் அமைதியாக இருக்கும் நிர்வாகிகள், தனித்து போட்டியிடலாமா என்று கேட்டால் அனைவரும் கை தூக்குவார்கள். ஆனால், மனதில் ஒன்று வைத்துக் கொண்டு பல நிர்வாகிகள் இருக்கிறார்கள்.


பாமக நிர்வாகிகளின் திருமணத்தின் போது எங்கள் குடும்பத்து பெண்களை போஸ்டரில் போடாதீர்கள். அங்குதான் காக்கைகள் நுழைகிறார்கள். அன்புமணியை முதல் அமைச்சராக்க முடியும் என்று சபதம் ஏற்கின்றவர்கள்தான் உண்மையான பாட்டாளி.
2024 எம்பி 2026 எம்எல்ஏ தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் பாமகவுக்கு வரும் டிசம்பர் மாதம் இரண்டு தேர்தல் என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறேன். 3 வது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸை கோட்டையில் அமர வைப்பதற்காக இன்றிலிருந்து உழைப்போம் என்று உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் தெரிவித்தார்.