Fri. Apr 26th, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஈகைப் பண்பிற்கு பெருமை சேர்ப்பவர்கள் எங்கே?

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்…

தமிழினம் துளிர்க்கவே கூடாது என்று தீய எண்ணத்துடன் இலங்கை மண்ணின் சொந்த மக்களான பல லட்சம் ஈழத்தமிழர்களை கொன்றழித்த சிங்கள ராணுவப் படைக்கு தலைமை வகித்த பக்சே சகோதரர்கள், அந்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் இந்தநேரத்தில், இலங்கை வீதிகளில் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக எதிரொலிக்கும் எதிர்ப்பு முழக்கங்கள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சர்வாதிகாரிகளான பக்சே சகோதரர்களை ஆட்சிப் பீடத்தில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்பதற்காக ஆவேசமாக முழக்கம் எழுப்பும் போராட்டக்காரர்களிடையே இன வேறுபாடுகளை இன்றைய தினம் பார்க்க முடியவில்லை என்பது தாய் தமிழ் மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியிருக்கும்.

கரம் நீட்டும் தூரத்தில், தமிழினம் துன்பப்படுகிறதே என்ற வேதனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கையில் வாழும் தொப்புள் கொடி உறவான தமிழ் மக்கள், பொருளாதார நெருக்கடியால் அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் நித்தம் நித்தம் அவதிப்பட்டு வரும் அவலநிலையில் இருந்து விரைவாக விடுதலைப் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், இலங்கை தமிழ் மக்களுக்கு தமிழக அரசு நேரிடையாகவேஅனைத்து வகையான உதவிகளையும் வழங்கும் என்று அறிவித்தார்.

உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தமிழகத்தில் இருந்து நேரடியாக இலங்கைக்கு அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி  வேண்டுகோள் விடுத்து மடல் தீட்டினார். அதே நாளில் சட்டப்பேரவையிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தனித்தீர்மானத்தையும் முன்மொழிய, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒருதாய் மக்கள் என்ற மனிதநேயத்தோடு, இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகம் வந்த ஈழத்தமிழர்களை சட்டவிரோதச் செயல் என்ற அடிப்படையில் அணுகிவிடாமல், வாழ்வை இழந்து நிர்கதியாக வந்துள்ள தமிழ் மக்களுக்கு எந்தவிதத்திலும் அவமானம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து, ஈழ தமிழ் மக்களை தமிழக மண்ணில் இளைப்பாற வைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இலங்கையில் மட்டுமின்றி, அந்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து அந்நிய மண்ணில் வாழும் ஈழத் தமிழர்கள், 2009 ஆம் ஆண்டு துன்பியல் நிகழ்வை நெஞ்சில் சுமந்துக் கொண்டு, திமுகவுக்கு எதிரான மனப்போக்கோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இலங்கை நாடாளுமன்றத்தில் திமுக ஆட்சிக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து ஆற்றிய உரைகள் வரலாறாகியிருக்கிறது.

வெறும் பாராட்டுகளுக்காக மட்டுமல்லாமல், உள்ளன்போடு, பரிவோடு இலங்கைத் தமிழர்களுக்கு உதவ, பல வழிகளில் மனிதநேய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசோடு, தமிழக மக்களும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என அன்புக் கட்டளையிட்டார்.

மே 3 ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கையில் வாழும் தமிழக மக்களின் துயர வாழ்க்கையை நினைவுக்கூர்ந்து அறிக்கை வெளியிட்டு, பொருளாதாரத்தில் வளமான நிலையில் உள்ள செல்வந்தர்கள், முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை அனுப்பி வைப்பதற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வரின் அறிவிப்பை ஏற்று திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மறுநாளே (மே 4) வழங்கப்பட்டது. அதற்கு முன்பாக ஏப்ரல் 29 ஆம் தேதி சட்டப்பேரவையிலேயே 50 லட்சம் ரூபாய் தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து வழங்குவதாக அறிவித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்த நிமிடம் வரை முதல்வரை சந்தித்து பணம் வழங்கியதாக தகவல் இல்லை.

அதேபோல, அதிமுக சார்பிலும் இதுவரை நிவாரண நிதித் தொகை தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

அதேசமயம், திமுக எம்பிக்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள் என்றும் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.  தேய்பிறையாகிக் கொண்டிருக்கும் தேமுதிக சார்பில் கூட ரூ. 5லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் கட்சிகளைக் கடந்து, பிரபல ஜி.ஆர்.டி.ஜிவல்லரி நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது. Andritz Technologies Pvt ltd நிறுவனம் 50 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளது.

முதல்வரின் அறிவிப்பு வெளியாகி 5 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால், இலங்கை தமிழ் மக்களின் கண்ணீரை துடைக்கும் வகையில் தமிழ் மண்ணில் இருந்து ஆதரவுக் கரங்கள் ஏனோ அதிக எண்ணிக்கையில் நீளவில்லை என்பது வருத்தமான விடயம் என்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள்.

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றப் பிறகு பொதுமக்களிடம் நிதி கேட்டு முதல்வர் அறிக்கை வெளியிட்டிருப்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தவும், மருத்துவச் சிகிச்சையை குக்கிராமங்களிலும் உள்ள மக்களுக்கும் கொண்டு செல்வதற்கும் கடந்த ஆண்டு நிவாரண நிதி திரட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது மனிதநேயமிக்கவர்கள் ஆர்வமாக முன்வந்து முதல் அமைச்சரின் நிவாரண நிதிக்கு நன்கொடைகளை வாரி வழங்கினர். ஆனால், ஈழத் தமிழர்களின் துயர் துடைக்க துடிக்கும் முதல்வரின் மனிதநேய சேவை மகத்தான வெற்றிப் பெற, கைகோர்க்க முன்வந்தவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தைக் கூட எட்டவில்லை என்பது மிகவும் கவலையளிக்க கூடியது என்கிறார்கள்.  

இப்படிபட்ட நேரத்தில், யாசகம் செய்து திரட்டிய பணத்தை கொரோனா நிதிக்காக ரூ.5.10 லட்சத்தை வாரி வழங்கிய நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பூல்பாண்டி, இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரையில் யாசகம் செய்து திரட்டிய ரூ.50 ஆயிரத்தை இலங்கைத் தமிழர்களின் துயர் துடைக்க வழங்கியுள்ளார் என்ற செய்தியும் ஊடகங்களில் வெளியானது.

இதன் பிறகும் கூட புகழ்பெற்ற தன்னாட்சி அதிகாரம் பெற்ற தனியார் பல்கலைக்கழகங்கள், புகழ்பெற்ற தனியார் கல்லூரி நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், தமிழக அரசோடு இணக்கமாக இருக்கும் எண்ணற்ற பிரபல  தொழில் நிறுவனங்கள் இலங்கை தமிழர் துடைக்க நிவாரண நிதியை வாரி வழங்கியிருந்தால், உலகெங்கும் பரவியிருக்கும் தமிழ் மக்கள்,  ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் மீது கொண்டிருக்கும் கவலையில் இருந்து இந்நேரம் விடுபட்டிருப்பார்கள்.

பெரு வெள்ளமாக பீறிட்டு இருக்க வேண்டிய இலங்கை நிவாரண நிதி, ஒன்றிரண்டு கோடி என்ற வகையில்  மட்டுமே குவிந்துக் கொண்டிருப்பதன் மூலம் தமிழர்களின் ஈகைப் பண்புக்கு களங்கம் ஏற்பட்டுவிடுமோ? என்று அஞ்சுகிறார்கள் தமிழ் தேசியவாதிகள்.

திமுக இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினிடம் கூட ஆர்வத்தோடு நிதி கொடுப்பவர்களின் எண்ணிக்கை மிகமிக குறைவாகதான் இருக்கிறது.

தூத்துக்குடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஜஸ்டின் என்பவர், திமுக இளைஞரணி வழங்கிய நிதியுதவியுடன் தொழில் துவங்கியுள்ள நிலையிலும்கூட, இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட, ரூ. 25 ஆயிரத்தை முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.

இதேபோல, கோவை தெற்கு மாவட்ட திமுக துணை அமைப்பாளர் இரா.நவநீதகிருஷ்ணன் ரூ.25 ஆயிரத்தையும், கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் சண்முகம், ரூ.15 ஆயிரத்தை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.

இப்படி  நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கி வருவது மகிழ்ச்சியளித்தாலும், கடந்த ஆண்டில் கொரோனா நிவாரண நிதிக்காக உதயநிதி ஸ்டாலினிடம் நிதி வழங்கியவர்களின் பட்டியலை ஒப்பீட்டு பார்த்தால், இலங்கை நிவாரண நிதி என்பது ஒரு சொட்டு தண்ணீருக்கு சமமாகதான் இருக்கிறது.

கரைகளை உடைத்துக் கொண்டு வெள்ளம் போல பெருக்கெடுத்து திரள வேண்டிய நிதி, ஒரு குடம் அளவுக்கு என்று கூட சொல்ல முடியாத அளவுக்கு ஒரு குவளை அளவுக்குதான் கடந்த 4 நாட்களில் சேர்ந்திருக்கிறது என்பது தமிழ் மண்ணிற்கு, தமிழ்நாட்டிற்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி தந்துவிடாதா? என்கிறார்கள் வெளிநாடுவாழ் தமிழர்கள்…

வீரத்திலும், மானத்திலும் உயர்ந்து நிற்கும் தமிழ் சமுதாயம், ஈகைக் குணத்திலும் சளைத்ததில்லை என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டாமா?