Fri. Nov 22nd, 2024

சமையல் எரிவாயு உருளையின் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து, உருளையின் விலை இன்றைய தேதிபடி ரூ.1015.50 ஆக உயர்ந்துவிட்டது. கடந்த ஓராண்டில் மட்டும் 305 ரூபாய் அளவுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை;

மையல் எரிவாயு விலை மீண்டும் உருளைக்கு ரூ.50 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சென்னையில் ஒரு சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.1015.50 ஆக அதிகரித்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இது கூடுதல் சுமையாகும்,

சமையல் எரிவாயு விலை கடந்த ஓராண்டில் 10 தவணைகளில் ரூ.305 உயர்த்தப் பட்டிருக்கிறது. இது 44% உயர்வு ஆகும். மிக மிக அத்தியாவசியப் பொருளான சமையல் எரிவாயு விலை ஒரே ஆண்டில் 44% உயர்த்தப்படுவதை ஏற்க முடியாது. இதை ஏழை, நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது!

ஒரு காலத்தில் சமையல் எரிவாயு விலை 400 ரூபாயைத் தாண்டக் கூடாது என்பதற்காக மானியத் தொகை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. 2018-ஆம் ஆண்டு நவம்பரில் மானியத்தின் அளவு ரூ.435 என்ற உச்சத்தை தொட்டது. ஆனால், இப்போது மானியம் ரூ.24.95 ஆக குறைக்கப்பட்டு விட்டது!

ஒரு புறம் விலை அதிகரிக்கும் நிலையில், மறுபுறம் மானியம் குறைக்கப்படுவது இரட்டைத் தாக்குதலாக அமைந்து விடும். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்; மானியத்தின் அளவை படிப்படியாக உயர்த்த வேண்டும்.

இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.