Fri. Nov 22nd, 2024


முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவுப் பெற்று இன்றைய தினம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஓராண்டு சாதனைகளை நினைவுக்கூறும் வகையில் சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார் முதல்வர்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக மாநகராட்சி, தொலைதூர கிராமங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, படிப்படியாக விரிவு செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஊட்டச்சத்து குறைபாட்டை களைய 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் தகைசால் பள்ளிகள் தமிழ்நாடு முழுவதும் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஓராண்டில் துறை வாரியாக நிறைவேற்றப்பட்ட சாதனைகளைப் பட்டியிலிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இலவச பயணம் மூலம் மாதந்தோறும் ரூ.5,000 மிச்சமாகியுள்ளது; இதுவே அரசின் உண்மையான சாதனை என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

முன்னதாக இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் மு.கருணாநிதி திருவுருப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது தாயார் தயாளு அம்மாளிடமும் ஆசிப் பெற்றார். தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடம், கலைஞர் மு.கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

வழியில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான 29சி அரசுப் பேருந்தில் திடீரென்று ஏறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அதில் பயணம் செய்த பெண்கள் உள்ளிட்டோரிடம் பேருந்து பயணம் குறித்து கருத்துகளை கேட்டறிந்தார். நடத்துனரிடம் பேருந்தின் வழித்தடம் குறித்து விசாரித்த முதல்வர், தான் பள்ளி மாணவராக இருந்த காலத்தில் 29 சி பேருந்தில் பயணம் செய்த அனுபவம் குறித்த நினைவுகளை பகிர்ந்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சாதனை மலர்கள் வெளியீடு….

முன்னதாக, தலைமைச் செயலகத்தில், ஓராண்டு நிறைவையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட ஓயா உழைப்பின் ஓராண்டு – கடைக்கோடித் தமிழரின் கனவுகளைத் தாங்கி மற்றும் ‘ஓயா உழைப்பின் ஓராண்டு – நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம்’ என்ற ஓராண்டு சாதனை மலர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்வில் செய்தித் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் மற்றும் செய்தித்துறை உயரதிகாகிள் உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.