Mon. May 13th, 2024

உயிரிழக்கும் வணிகர் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதியுதவி 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருச்சியில் வணிகர் விடியல் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், வணிகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேரூரை ஆற்றினார். அப்போது முதல்வர் கூறியதாவது:

கொரோனோ தொற்று கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் வணிகர்கள் நிதி வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் நிலவி கரும் கடுமையான நெருக்கடியில் தமிழர்கள் மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் தமிழக அரசு நிதியுதவி உள்ளிட்டவற்றை வழங்குவோம் என வாக்குறுதி அளித்திருக்கிறோம்.
எதிர்க்கட்சியாக திமுக இருந்த காலத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஒன்றிணைவோம் வா நிகழ்வுகள் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து இருக்கிறோம்.


அதிமுக அரசு கொண்டு வந்த நுழைவு வரியை உடனடியாக அமல்படுத்தியபோது, சேலம் மாவட்டத்தில் அந்த வரியை எதிர்த்து மாநாடு நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு ஊர்களிலும், சென்னையில் எதிர்ப்பு பேரணியும் நடைபெற்ற நிலையில், அப்போது வணிகர்கள் மீது போலீசார் தாக்குதலும் நடத்தினார்கள். அப்போது வணிகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நாள் மே 5 ஆம் தேதி. அதை நினைவுக்கூர்ந்துதான் மே 5 ஆம் தேதியை வணிகர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வணிகர் நலன்களை எப்போதும் பேணும் ஆட்சியாக திமுக அரசு எப்போதும் இருந்து வருகிறது. வணிகர் நலன் காக்கப்பட்டால்தான் அரசுக்கு வரும் வணிக வரி நல்ல பலனைத் தரும் என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன்.
திமுக தேர்தல் அறிக்கையில், வணிகர் நல வாரியம் சீரமைக்கப்பட்டு, உறுப்பினர்களுக்கு முறையாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததை ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்தியிருக்கிறோம். இதய நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிவாரண உதவித் தொகையை 50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், மகளிர்களுக்கு, பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு உதவிகளும் அதிகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

வாரியத்தில் இணையம் வழியாக உறுப்பினராக பதவி செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. வணிகர்களின் கருத்துகளை கேட்டறிந்ததும், அதன் பிறகு வணிகர்களின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையும் நீங்கள் அறிவீர்கள். ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் ஜிஎஸ்டி குறிப்புகளை தமிழ் மொழியில் வெளியிட வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறோம்.
வரி செலுத்துவோர் குழுவை மறுஉருவாக்கம் செய்தததுடன், வணிகர்களை பாதுகாக்கிற திட்டம் விரைவாக அறிவிக்கப்படும். வணிகர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்களாக வணிகர் தரப்பில் இருந்தே தேர்வு செய்யப்படுவார்கள். வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர் மரணமடைந்தால் அவரின் இறுதிச் செலவு உள்ளிட்டவற்றுக்காக வழங்கும் நிதியுதவி 3 லட்சமாக உயர்த்தி தரப்படும்.

வணிகர் உரிமம் எடுப்பதற்கான கால அளவில் மாற்றம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை உரிமம் எடுத்தால் போதும் என்ற அளவில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. உடற்பயிற்சி மையங்களுக்கு இனிமேல் காவல்துறையில் இருந்து அனுமதி பெறத் தேவையில்லை.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டனர்.