அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சியின் கூட்டணித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நிழலின் அருமை வெய்யிலில் தெரியும். தண்ணீரின் அருமை தாகத்தில் தெரியும். மின்சாரத்தின் அருமை மின்வெட்டில் தெரியும் என்பதைப் போல செல்வி ஜெயலலிதாவின் ஆளுமை, நிர்வாகத் திறன் ஆகியவை நாம் வாழ்கிற ஒவ்வொரு நொடியும் தெரிகிறது.
நமது நாட்டில் பல மதங்கள் வேரூண்றி இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஒவ்வொரு மதத்திற்கும் அதற்குரிய இடம் அளிக்கப்பட வேண்டும். ஒரு மதம் மற்றொரு மதத்தின் கோட்பாடுகளில் குறுக்கிட கூடாது. பெரும்பான்மை மக்கள் பெறும் அனைத்து சலுகைகளும், உரிமைகளையும் சிறுபான்மை மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே நமது மதச்சார்ப்பற்ற நாட்டின் நோக்கம் என்பதை செல்வி ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
அவரின் வழியில் அனைத்து மத மக்களையும் ஒரே உணர்வோடு கருதி வருகிறது அதிமுக. அதனால்தான் தமிழ்நாட்டு மக்கள், மதம்,இனம், மொழி வேறுபாடுகளைக் கடந்து மதநல்லிணக்கத்தோடு வாழ்ந்து இந்தியாவுக்கே ஒரு உதாரணமாக வாழ்ந்து வருகிறோம். செல்வி ஜெயலலிதாவின் அரசு , இஸ்லாமிய மக்களுக்காக பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது.
புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க அரசின் சார்பில் அரிசி வழங்கும் திட்டத்தை 2001 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இன்று வரை சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவுக்கு தேவைப்படும் சந்தனக் கட்டைகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
நாகூர் தர்காவிற்கு சொந்தமான குளக்கரைக்கு சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது என்ற செய்தி அறிந்து நானே நேரடியாக நாகூர் சென்று நாகூர் தர்காவில் பிரார்த்தனை செய்து சேதம் அடைந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்தேன். உடனடியாக அவற்றை சீர்செய்வதற்கு 4 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி அப்பணிகள் முடிக்கப்பட்டது.
2018 வரை ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர் சகோதரர்களுக்கு மத்திய அரசின் மானியம் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்தது. அதன் பிறகு ஹஜ் பயணம் செய்ய தமிழக அரசு 6 கோடி ரூபாய் மானியத் தொகையை வழங்கியது. பிறகு 10 கோடி எனவும் 12 கோடி ரூபாய் எனவும் அதிமுக அரசு அதிகப்படுத்தி வழங்கியது. உலமாக்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல சலுகைகளை அதிமுக அரசு வழங்கியது. ஹஜ் பயணிகளுக்கு தங்கும் இல்லம் வேண்டும் என்பதற்காக சென்னை பல்லாவரத்தில் இடம் ஒதுக்கப்பட்டு, அதற்குரிய நிதியையும் அதிமுக அரசு வழங்கியது.
மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா வழியில் சிறுபான்மையின மக்களின் பாதுகாவலராக அதிமுக என்றும் திகழும். வாய்ச் சொல் வீரர்களாக இல்லாமல், செயலிலும் கடைப்பிடித்து வருபவர்கள் அதிமுக என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இப்தார் நோன்பு திறப்பு விழாவில் தோழமைக் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.