சென்னை தியாகராய நகர் தக்கர்பாபா கல்வி நிறுவன வளாகத்தில் மண்வாசனை அமைப்பின் சார்பில் மண்வாசனை கிராமிய திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பாரம்பரிய வேளாண் உணவுபொருட்கள்,
மூலிகை மற்றும் உணவு வகைகள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
சென்னை மாநகரத்தை சார்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கிராமிய திருவிழாவில் பங்கேற்று பாரம்பரிய உணவுப் பொருட்களை சுவைத்தும், தேவைக்கு ஏற்ப வாங்கியும் சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிஆர்.பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உணவுப் பொருட்கள் அரங்கை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசியதாவது:
கிராமிய கலை நிகழ்ச்சிகள்
தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தில் மண்வாசனை கிராமிய திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது பாராட்டுக்குரியது. குமரி முதல் சென்னை வரை பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேளாண் பொருட்கள் உற்பத்தி செய்யக்கூடிய விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை காட்சிபடுத்தி உள்ளனர்.ஒவ்வொரு உணவுப் பொருட்களின மருத்துவ குணங்களையும் சிறப்பையும் எடுத்துரைக்கும் வகையில் காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய கிராமிய கலைகளை வெளிப்படுத்தும் விதமாக பறையாட்டம் ஆடல் பாடல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது.
நோய் எதிர்ப்புச் சக்தி
இத்திருவிழாவில் சென்னை மாநகரை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வந்து கண்டுகளித்தது மட்டுமல்லாமல் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்கள் மீது மிகுந்த ஆர்வத்தோடு அதனை வாங்கி சென்றனர் என்று காட்சி கூட அமைப்பாளர்கள் தெரிவித்தது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.
கிராமங்களை விட மாநகரங்களில் பாரம்பரிய உணவு, இயற்கை விவசாய உற்பத்தி உணவுப் பொருட்களின் மீது மக்கள் மோகமும், ஆர்வமும் நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள் என்பது திருவிழாவின் மூலம் உணர்ந்துக் கொள்ள முடிந்தது.
தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாரம்பரிய வேளாண் உணவுப் பொருட்கள் தான் கொரோனா மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மாமருந்தாகவும் உள்ளது.
ஊக்கப்படுத்த வேண்டும்
அந்தவகையில் மண்வாசனை கிராமிய திருவிழா நடத்தும் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மண்வாசனை அமைப்பை ஊக்கப்படுத்த முதலமைச்சர் முன்வரவேண்டும்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள அணைகள் பாதுகாப்பு சட்டம் குறித்து தமிழக விவசாயிகளிடம் மிகப் பெரும் அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே முதலமைச்சர் உடனடியாக அனைத்து கட்சிகள்,விவசாய அமைப்புகள் கூட்டத்தைக் கூட்டி நீராதார உரிமைகளை பாதுகாப்பதற்கு உரிய கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.
கருத்து கேட்புக் கூட்டம் அவசியம்
தமிழகத்தில் நபார்டு, உலக வங்கி நிதி மூலம் கீழ், மேல் பவானி, சரபங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் விவசாயிகள் கருத்தை அறியாமல் நிறைவேற்றப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் கீழ்பவானி மேல் பவானி என விவசாயிகள் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அமைதியாக வாழக் கூடிய ஈரோடு மாவட்ட விவசாயிகள் மத்தியில் ஒற்றுமையின்மை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு உடனடியாக நீர்ப்பாசனத்துறை அமைச்சர்,உயர் அலுவலர்கள், பொறியாளர்கள் கொண்ட குழுவை அனுப்பி இரு பாசன விவசாயிகள் கருத்தைக் கேட்டு கருத்தொற்றுமை உருவாக்கிய பின் திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் வரவேண்டும்.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
கிராமிய திருவிழாவிற்கான ஏற்பாட்டினை மண்வாசனை அமைப்பின் பெண் இயற்கை விவசாயப் போராளி சென்னை மேனகா மிக சிறப்பாக செய்திருந்தார்.
பி.ஆர்.பாண்டியனுடன் சென்னை மண்டல தலைவர் வி கே வி துரைசாமி, செயலாளர் சைதை சிவா, மதுரை மண்டல செயலாளர் உறங்காப்புளி, மதுரை மாவட்ட செயலாளர் மேலூர் அருண், விருதுநகர் மாவட்ட பொருளாளர் ராஜாங்கம் செய்தித் தொடர்பாளர் என் மணிமாறன்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.