ஆளுநருக்கு எதிரான கருப்புக்கொடி போராட்ட விவகாரத்தை சட்டப்பேரவையில் எழுப்பிய அதிமுக உறுப்பினர்கள், ஆளும்கட்சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு நடப்பு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனம் உள்ளது. அதன் 27 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஞானரத யாத்திரை புறப்பட உள்ளார். இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மயிலாடுதுறைக்கு சென்றார்.
வழியில் உள்ள மன்னம்பந்தல் என்ற இடத்தில் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு இயக்கங்கள் சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சாலையோரம் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவர்களை கடந்து ஆளுநரின் கார் உள்ளிட்ட வாகன அணிவகுப்பு சென்றது. இருபுறமும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இருப்பினும், ஆளுநரின் பாதுகாப்பாகச் சென்ற வாகனங்கள் மீது கருப்புக் கொடிகள் மற்றும் கம்புகளை வீசி எறியப்பட்டன. இந்த நிகழ்வு மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆளுநர் கார் மீது கருப்புக் கொடி, கல்வீசப்பட்ட நிகழ்வுக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, சட்டப்பேரவையில் இந்த விவகாரம் இன்று புயலைக் கிளப்பியது. மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனத்தை நோக்கி கருப்புக்கொடி வீசப்பட்டதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதனை தொடர்ந்து கருப்பு கொடி போராட்டத்தை கண்டித்து பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறியதாவது:-
கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு காவல்துறையே பாதுகாப்பு கொடுத்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காவல்துறையின் இத்தகைய செயல் கண்டிக்கத்தக்கது.
ஆளுநரின் பாதுகாப்பில் காவல்துறை தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுக்கவில்லை?; இது தமிழ்நாட்டு காவல்துறை மீது விழுந்த கரும்புள்ளி. ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத போது மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.