Sun. May 19th, 2024

எருமை மாடு கூட கறுப்பாக இருக்கிறது: அதனால் அதுவும் திராவிடனா? என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்..

இசையமைப்பாளரும், இளையராஜாவின் மகனுமான யுவன் சங்கர் ராஜா, கறுப்பு உடை அணிந்த தனது புகைப்படத்தை பகிர்ந்து, ‛கறுப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்’ என குறிப்பிட்டிருந்தார். இதனால், இளையராஜாவின் கருத்திற்கு எதிர்கருத்தை அவரது மகனே வெளிப்படுத்தியுள்ளதாக ஒருசாரர் தெரிவித்து வந்தனர்.

கறுப்பு, திராவிடர் என்ற கருத்துகள் திடீரென பேசுப்பொருளாக மாறியது.

இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் ஒருசேர வந்துள்ளன.

இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இளையராஜாவின் தனிப்பட்ட கருத்து, விருப்பம் அது. அவரின் கருத்தை ஏற்கிறோமா, எதிர்க்கிறோமா என்பது வேறு. அதற்காக அவரை விமர்சனம் செய்து கொண்டிருப்பது தேவையற்றது. இளையராஜாவைவிட பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியவர்கள்தான் இப்போது இளையராஜாவை திட்டுகிறார்கள்.
தம்பி யுவன்சங்கர் ராஜா தெளிவாகி கொள்ள வேண்டும். கருப்புத் திராவிடன், பெருமைமிகு தமிழன் என்று கூறுவது சரியல்ல. ஒருவருக்கு இரண்டு அடையாளங்கள் இருக்க முடியாது. ஒன்று திராவிடனாக இருக்க வேண்டும் அல்லது தமிழனாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் அவர்களே குழம்பி போய் இருக்கிறார்கள். யார் திராவிடர்? ஹெச். ராஜா சொல்கிறார் மோடி கூட திராவிடர்தான் என்று. இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியுமா, தேவைப்பட்டால் இந்தியன் என்கிறார்கள். தமிழன் என்கிறார்கள். திராவிடன் என்கிறார்கள். எதற்கு இவ்வளவு குழப்பம். எதற்காக இரண்டு மூன்று முகமூடி போட்டுக் கொள்கிறீர்கள். நான் தமிழன் என்று சொன்னால், என்ன சாதி என்று கேட்பது வெறுப்பாக இருக்கிறது. யுவன்சங்கர் ராஜா பெருமைமிகு தமிழன். அதை சொல்ல தயக்கம் கூடாது. கேஜிஎப் படத்தில் நடித்த கதாநாயகன் நான் பெருமைமிகு கன்னடியன் என்றுதானே சொல்கிறார். அவரை போல நான் பெருமைமிகு தமிழன் என்று யுவன்சங்கர் ராஜா சொல்லிவிட்டு போக வேண்டியதுதானே. அவரைப் பார்த்து பாஜக தலைவர் கே.அண்ணாமலையும் திராவிடன் என்று சொல்கிறார். ஒருத்தை விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்வது. எல்லாவற்றையும் விமர்சனம் செய்ய வேண்டும் என நினைத்தால், அது நோயாக மாறிவிடும்.
கருப்பாக இருப்பவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்றால் தென்னாப்பிரிக்காவில் இருப்பவர்கள் எல்லாம் கருப்பாகதான் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் திராவிடர்களா.. எருமைமாடு கூட கருப்பாகதான் இருக்கிறது. அது திராவிடமா…
எங்கள் இனத்தின் நிறம் கறுப்பு நிறம்தான். உழைக்கும் மக்களின் தோல் கறுப்பாகதான் இருக்கும். உட்கார்ந்து சாப்பிடுகிறவன் தோல்தான் மினுமினுப்பாக இருக்கும்.

இவ்வாறு சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.