இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்றதாக டிடிவி தினகரனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் விசாரணை சூடுபிடித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டில் அதிமுக இரண்டாக பிளவுபட்டிருந்த நேரத்தில் அதிமுக முன்னாள் எம்பி டி.டி.வி.தினகரன் இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு பெறுவதற்காக சுகேஷ் சந்திர சேகர் எனும் இடைத் தரகர் மூலம் தேர்தல் ஆணையர் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக முயற்சித்ததாக கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய இந்த வழக்கில் டி.டி.வி. தினகரனை கைது செய்த டெல்லி போலீசார், விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் உத்தரவின் பேரில் டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். இரண்டு மாதம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார். இருப்பினும் இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையில் டிடிவி தினகரனின் பெயர் இடம்பெறவில்லை.இதனால் ஜாமீனில் விடுதலையானார். அதன்பிறகு டெல்லி போலீசார் இந்த வழக்கை நிறுத்தி வைத்தனர்.
இந்நிலையில் டெல்லியில் பெண் தொழில் அதிபர் ஒருவரிடம் கோடிக் கணக்கில் மோசடி செய்த வழக்கில் சுகேஷ்சந்திர சேகர் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தொடர் விசாரணையில் சுகேஷ் சந்திர சேகர் பல்வேறு மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அதில் ஒரு பகுதியாக இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு டி.டி.வி. தினகரன் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுவதையும் விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்தது.
இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக, சுகேஷ் லஞ்சம் கொடுத்ததை நேரில் பார்த்ததாக டெல்லி மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்திருந்த வக்கீல் கோபிநாத் மற்றும் மோகன்ராஜ் ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
அமலாக்கத்துறையின் விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் கோபிநாத் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாகவும் போலீசார் தனியாக வழக்கப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுகேஷ்சந்திர சேகரிடம் லஞ்சம் கொடுத்தது தொடர்பாக விசாரிப்பதற்காக நேரில் ஆஜர் ஆகும்படி டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
அதன்பேரில் டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று டி.டி.வி. தினகரன் ஆஜர் ஆனார். அவரிடம் அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் பலமணிநேரம் விசாரணை நடத்தினார்கள். டிடிவி தினகரனை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த விவகாரம் அமமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.