Mon. May 20th, 2024

பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு, மூத்த தலைவர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:
தமிழக முதல்வரை நாங்கள் சந்தித்தோம். நல்ல சந்திப்பு. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக விரைவில் மீண்டும் ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்தோம்.
உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பிலே மிகத் தெளிவாக தமிழகத்தில் வன்னியர்களுக்கு தனியான இடஒதுக்கீடு கொடுக்கலாம். எந்த தடையும் இல்லை. ஆனால், அதை நியாயப்படுத்த வேண்டும். புள்ளி விவரங்கள் வைத்து, பின்தங்கிய நிலையில் இருப்பதை நியாயப்படுத்தி இடஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், மாநில அரசுக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது என்றும் ஒரு சமுதாயத்திற்கு தனிப்பட்ட முறையில் இடஒதுக்கீடு கொடுக்கலாம் என்றும் உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்றும் 9 வது அட்டவணையில் பாதுகாக்கப்பட்ட 69 விழுக்காடு இடஒதுக்கீட்டில் தனியாக சட்டத்திருத்தம் தேவையில்லை என்றும் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டாம் என்றெல்லாம் சாதகமான அம்சங்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படுள்ளது. இதையெல்லாம் முதல்வரிடம் விளக்கி சொன்னோம்.

https://fb.watch/cfBW7dTRx5/

தரவுகள் இல்லை என்று ஒன்றே ஒன்று மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. தரவுகள் இருக்கிறது. அதனை சேகரித்து விரைவில் சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டோம். சட்டநிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். இந்த சட்டத்தொடரிலேயே மீண்டும் சட்டம் கொண்டு வந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம்.
ஏற்கெனவே இருக்கிற புள்ளி விவரங்களை முறையாக சேகரித்து சேர்க்க வேண்டும். அரசாங்கம் நினைத்தால் ஒரு வாரக் காலத்திற்குள் சேகரித்து மீண்டும் சட்டம் கொண்டு வர முடியும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மூத்த வழக்கறிஞர்களை வைத்தே வாதாடினார்கள். உள்ஒதுக்கீடு விவகாரத்தை தமிழக அரசு நன்றாக கையாண்டு இருக்கிறது. மருத்துவர் ராமதாஸ் முதல்வருக்கு எழுதிய கடிதத்தை நாங்கள் ஒப்படைத்துள்ளோம்.
இது ஒரு தனிப்பட்ட சாதிக்கான பிரச்னை இல்லை. அரசியல் பிரச்னையும் இல்லை. சமூக ரீதியிலான பிரச்னை. வன்னியர்களும், தாழ்த்தப்பட்ட சமுதாயமும்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளார்கள். இந்த இரண்டு சமூகமும் ஒரே நிலையில்தான் இருக்கிறார்கள் என்று 1969 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட சட்டநாதன் ஆணையமே கருத்து தெரிவித்துள்ளது.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு எல்லா சலுகைகளும், இடஒதுக்கீடுகள் உள்ளது. தமிழ்நாட்டில் பெரிய சமுதாயமான வன்னியர்களுக்கு சலுகைகள், இடஒதுக்கீடு போதிய அளவுக்கு இல்லை. மிகமிகமிக பின்தங்கிய நிலையில் வன்னியர் சமுதாயம் இல்லை. இந்த சமுதாயம் முன்னேறினால் தமிழகம் முன்னேறும். அதைதான் சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் பதில் உரையில் சொல்லியுள்ளார். வன்னியர்களுக்கு தனியாக உள்ஒதுக்கீடு வழங்குவதால் வேறு எந்த சமுதாயத்திற்கும் பாதகமான நடவடிக்கை அல்ல. யாருக்கும் எதிரான நடவடிக்கையும் கிடையாது. எந்தெந்த சமுதாயங்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறதோ அவற்றை எல்லாம் முன்னேற்ற நிலைக்கு கொண்டு வருவது அரசின் கடமை. அந்த கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் பாமக கோரிக்கை வைக்கிறது.
தேர்தலுக்காக இந்த இடஒதுக்கீடு அவசர கோலத்தில் கொண்டு வரப்பட்டதா என்ற விவகாரத்திற்குள் பாமக போக விரும்பவில்லை. முந்தைய அதிமுக அரசு வன்னியருக்கான தனி இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்று சட்டம் கொண்டு வந்தார்கள். திமுக அரசு அதை உறுதி செய்து நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள். பிறகு சட்டச்சிக்கல் வந்தபோது திமுக அரசு, முதல்வர் சிறப்பாகவே கையாண்டு இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அரசியலை புகுத்துவதை பாமக விரும்பவில்லை. இடஒதுக்கீடு விவகாரம் சமூக நீதி தொடர்பான பிரச்னை. எல்லா அரசியல்கட்சியிலும் ஒருநிலையில் நின்று இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.