திருச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியது:
கொரோனோ தொற்று பாதிப்பால் கடந்த இரண்டு ஆண்டுகாலமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விடியா அரசு பொதுமக்களால் தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு வீட்டு வரியை உயர்த்தியிருக்கிறது. அதாவது 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை வீட்டு வரியை உயர்த்தியிருக்கிறார்கள். ஏற்கெனவே வீட்டு வரியை உயர்த்த வேண்டும் என்று அரசு அதிகாரிகள் தரப்பில் கூறியபோது 2018 ஆம் ஆண்டில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நேரத்தில், அதிமுக அரசு வரி உயர்வு யோசனையை அப்படியே கைவிட்டு விட்டது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டு காலமாக இந்த கொரோனோ தொற்றால் மக்கள் வேலையிழந்து, வருமானத்தை இழந்து துன்பப்பட்டு வரும் நிலையில், விடியா அரசு திட்டமிட்டு மக்கள் மீது பெரிய சுமையை சுமத்தியிருக்கிறார்கள்.
முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதலாகவே மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவரது குடும்ப மக்களைப் பற்றிதான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
நாட்டின் நிலவரத்தைப் பற்றி எதுவும் தெரியாதவராகதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்து கொண்டிருக்கிறார். வரி உயர்வுக்கான காரணமாக மத்திய அரசு அறிவுறுத்தியதாக திமுக அரசு சொல்லுகிறது. வீட்டு வரியை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு சொல்லவே இல்லை. மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் வரி உயர்த்தப்பட்டுள்ளதாக கூறும் திமுக நிர்வாகிகள், வரியே உயர்த்தப்படாத டெல்லி மாநிலத்தோடு தமிழகத்தை ஒப்பிட்டு பேசவில்லை. டெல்லியில் முறையாக வரி செலுத்தினால், அந்த அரசு வரிச்சலுகை கொடுக்கிறது. வீட்டு வரியை உயர்த்திய மாநிலங்களோடு ஒப்பிட்டு பேசுகிற நேரமா இது..நிர்வாகத் திறமையற்ற, கையாளாகாத அரசாக திமுக அரசு இருந்து வருகிறது.
திமுக தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லியிருக்கிறார்கள்? 487 வாக்குறுதி என்ன? கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதார நிலை மேம்படும் வரை சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று வாக்குறுதி தந்தவர் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இந்த வாக்குறுதியை மறந்தது ஏன்..எனவே தான் உயர்த்திய வீட்டு வரியை திரும்ப பெற வேண்டும் என அதிமுக வலியுறுத்துகிறது.
தாலிக்கு தங்கம் என்ற அற்புதமான திட்டத்தை இன்றைய திமுக அரசு கைவிட்டுவிட்டது. மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவால் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான ஏழை பெண்கள் பயனடைந்துள்ளனர். அந்த அற்புதமான திட்டத்தை திமுக அரசு முடக்கிவிட்டது. அம்மா கிளினிங்கை ரத்து செய்துவிட்டார்கள். முந்தைய அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை கைவிட்டு விட்டது திமுக அரசு. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆட்சி நிர்வாகத்தை நடத்த தெரியாத அரசாக இன்றைக்கு உள்ளது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி. கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா விற்பனை நடக்கிறது. காவல்துறை டிஜிபியே சொல்கிறார், கஞ்சாவை தடுக்க வேண்டும் என்று. திமுகவின் பத்துமாத ஆட்சியின் நிலைதான் இது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பட்டியிலனத்தைச் சேர்ந்த அரசு அதிகாரியை சாதிப் பெயரைச் சொல்லி திமுக அமைச்சர் திட்டுகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அரசு அதிகாரிகளுக்கும் பாதுகாப்பில்லை. சாதிப் பெயரைச் சொல்லி திட்டிய அமைச்சருக்கு சரியான தண்டனை வழங்காமல், இலாகா மட்டுமே மாற்றம் செய்துள்ளார். இதுதான் சமூக நீதியா, இதுதான் திராவிட மாடலா..தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, பெண்களுக்கு, சிறுமிகளுக்கு இன்றைக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைதான் நிலவிக் கொணடிருக்கிறது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தொடர்ந்து சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அதிமுக நிர்வாகிகள் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், அனைத்து மாவட்டங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தலைமையிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.