அமமுக மாநில பொருளாளர் மனோகரனின் தாயார் ராமலெட்சுமி அம்மாள், செவ்வாய் கிழமை உடல் நல குறைவால் காலமானார். அவருக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக திருச்சி வந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், மனோகரனின் இல்லத்தில் அவர் தாயாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அதன் விவரம் இதோ….
சசிகலா விடுதலை ஆன பின்பு அதிமுகவினர் எங்களிடம் வந்து இணைவார்கள் என நான் எப்போதும் கூறவில்லை.
மத்திய பட்ஜெட்டில் கொஞ்சம் நன்மைகளும் நிறைய தீமைகளும் உள்ளன. அதேபோல அதிமுக அரசும் தப்பித்தவறி ஒரு சில நன்மைகளை அத்திப்பூத்தார்போல் செய்திருக்கலாம்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் 15 விழுக்காடு வாக்குகளை பெற்றோம். சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று சாதனை புரிந்ததைபோல நாங்கள் நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவோம்.
திமுக தப்பித்தவறி ஆட்சிக்கு வந்தால் என தான் குறிப்பிட்டுள்ளேன். அப்படி நிகழ்ந்தால் கூட எங்களது அரசியல் பணி தொடரும். பா.ஜ.கவிடம் நாங்கள் கைகோர்த்து இருக்கவில்லை. தேவையான நேரத்தில் மட்டுமே நாங்கள் விமர்சிப்போம்.
தமிழக அரசு வெற்றி நடை போடவில்லை. இது தள்ளாடும் அரசு. மக்கள் நல திட்டங்கள் மக்களுக்கு போய் சேரவில்லை. அதனால்தான் விளம்பரம் செய்கிறார்கள். மக்களுக்கு நன்மை செய்யாத அரசாங்கம், மக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் கொடுப்பார்கள் என அண்ணா கூறியுள்ளார்.
பரதன் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஒ.பன்னீர்செல்வம் ராவணனிடம் சென்று சேர்ந்து விட்டார். அதனால், அவருக்கும் பிரச்னை நாட்டுக்கும் பிரச்னை.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.