Mon. May 13th, 2024

தாரை இளமதி, சிறப்பு செய்தியாளர்…

தமிழ்நாட்டின் முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் அன்பு சகோதரி கனிமொழி கருணாநிதி. திமுக மாநில மகளிரணிச் செயலாளராகவும் தூத்துக்குடி எம்பியுமாக பதவி வகித்து வரும் நிலையிலும், சென்னையில் இருந்து தமிழகத்தின் எல்லை மாவட்டமாக இருக்கும் தூத்துக்குடிக்கு விமானத்தில் பறந்து சென்று, அங்கு நடைபெற்ற மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் கலந்து கொண்டு உட்கட்சி ஜனநாயகத்தை மெருகேற்றி வைத்தார், கனிமொழி கருணாநிதி.

காலையில் நடந்த பதவியேற்பு விழா மாலையில் ரிப்பீட்டு

தேர்தல் விதிமுறைபடி 21 மாநகராட்சிகளுக்கும் அறிவிக்கப்பட்ட நேரப்படி, இன்று காலை நேரத்தில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மேயர் தேர்தலில், துளியும் தாமதம் இன்றி கலந்து கொண்டு, திமுக சார்பில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனின் சகோதரர் ஜெகன்  பெரியசாமியை, மேயர் இருக்கையில் அமர வைத்து, மேயருக்கு உரிய ஆடை, தங்கத்திலான அணிகலன்கள் அணிவிக்கும் நிகழ்விலும் கௌரவம் பார்க்காமல் தனது தந்தையின் மாண்பிற்கு பெருமை சேர்க்கும் வகையில் மனப்பூர்வமான வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

கலைஞர் மு. கருணாநிதி குடும்பத்தின்  வாரிசான அவர், பந்தா பார்க்காமல், குறித்த நேரத்தில் மேயர் தேர்வு நிகழ்விலும் பதவியேற்பிலும் பங்கேற்றார். கனிமொழி எம்பியின் எளிமையை பார்த்து, மேயர் பதவியேற்பு விழாவிற்கு வந்திருந்த திமுகவினரைக் கடந்த மாற்று அரசியல் நிர்வாகிகள் மட்டுமின்றி, தூத்துக்குடி நகரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், அரசு அதிகாரிகளும் வியந்து போயினர்.

ஆனால், திமுக தலைவருக்கு அடுத்த நிலையில், அந்த கட்சியில் பொறுப்பு வகிக்கும் பழம்பெரும் தலைவரான  பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், தனது கெத்தை விடாமல், அவருக்கு வசதிபட்ட நேரத்தில் மேயர் பதவியேற்பு நிகழ்வை நடத்தியதன் மூலம் தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக அறிவிக்கப்பட்ட மேயர் இவர் என்பதை ஊருக்கு வெளிப்படுத்தும் வகையில் நடந்து கொண்ட செயலைப் பார்த்து,  வேலூர் மாவட்ட பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் உள்ளூர் திமுக நிர்வாகிகள்.

அப்படி என்ன செய்து விட்டார் அமைச்சர் துரைமுருகன்?

வேலூர் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக, அமைச்சர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆன்ந்த் எம்பியால் பரிந்துரைக்கப்பட்டவர் புஷ்பலதா வன்னியராஜா.ஆனால், அவர்களது விருப்பத்திற்கு மாறாக, வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏபி.நந்தகுமார் எம்எல்ஏ, வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்எல்ஏ ஆகியோர், பட்டமேற்படிப்பு படித்தவரும் திமுக மகளிரணியைச் சேர்ந்தவருமான சுஜாதா ஆனந்தகுமாரை தலைமையிடம் பரிந்துரைத்து, மேயர் வேட்பாளராக அறிவிக்க வைத்துவிட்டனர்.

வேலூர் மாநகராட்சி மேயரை தனது மகனின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்து கொள்ள திட்டம் போட்டு காய் நகர்த்தலில் ஈடுபட்ட திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் ராஜதந்திரம், இரட்டையர்களான ஏபி.நந்தகுமார், கார்த்திகேயன் ஆகியோரின் சாணக்கியதனத்திற்கு முன்பாக பீஸ் பீஸாகிப் போனதை வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள்  அனைவரும் புரிந்து கொண்டார்கள்.

தந்தை மற்றும் மகனின் பரிந்துரையை திமுக தலைமை புறக்கணித்ததால் ஏற்பட்ட ஆத்திரம் ஒருபுறம், வேலூர் மாநகரச் செயலாளர் கார்த்திகேயன் எம்எல்ஏ, தனது சமுதாயத்தைச் சேர்ந்த சுஜாதாவை மேயராக்கி விட்டாரே என்ற கோபத்தில், நேற்று முன்தினம் ( மார்ச் 3) கார்த்திகேயன் எம்எல்ஏவை நேரில் சந்தித்து தனது அதிருப்தியை தெளிவுப்படுத்தியுள்ளார், புஷ்பலதா வன்னியராஜா.  

புஷ்பலதா வன்னியராஜா

மேயர் பதவி பறிபோய்விட்டதே என்ற விரக்தியில் அவராகவே மனக்குமறலை கொட்டினாரா இல்லை தூண்டுதலின் பேரில் தன்னை வந்து சந்தித்து வெறுப்பை காட்டினாரா என்று தெரியாமல் குழம்பிப் போனார் கார்த்திகேயன் எம்எல்ஏ என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

இப்படிபட்ட பின்னணியில், மேயர் பதவி ஏற்பு நாளுக்கு( மார்ச் 4) முன்பாக, அதாவது, கடந்த 3 ஆம் தேதி இரவே சென்னையில் இருந்து வேலூருக்கு வந்து காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் தங்கினார் அமைச்சர் துரைமுருகன். மறுநாள் காலை, கடலூர் நீங்கலாக 20 மாநகராட்சிகளிலும் தேர்தல் விதிமுறைபடி மேயர் தேர்தலும், தொடர்ந்து பதவி ஏற்பு விழாவும் காலை 9 மணியளவிலேயே நடைபெற்றது. அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், திமுக பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு, திமுக மேயர்களுக்கு, பாரம்பரியமான உடை மற்றும் தங்கத்திலான அணிகலன்கள், செங்கோல் ஆகியவற்றை வழங்கி வாழ்த்தினார்கள்.

காலையில் பதவி ஏற்ற மேயர் சுஜாதாவுக்கு ஏபி நந்தகுமார் எம்எல்ஏ வாழ்த்து…

அதேபோலவே, வேலூர் மாநகராட்சியிலும் மேயராக பதவியேற்றுக் கொண்ட சுஜாதாவை, அம்மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான நந்தகுமார், மாநகர திமுக செயலாளர் கார்த்திகேயன் எம்எல்ஏ ஆகிய இருவரும் முன்நின்று திமுக மேயரை வாழ்த்தினார்கள். ஆனால், உள்ளூரிலேயே இருந்த போதும், வேலூர் திமுக எம்பி கதிர் ஆனந்த், மேயர் பதவியேற்பு விழாவை புறக்கணித்தார். அதேபோல, அவரது தந்தையும், திமுகவின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனும் வேலூர் மாநகராட்சி பக்கமே எட்டி பார்க்கவில்லை. இதைவிட கொடுமை என்னவென்றால், தந்தை, மகன் ஆகியோரால் மேயர் வேட்பாளருக்கு சிபாரிசு செய்யப்பட்ட கவுன்சிலர் புஷ்பலதா வன்னியராஜாவும், மேயர் பதவியேற்பு விழாவை புறக்கணித்ததுதான்.

இருப்பினும், வேலூர் மாநகராட்சி பதவியேற்பு விழா வெற்றிகரமாக நடைபெற்றதுடன் திமுக நிர்வாகிகள் உள்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் உற்சாகமாக கலந்துகொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எழுச்சி மிகுந்த இந்த நிகழ்வை தொலைக்காட்சிகளில் பார்த்த தந்தைக்கும், மகனுக்கும் வியர்த்து கொட்டியது.

எம்எல்ஏ கார்த்திகேயன்+திமுக நிர்வாகிகள் வாழ்த்து…

அதை இருவருமே வெளிக்காட்டிக் கொள்ளாமல், வேலூருக்கு நானே ராஜா, நானே மந்திரி என்ற கணக்காக, தனது தலைமையில்தான் வேலூர் மாநகராட்சி மேயர் பதவியேற்பு விழாவே நடைபெற்றது என்று நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வர வேண்டும் என்ற எண்ணத்தில், வேலூர் மாநகராட்சி ஆணையரை தொலைபேசியில் அழைத்து, மாலையில் மீண்டும் பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என உத்தரவிட்டிருக்கிறார்கள்.

இந்த இடைப்பட்ட நேரத்தில்தான், திமுக தலைவர் மிகவும் வருத்தத்துடன் இருக்கிறார் என்ற செய்தியும், தோழமைக்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினரே போட்டியிட்டு, கூட்டணி தர்மத்திற்கு கேடு விளைவித்துவிட்டார்களே என அவர் துடிதுடித்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி வெளியான போதும், திமுக பொதுச் செயலாளர் என்ற பெரும் பொறுப்பில் இருக்கும் அமைச்சர் துரைமுருகன், சென்னைக்கு பறந்து வந்து, திமுக தலைவரின் மனவருத்தத்தை போக்கும் சிந்தனையற்றே, இரண்டாவது முறையாக நடைபெறும் வேலூர் மேயர் பதவியேற்வு விழா குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்திருக்கிறார் என்கிறார்கள் வேலூர் திமுக நிர்வாகிகள்.

இதேநேரத்தில்தான், திருச்சியில் மேயர் அன்பழகன் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு, தனக்கு ஒதுக்கப்பட்ட 3 மணிநேர பயணத் தொலைவில் உள்ள சேலத்திற்கு காரிலேயே விரைந்துச் சென்று, சேலம் மாநகராட்சி மேயராக பதவியேற்றுக் கொண்ட  ராமச்சந்திரனுக்கு பாரம்பரிய ஆடை, தங்க அணிகலன்கள், செங்கோல் ஆகியவற்றை வழங்கி, வாழ்த்தி, சேலம் நிர்வாகிகளை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

சேலம் மேயர்+ துணை மேயருக்கு அமைச்சர் கே. என். நேரு வாழ்த்து…

இப்படி, திமுக எம்பி கனிமொழி கருணாநிதி, அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் அவரவருக்கு திமுக தலைவரால் இட்ட பணிகளை செவ்வனே நிறைவேற்ற பொறுப்புடன் பணியாற்றினார்கள்.

ஆனால், திமுக பொதுச் செயலாளரும், அவரது மகனும், தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக, மேயர் பதவியின் மாண்பையே கேலிக்கூத்தாக்கும் வகையில், மாலை நேரத்தில் மீண்டும் மாநகராட்சி மாமன்ற திமுக மற்றும் கூட்டணி கவுன்சிலர்களை வரவழைத்து, பதவியேற்பு விழாவை நடத்தி, தாங்கள் இல்லையென்றால் வேலூர் திமுகவில் ஒன்றும் நடக்காது என்பதைப் போல காட்டிக் கொண்டார்கள்..

ரிப்பீட்டாக நடந்த விழாவில் மேயர் ஆடை அணிவிக்கும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்…

நடிகர் சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா பேசிய வசனம் போல, வந்தான், சுட்டான், ரிப்பீட்டுங்கற மாதிரி, மேயர் உடையை மீண்டும் சுஜாதாவுக்கு அணிவித்த அமைச்சர் துரைமுருகன், தங்க அணிகலன் மற்றும் செங்கோலை வழங்கினார். அவருக்கும், அவரது புதல்வர் கதிர் ஆனந்த்திற்கும் மேயர், துணை மேயர் ஆகியோர் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சியும் நடைபெற்றது.

தங்க ஆபரணங்களை அணிவித்த அமைச்சர் துரைமுருகன்…

துளியும் உற்சாகமின்றி வெறும் சம்பிரதாயத்திற்காக மட்டுமே, அதுவும் நாளிதழ்களில் தங்களது புகைப்படங்கள் வரவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு நடத்தப்பட்ட இந்த நிகழ்வை, வேலூரில் உள்ள முக்கிய திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொள்ளவில்லை என்பதுதான் சோகம்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, திருப்பத்தூர், ராணிப்பேட்டையை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திமுகவின் சாம்ராஜ்யமாக திகழ்ந்த அமைச்சர் துரைமுருகனின் செல்வாக்கு, கடந்த ஐந்தாறு வருடமாக மளமளவென சரிந்து வருகிறது. அத்தனைக்கும் காரணம், தன்னால் வளர்க்கப்பட்ட தளகர்த்தர்களை விட தனது தவப்புதல்வன்தான், தன்னை போல அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்ற நினைத்த பேராசைதான் காரணம் என்கிறார்கள் அவரது வயது ஒத்த திமுக மூத்த நிர்வாகிகள்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதைப் போல, வேலூர் மாநகராட்சி துணை மேயராக பதவியேற்றுக் கொண்ட சுனில்குமார், அமைச்சர் துரைமுருகனின் தீவிர ஆதரவாளர்.  ஏபி நந்தகுமார் எம்எல்ஏவின் சமூகத்தைச் சேர்ந்தவராக சுனில்குமார் இருந்தாலும்கூட, அமைச்சர் துரைமுருகனின் நிழலிலேயே வளர்ந்தார். அவருக்கு மிகவும் விசுவாசமாக இருந்த சுனில்குமார், ஏபி நந்தகுமாரைப் போல, கதிர் ஆனந்தின் திடீர் அதிகாரத்தை சகித்து கொள்ளாமலேயே நாட்களை நகர்த்தி வந்தார்.

இந்த நேரத்தில்தான் மேயர் தேர்வில், ஏபி நந்தகுமார், கார்த்திகேயன் ஆகியோரின் செல்வாக்கு வெட்ட வெளிச்சமானதால், துரைமுருகனின் கூடாரத்தை காலி செய்து கொண்டு, கதிர் ஆனந்தின் அதிகார திமிரை அடக்குவதற்காக, ஏபி நந்தகுமார் அணிக்கு வந்துவிட்டார் என்கிறார்கள் அவரது சிஷ்ய கோடிகள்.

துணை மேயர் சுனில் குமார் மரியாதை..

ஆக, மொத்தததில் தன் புதல்வனை முன்னிறுத்தி அமைச்சர் துரைமுருகன் ஆடும் ஆட்டமெல்லாம் (வேலூர் மேயர் பதவி ஏற்பு விழாவிலும்) புஷ்வானமாகி மாறிவருவதைக் கண்டு சோக கீதம் பாடுகிறார்கள் இருவரது விசுவாசிகள்….

மாநகராட்சி ஆணையர் அசோக்குமாருடன் மேயர்- துணை மேயர்….
முரசொலி வாசிக்கும் மேயர் சுஜாதா ஆனந்தகுமார்