Sun. Apr 28th, 2024

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக மேயர்களே அரியணையில் அமரவுள்ள நிலையில், மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளிலும் மேயர் பதவிக்கும், துணை மேயர் பதவிக்கும் யாரை தேர்வு செய்வது என்ற விவகாரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டா போட்டி, ஹாலிவுட் க்ரைம் சினிமாவையே மிஞ்சும் வகையில்தான் உள்ளது என்கிறார்கள் திமுக உட்கட்சி அரசியலை நன்கு அறிந்த முன்னணி நிர்வாகிகள்..

அந்த வரிசையில், வேலூர் மாநகராட்சிக்கான மேயர் தேர்வு, சீரியஸான விவகாரமாக இல்லாமல் காமெடி ரேஞ்சுக்கு மாறி வருவதைக் கண்டுதான் வேலூர் மாநகர மக்கள் குஷியாகி இருக்கிறார்கள்.
அவர்கள் குஷிக்கு காரணம், திமுக தலைவர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள தற்போதைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தன்னால் வளர்க்கப்பட்ட தளகர்த்தர்களுடன் வீம்புக்கு மல்லுக்கட்டி வருவதைதான் கதை, கதையாக சொல்லி சிரிக்கிறார்கள்.
இதன் பின்னணியை அ முதல் அந்தம் வரை விவரிக்கிறார், வேலூர் மாவட்ட அரசியல் வரலாற்றை கரைத்து குடித்துக் கொண்டிருக்கும் பிரபல விஐபி ஒருவர்.

வேலூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் சுளையாக 45 வார்டுகளை தி.மு.க., கூட்டணி கைப்பற்றியுள்ளது. 7 வார்டுகளில் அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ள நிலையில், 6 வார்டுகளில் சுயேட்சைகளும், பா.ஜ., மற்றும் பா.ம.க., தலா ஒரு வார்டுகளிலும் துண்டை போட்டு வைத்துள்ளனர்.

மேயர் பதவி மகளிர் பொதுப்பிரிவினருக்கு என்தால், ஒதுக்கப்பட்டிருக்கும் மேயர் பதவியில் அமர்பவர், வன்னியரா? முதலியாரா? என்ற சமூக மோதல் ஏற்பட்டுள்ளது. இதை, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகனே தொடங்கி வைத்திருக்கிறார்.

பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்த திமுக மாமன்ற உறுப்பினர்தான் மேயராக பதவி ஏற்க முடியும் என்று வேலூர் திமுக உட்கட்சி விவாதத்தில் உறுதியான நிலையிலும், அவர் யார் என்று அடையாளம் காட்டபடாத நிலையால்தான், வேலூர் மக்களிடம் கிசுகிசு கூட பிரேக்கிங் நியூஸ் அளவுக்கு பதற வைத்துக் கொண்டிருக்கிறது.


அமைச்சர் துரைமுருகனுடன் ஏபி நந்தகுமார் எம்எல்ஏ...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் உள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் விரல் நீட்டும் பிரமுகருக்கா? அல்லது அவரால் அரசியலில் வளர்த்து எடுக்கப்பட்டு இன்று தளகர்த்தர்களாக உயர்ந்து நிற்கும் வேலூர் மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு எம்எல்ஏவுமான ஏபி.நந்தகுமார் மற்றும் வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் ஆகியோர் பரிந்துரைக்கும் திமுக மகளிர் அணி நிர்வாகிக்கா? என்பதுதான்..

புஷ்பலதா….7 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர்

வேலூரை காலி செய்துவிட்டு சென்னையில் நிரந்தரமாக தங்கிவிட்ட பொ.செ. துரைமுருகனுக்கு, தன் புதல்வர் கதிர் ஆனந்த்தின் ஆதிக்கத்தில்தான் வேலூர் மாவட்டம் என்றைக்கும் இருக்க வேண்டும் என்ற தணியாத தழலின் காரணமாக, தனது தளகர்த்தர்களுடனேயே மோதிக் கொண்டிருக்கிறாராம். அதுவும் தான் சார்ந்த சமுதாயத்தைச் சேர்ந்த வன்னியராஜாவின் மனைவி புஷ்பலதாவை, வேலூர் மேயர் ஆக்க தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறார்.

தந்தை, திமுகவின் பொதுச் செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்.

அவரது புதல்வர் கதிர் ஆனந்த், வேலூர் எம்பி.

வேலூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பாபு…

இந்த மூன்று பேரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் போது, அதே சமுதாயத்தைச் சேர்ந்தவருக்குதான் மேயர் பதவியா? என்று கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் பிற சமுதாயத்தைச் சேர்ந்த வேலூர் மாநகர திமுக பிரமுகர்கள்.

இரட்டை தளகர்த்தகர்கள்…

அவர்களின் உள்ளுணர்வுகளை ஒட்டுமொத்தமாக உள்வாங்கிக் கொண்ட முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன், நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவரும் வேலூர் மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு எம்எல்ஏவுடனான சிறுசிறு மனமாச்சர்யங்களை எல்லாம் மறந்துவிட்டு அவருடன் கைகோர்த்து ஒருமித்த உணர்வோடு மேயரை தேர்வு செய்ய முன்வந்துள்ளார். இரட்டை தளகர்த்தகர்கள் இருவரும் (நந்தகுமார், கார்த்திகேயன்) இணைந்த கைகளாக களத்தில் நின்று, திமுக சார்பில் வெற்றிப் பெற்ற மாமன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சுஜாதா எம்ஏ, பி எட், 31 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர்…

இதில், பெரும்பான்மையானவர்கள், மாவட்டமும் (நந்தகுமார்), உள்ளூர் திமுக எம்எல்ஏவும்(கார்த்திகேயன்) எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுகிறோம் என்று ஒருமித்த குரலில் சொல்ல, நந்தகுமாரும், கார்த்தி ஆகிய இருவரும் சேர்ந்து பலம், பலவீனங்களை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, 31 வது வார்டு மாமன்ற உறுப்பினராக தேர்வாகியிருக்கும் பட்டமேற்படிப்பு படிததுள்ள சுஜாதாவை மேயர் பதவிக்கு பரிந்துரைக்கலாம் என முடிவு எடுத்து, திமுக தலைமைக்கும் அதிகாரப்பூர்மாக தெரிவித்து விட்டார்களாம்.


தனக்கு எதிராக மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான நந்தகுமாரும், வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயனும் ஒன்று சேர மாட்டார்கள் என்று கனவுக் கண்டு கொண்டிருந்த துரைமுருகன், மேயர் தேர்வு விவகாரத்தில் தளகர்த்தர்கள் கைகோர்ப்பதை கண்டு அதிர்ச்சியாகி, 50 ஆண்டு கால அரசியலில் தான் பயன்படுத்தி வரும் ராஜதந்திர அஸ்திரத்தை கையில் எடுத்து, இருவர் கூட்டணிக்கு அதிர்ச்சி கொடுக்க துணிந்து விட்டார்.

தனது முடிவால் இரட்டையர்கள் நிலை குலைந்து போவார்கள் என நினைத்து அவர் சீரியஸாக வகுத்த வியூகம்தான் இப்போது காமெடியாகிவிட்டது.

சிவசங்கரி, 9 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர்…

வன்னியர் சமுதாயத்திற்கு மேயர் பதவி கிடையாது. முதலியார் சமுதாயத்திற்குதான் மேயர் பதவி கொடுக்க வேண்டுமா? சரி.. இரட்டையர் சொல்கிறபடியே செய்வோம். ஆனால், முதலியார் மேயர் வேட்பாளரையும் தான் தான் முடிவு செய்வேன் என முஷ்டியை உயர்த்திய துரைமுருகன், தனது நீண்ட கால ஆதரவாளரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான அ..மா.ராமலிங்கத்தின் புதல்வியான சிவசங்கரியை மேயராக்கலாம் என குரலை உயர்த்தியுள்ளார். சிவசங்கரியின் கணவர் பரமசிவம், துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்தின் தீவிர ஆதரவாளர்.


துரைமுருகனின் அரசியல் சதுரங்க ஆட்டத்தை கண்டு அதிர்ச்சியடையாமல், டேக் இட் ஈஸி பாலிஸியாக, அவரைவிட சிறந்த அரசியல் ராஜதந்திரியாக தங்களை முன் நிறுத்தும் வகையில், தாங்கள் தேர்வு செய்துள்ள வேட்பாளரின் தகுதியை தலைமைக்கு பரிந்துரைந்துள்ளார்களாம்.

வெறும் சமுதாயத்தை மட்டுமே தகுதியாக பார்க்காமல், எம்.ஏ., பி எட் என உயர்கல்வி நிலையை எட்டியிருப்பவர் என்பதுடன் வேலூர் மாநகர திமுக மகளிரணியில் அமைப்பாளர் பதவி வகித்து வருவதுடன், கடந்த 12 ஆண்டுகளாக கட்சி பதவி வகித்து வருவதுடன் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட ஆளும்கட்சிக்கு எதிரான போராட்டங்களில் முதல் நபராக வந்து நின்றவர் என்ற தகுதிகளின் அடிப்படையில்தான் சுஜாதாவை முன் நிறுத்துகிறோம். இவரின் தகுதிகளோடு எந்த நிலையிலும் சமமாக இல்லாத, அதுவும் எந்தவொரு கட்சி நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் குடும்ப பெண்ணாக மட்டுமே வாழ்ந்து வரும் சிவசங்கரியை முன்நிறுத்துவது எந்த வகையில் நியாயாம்?

தவமணி, 44 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர்

வேலூர் மாநகரத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க நாங்கள் முன்வந்தால், முதலியாருக்கு முதலியார் என போட்டி மேயரை திமுகவின் பொதுச் செயலாளர் என்ற உயர்ந்த நிலையில் உள்ள துரைமுருகனே சிந்திக்கலாமா? என்று கேள்வி எழுப்பும் இரட்டையர்களான தளகர்த்தர்கள், துரைமுருகனுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், நான்காவது நபராக சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த (யாதவர்) தவமணி என்பரை மேயர் வேட்பாளராக முன்நிறுத்தும் முடிவுக்கும் வந்துவிட்டார்களாம். இவர், மாநகராட்சி மாமன்ற வார்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு பரிந்துரைத்தவரும், முன்மொழிந்தவரும் சாட்சாத் கார்த்திகேயன் எம்எல்ஏதான். இவர் வசித்து வரும் பகுதியும் 44 வது வார்டுக்குள்தான் இருக்கிறது.

கார்த்திகேயன் எம்எல்ஏ

தவமணியின் கணவர் தாமோதிரன், 15 ஆண்டுகளுக்கு முன்புதான் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்திருக்கிறார். இவர் முன்னாள் கவுன்சிலும் கூட…திமுகவில் இணைந்த நாள் முதலாக இந்த நிமிடம் வரை எம்எல்ஏ கார்த்திகேயனின் தீவிர ஆதரவாளராகவும், துடிப்புமிக்க திமுக நிர்வாகியாகவும் செயல்பட்டு வருவதால், இரண்டு சமுதாயத்திற்கு அடுத்து திடீர் அதிர்ஷ்டமாக, மூன்றாவது சமுதாயத்தைச் சேர்ந்த தவமணி தாமோதிரனை பரிந்துரைக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்களாம் தளகர்த்தர்கள்.

வன்னியரும் வேண்டாம், முதலியாரும் வேண்டாம்.. யாதவர் சமுதாயத்திற்கு மேயர் பதவி கொடுப்போம் என்ற நிலைக்கு நந்தகுமார், கார்த்தி ஆகியோர் அடுத்த குண்டை தூக்கி போட்டுள்ளதால் ஆடிப் போய் இருக்கிறார்கள் துரைமுருகனும், கதிர் ஆனந்த்தும் என்கிறார்கள் இருவரது ஆதரவாளர்கள்..


இப்ப என்ன செய்வீங்க..இப்ப என்ன செய்வீங்க என துரைமுருகன், கதிர் ஆனந்த்திற்கு எதிராக யாதவர் மேயர் வேட்பாளரை முன்நிறுத்தவும் தயங்காத தளகர்த்தர்கள் இரட்டையர்களின் காய் நகர்த்தல்களைப் பார்த்து, தந்தையும், தனையனும் இரட்டையரின் இந்த சவாலை எப்படி எதிர்கொள்வது, முறியடிப்பது என்று மண்டையை பியந்து கொண்டிருக்கிறார்கள் என்று நகைச்சுவையோடு பேசும் வேலூர் திமுக மூத்த நிர்வாகிகள், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து திமுகவினருக்கும் நன்றாக தெரியும் அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார், திமுக தலைவர் குடும்பத்தினருக்கு மிகமிக நெருக்கமாகி ரொம்ப காலமாகிவிட்டது என்று.

அவரது விருப்பத்திற்குதான் முதலிடம் கொடுப்பார்களே தவிர, எவ்வளவு உயர்ந்த நிலைக்கு வந்த பிறகும் கூட ஊர்க்குருவி போல சாதிய உணர்வோடு செயல்பட்டு கொண்டிருக்கும் அமைச்சர் துரைமுருகனின் ஆசைகள் நிறைவேற ஒருபோதும் உதவ மாட்டார்கள் என்பதை வேலூர் மாவட்டத்தில் உள்ள சாதாரண திமுக தொண்டரும் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
இந்த நிமிடம் வரை சுஜாதா தான் முதல் இடத்தில் இருக்கிறார். இவரை தேர்வு செய்த நந்தகுமார் எம்எல்ஏவுக்கு பெரிய அளவிலான நிம்மதியை தேடி தந்திருப்பவர் வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன்தான்.

மேயர் தேர்வு விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகனுடன் சேர்ந்து காய் நகர்த்தாமல் தன்பக்கம் கார்த்திகேயன் எம்எல்ஏ நிற்பதுதான், நந்தகுமாருக்கு யானைப் பலம் வந்தது போல உணர வைத்து இருக்கிறது. அதனால், அமைச்சர் துரைமுருகனின் சதுரங்க விளையாட்டுகளை எல்லாம் தூசு போல உதறிவிட்டு, சாதிக்கும் ஆற்றல் கொண்டவர் இன்றைய தேதியில் வேலூர் மாவட்ட திமுக செயலாளர் நந்தகுமார் எம்எல்ஏதான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்கிறார்கள்.


ஜெயிக்கப் போவது தளகர்த்தர்களான இரட்டையர் கூட்டணியா (நந்தகுமார், கார்த்திகேயன்) தந்தையும், (துரைமுருகன், கதிர் ஆனந்த்) தனையனுமா?

இந்த போட்டிகளிடையே வேலூர் பட்சி ஒன்று கிசுகிசு போல ஒரு தகவலைச் சொல்லி, வேலூர் மாவட்ட திமுக செயலாளர் நந்தகுமார் எம்எல்ஏவின் சாணக்கியத்தனத்தை போட்டு உடைத்தார்.. சுஜாதா, முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்..அவரது கணவர் ஆனந்தகுமார், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். கலப்பு திருமண முன்னோடிகளாக, காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் இவர்கள் என்றது.

அடேங்கப்பா, உண்மையில் கில்லாடிதான் நந்தகுமார் எம்எல்ஏ…

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா…

அப்படியென்றால் சுஜாதா ஆனநதகுமார் தான் வேலூர் மேயரா?

மார்ச் 4ல் செங்கோல் சுமக்கும் மேயர் படம் ரீலிஸ் ஆகிவிடும். …

One thought on “வேலூர் மாநகராட்சி மேயர் யார்? குரு துரைமுருகனுடன் மல்லுக்கு நிற்கும் தளகர்த்தர்கள் நந்தகுமார்& கார்த்திகேயன்…… வன்னியர், முதலியார் ரேஸில் யாதவருக்கு அடிக்குமா, அதிர்ஷ்டம்!”

Comments are closed.