நாதுராம் கோட்சேவின் தீவிர ஆதரவாளரும் இந்துத்துவா தீவிர வெறியாளருமான உமா ஆனந்தன், சென்னை மாநகராட்சி மாமன்ற பாஜக உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளது, திராவிட அரசியலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடுமோ? என அரசியல் ஆய்வாளர்கள் அதிர்ச்சியோடு கேள்விகளை எழுப்புகின்றனர்.
சென்னை மாநகராட்சியின் இதயப்பகுதியான மேற்கு மாம்பலத்தை உள்ளடக்கிய 134 வது வார்டில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட உமா ஆனந்தனின் வெற்றி, திராவிட சித்தாந்தத்தில் ஆழமான பற்றுக் கொண்டவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதற்கு காரணம் வெறும் பாஜக மற்றும் இந்துத்துவா எதிர்ப்பு மட்டுமல்ல.. சாதிய வேறுபாடுகளை பகிரங்கமாக ஆதரிப்பதுடன், தாழ்த்தப்பட்டோர் மற்றும் தந்தை பெரியாரின் சிந்தாந்தத்தை கண்ணியமற்ற வார்த்தைகளால் விமர்ச்சித்து வருவதையே அரசியல் நெறியாக கொண்ட இந்துத்துவா வெறியாளர் ஒருவர், பண்பட்ட சென்னை மாநகரில் தனித்து வெற்றி பெற்றிருப்பதுதான் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் அவர்கள்.
கோட்சேவை பகிரங்கமாக ஆதரித்து வரும் உமா ஆனந்தன், சென்னை மாநகராட்சி தேர்தலில் பாஜக வேட்பாளராக களம் இறங்கியபோதே, அவருக்கு எதிராக அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களும் கடுமையான எதிர்ப்பை சமூக ஊடகங்களில் பதிவிட தொடங்கினர்.
மத மோதலுக்கு வித்திடும் வகையில் உமா ஆனந்தன் பேசிய வெறித்தனமான பேச்சுகள் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பி வந்தனர்.
தேர்தலுக்கு முன்பாகவே தீவிர இந்துத்துவா ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு முனைப்பான களப்பணியாற்றி வந்த உமா ஆனந்தன், மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சோவை மாபெரும் புரட்சியாளராக அங்கீகரித்து துணிச்சலாகவே பேசி வந்தார்.
திராவிட பூமி என்று போற்றப்படும் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலேயே, இந்துத்துவா கொள்கைகளையும், சனாதன கோட்பாடுகளையும் மிகுந்த தைரியத்துடன் பரப்புரை மேற்கொண்டு வருபவர், உமா ஆனந்தன்.
திராவிட சிந்தாந்தவாதிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் ஒரு சேர சம்பாதித்து வைத்திருக்கும் உமா ஆனந்தனின் தேர்தல் அரசியலை ஆத்திரத்துடன் எதிர்த்து வந்த திராவிட இயக்கத்தினர், அவரை களத்தில் வீழ்த்த முனைப்புடன் களப்பணியாற்றினர்.
சிறுபான்மையினருக்கு எதிராக கடுமையான பிரசாரத்தை மேற்கொண்ட உமா ஆனந்தன், இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகளை குறி வைத்தே முனைப்பான பரப்புரையை மேற்கொண்டார். சிறுபான்மையினருக்கு எதிராகவும், மதநல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் வகையிலும், இந்துத்துவா வெறியை ஊதி பெரிதாக்கும் விதமாகவே உமா ஆனந்தனின் பரப்புரை அமைந்திருந்தது என்கிறார்கள் திராவிட சிந்தாந்தவாதிகள்.
இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு எதிராக இந்துக்கள் அனைவரும் கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக பேசி வருபவர் உமா ஆனந்தன். மதநல்லிணக்கத்தை பேணி வரும் சென்னை மாநகரில், சாதி மத மோதலை விரும்பாத மக்கள் நிரம்பியிருக்கும் தமிழகத்தின் தலைநகரில், தனித்த இந்துத்துவா தீவிர ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட உமா ஆனந்தன், மாநகராட்சியின் ஒட்டுமொத்த வார்டுகளான 200 இடங்களில் அவர் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது, பாஜகவுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை தேடி தந்துள்ளது என்கிறார்கள் பாஜக மூத்த முன்னோடிகள்.
சாதி வழக்கத்தை மிக,மிக முனைப்புடன் ஆதரிப்பவராகவும், பார்ப்பனர் என்ற சாதி பெருமையை மிகவும் பெருமிதமாகவும் கூறி வரும் உமா ஆனந்தன், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 134 வார்டில், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சுசீலா கோபாலகிருஷ்ணனை விட ( 3,503) 2,036 வாக்குகள் வித்தியாசத்தில் (5,539) வெற்றி பெற்றிருப்பது, திராவிட சித்தாந்தவாதிகளிடம் மட்டுமின்றி மதநல்லிணக்கத்தை உயிர் மூச்சாக கொண்டிருக்கும் ஆன்றோர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தலித் தலைவர்களையும் குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் தந்தை பெரியார் ஆதரவாளர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் உமா ஆனந்தத்தின் தேர்தல் வெற்றி, சென்னையில் உள்ள ஒட்டுமொத்த பாஜக நிர்வாகிகள், ஆதரவாளர்கள், இந்து முன்னணி நிர்வாகிகள் என இந்துத்துவா ஆதரவாளர்களிடம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் திமுக பெற்றிருக்கும் அசுர வெற்றியை விட, அதிமுக அடைந்த படுதோல்வியை விட, நாம் தமிழர் உள்ளிட்ட மாற்று அரசியலை முன்னெடுத்த அரசியல் கட்சிகள் சந்தித்துள்ள பெரும் பின்னடைவைவிட, ஒத்த பாஜக வேட்பாளரின் வெற்றி, அதுவும் தீவிர இந்துத்துவா சிந்தனை கொண்ட உமா ஆனந்தனின் வெற்றிதான், பெரும் விவாதமாக மாறியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்..