2019 நாடாளுமன்றத் தேர்தலில் துவங்கி கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் வரை திமுக தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்ட தேர்தல் பிரசார வீடியோக்கள், திமுகவினரிடம் மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் அமோகமாக ஈர்த்தது.
அந்தவகையில், கடந்த 9 மாத கால ஆட்சியில் திமுக அரசில் நிறைவேற்றப்பட்ட சாதனைகள், மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், மாநில சுயாட்சியை நிலைநாட்டவும் திமுக முன்னெடுத்த முழக்கங்கள் உள்ளிட்டவற்றை பிரதானமாக்கி தேர்தல் பரப்புரை வீடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் இத்தகைய வீடியோக்கள், திமுக தலைமையின் வெற்றி முழக்கமான உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி என்பதை 100 சதவீதம் சாத்தியப்படுத்துமா? என்பதே அரசியல் கள ஆய்வாளர்களின் கேள்வியாக எழுந்திருக்கிறது.
இதையும் கடந்து, ஆளும்கட்சி என்ற அந்தஸ்தோடு களத்தில் தீவிரமாக களப்பணியாற்றி வரும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சியினருக்கு இதுபோன்ற வீடியோ பரப்புரைகள், வாக்குசேகரிப்பில் நிலவி வரும் நெருக்கடிகளை பெருமளவில் குறைக்கும் வகையில் உள்ளதாக வாக்கு சேகரிப்பில் தீவிர முனைப்போடு ஈடுபட்டிருக்கும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஆளும்கட்சியான திமுக, முழு பலத்தோடு உள்ளாட்சிகளை முழுமையாக கைப்பற்றும் நோக்கோடு களமாடி வரும் இந்தநேரத்தில், ஏற்கெனவே மந்தமான தேர்தல் பரப்புரையில் தள்ளாடி வரும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில், ஆளும்கட்சியின் பரப்புரை வீடியோக்கள் சீண்டி விடுமா?
அதிமுக தலைமையில் ஒற்றுமையில்லாததாலும், பணத்தை செலவழிப்பதற்கு இரட்டை தலைமையே அதிகளவு தயக்கம் காட்டி வருவதாலும், நொந்து போய் இருக்கிறார்கள் அதிமுக வேட்பாளர்கள் என்கிறார்கள் அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வேதனையோடு….
பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் நிலையே பரிதாபமாக இருக்கும் நிலையில், பாஜக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் உயிரைக் கொடுத்து முழங்கும் தேர்தல் பரப்புரைகள் மாநிலம் முழுவதும் வாக்காளர்களின் செவிகளை சென்றடையுமா? சந்தேகம்தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்…
எளிய மக்களின் இதயங்களை எளிதாக கைப்பற்றும் நோக்கில் தேர்தல் பரப்புரை வீடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறும் அரசியல் நோக்கர்கள், அரசியல் சார்ப்பற்ற மக்களையும் இத்தகைய பரப்புரை வீடியோக்கள் முழுமையாக ரசிக்க வகைக்கும் என்று ஆரூடம் கூறுகிறார்கள்..
இன்றைக்கு கிராமங்களில் வாழும் விளிம்பு நிலை மனிதர்களிடம் கூட தரமான கைபேசிகள் இருப்பதாலும், வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களை எளிதாக கையாள்வதில் தேர்ந்தவர்களாக இருப்பதாலும், திமுகவின் நவீன தேர்தல் பரப்புரை யுக்திக்கு மிகப்பெரிய வெற்றி சாத்தியம் என்று அடித்து கூறும் திமுக தகவல்தொழில் நுட்ப அணி நிர்வாகிகள், மத்திய பாஜக அரசுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள கருத்தாக்கம், அடிதட்டு மக்களின் மனங்களைளயும் எளிதாக வென்றுவிடும் என்று மிகுந்த நம்பிக்கையோடு கூறுகிறார்கள்…