Fri. Nov 22nd, 2024

பாதுகாப்புப் பணியில் 1 லட்சத்து 13 ஆயிரம் போலீசார் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வாக்குச்சாவடிகள் உள்பட பல்வேறு தேர்தல் பணிகளில் 1 லட்சத்து 32 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2 கோடியே 83 லட்சம் வாக்காளர்கள் நாளை நடைபெறும் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்று இருக்கின்றனர்.

பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் 295 இடங்களில் நாளை வாக்குப்பதிவு கிடையாது. வாக்குப்பதிவை சிசிடிவி, வெப்ஸ்ட்ரீமிங் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்பட ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகள் உள்ளிட்ட இடங்களில் எவ்வித அசம்பாவிதம் ஏற்படாத வகையில், சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவை நகரம் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் எவ்விதமான அசம்பாவிதம் நடந்தாலும் அதை சமாளிக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

முன்னெச்சரிகை நடவடிக்கையாக போதுமான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னமும் போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று சொல்வதை ஏற்க முடியாது.

இவ்வாறு தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார்.