Fri. Nov 22nd, 2024

பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளை உள்ளடக்கிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி கடந்த பல நாட்களாக நடைபெற்று வந்த தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இறுதிகட்ட பரப்புரையில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் முனைப்புடன் ஈடுபட்டனர்.

காணொளி வாயிலாக திருநெல்வேலி மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அதிமுக அமோக வெற்றிப் பெற இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன், கொல்லங்கோடு நகராட்சி மற்றும் புதுக்கடை ,கிள்ளியூர் ஆகிய பகுதிகளில் மக்களின் நலன்களுக்காக மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு செய்யும் வகையில் எடுத்துரைத்து பரப்புரை மேற்கொண்டார்.

கோவையில் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி மக்களை எல்லா வகையிலும் வஞ்சித்த அதிமுகவை உள்ளாட்சியிலும் தோற்கடித்து, தமிழர் நலன் – மாநில உரிமை – தமிழ் மொழி என எல்லா வகையிலும் நல்லாட்சி தருகின்ற நமது ஆட்சியை உள்ளாட்சியிலும் தொடரச் செய்வோம் -என்று தூத்துக்குடி அண்ணா நகரில் பெருந்திரளாய்க் கூடியிருந்த பொதுமக்களிடம் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி வாக்கு சேகரித்தார்.

இதேபோல, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் மாலை வரை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.