Fri. Nov 22nd, 2024

தமிழகத்தில் சட்டமன்றம் முடக்கப்படும் என்று பேசுவது எல்லாம் அபத்தமான ஒன்று என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

27 அமாவாசைக்குள் தமிழகத்தில் தேர்தல் வரும் என அதிமுகவின் முன்னாள் முதல்வர்கள் பேசுவது “கிளி ஜோசியம்” சொல்வது போல் உள்ளது.

இரண்டாம் தர பேச்சாளர்கள் போலல்லாமல், அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட அரசியல் சாசனத்தின் மதிப்பை உணர்ந்து பேச வேண்டும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என அதிமுக பேசுவது, பாஜகவின் குரலாக உள்ளது.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது.

ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவோம் என்ற திமுகவின் வாக்குறுதி நிறைவேறுவதால் தான், அதிமுகவின் ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் மேடை போட்டு பேசி வாக்கு கேட்டு வருகின்றனர்.

மேற்கு வங்காளத்தில் நடைபெற்றதைப் போல, தமிழகத்திலும் சட்டமன்றத்தை முடக்குவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது அபத்தமான பேச்சு. அவர் ஐபிஎஸ் அதிகாரி என்று கூறுகிறார்கள். அரசியல் சாசனத்தை அவர் முழுமையாக படித்து பார்க்க வேண்டும். பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில், சட்டமன்றத்தை ஒருபோதும் முடக்க முடியாது.

2021 ல்தான் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. அந்த அடிப்படையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 2026 ஆம் ஆண்டில்தான் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறும். ஜல்லிக்கட்டு போட்டியை முடக்கியதைப் போல எல்லாம், தமிழக சட்டமன்றத்தை முடக்கி விட முடியாது.

ஒரு நாடு ஒரு தேர்தல் என்பதெல்லாம் இந்தியாவில் சாத்தியம் கிடையாது.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.