காவிரி,முல்லைப் பெரியாறு சட்டப்படி நடந்து கொள்ள கர்நாடக கேரள காங்கிரசாருக்கு ராகுல்காந்தி ஆலோசனை வழங்க முன்வரவேண்டும். தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் என
பிஆர் பாண்டியன் வலியுறுத்தினார்…
பிஆர் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் நீர்ப்பாசன பிரச்சினைகளில் அண்டை மாநிலங்களை நம்பி உள்ளது. குறிப்பாக பாலாறு,காவிரி, முல்லைப்பெரியாறு, தென்பெண்ணை உள்ளிட்ட ஆறுகளின் பாசன தமிழக உரிமையை தொடர்ந்து வழங்க கர்நாடகம் கேரளா ஆந்திர மாநிலங்கள் மறுத்து வருகிறது. இதனால் தமிழகம் தொடர்ந்து போர்க்களமாக மாறி வருகிறது.
கடந்த 2013ம் ஆண்டு முதல் காவிரி பிரச்சனை உச்சக்கட்ட போராட்டம் தமிழகம் கர்நாடகம் இடையே நடந்து வருகிறது. தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு கர்நாடகம், தமிழகத்தில் காவிரி குறித்த அனைத்து அணைகளின் நீர் நிர்வாக அதிகாரங்கள் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
கர்நாடக அரசு தமிழக எல்லைக்கு அருகே மேகதாதுவில் புதிய அணை கட்டி தமிழகத்திற்கு வரக்கூடிய உபரி நீரையும் தடுத்துநிறுத்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்கும் மறைமுக சதி செயலில் ஈடுபட்டு வருகிறது.
மோடி அரசாங்கம் 2018ல் கர்நாடக மேகதாது அணை கட்ட வரைவுத் திட்ட அறிக்கை தயார் செய்ய ஆணையத்தின் அனுமதி இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக அனுமதி வழங்கி உள்ளது.காவிரி மேலாண்மை ஆணையம் இதனை சட்டவிரோதம் என அறிவித்துள்ளது. இது குறித்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமனம் செய்யப்பட்டு தன்னாட்சி அதிகாரத்தோடு ஆணையம் செயல்பட்டு வருகிறது.கர்நாடக அரசு திட்ட அறிக்கை தயார் செய்து அனுமதி கேட்டு ஆணையத்திற்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் மூலம் அனுப்பி வைத்துள்ளது. அதனை விவாதிக்க ஆணையம் பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் நிராகரித்துள்ளது.
கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆணையம் அனுமதி இன்றி மேகதாது அணை கட்ட இயலாது அதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம் என்று விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மேகதாது அணை கட்ட வலியுறுத்தி மாபெரும் பேரணி நடத்தி வருகிறது.இதனை எதிர்த்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கமும் மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை நடத்தியுள்ளோம்.
முல்லைப்பெரியாறில் அணை வலுவாக உள்ளது என உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்ட மத்திய அரசின் அணை பாதுகாப்பு குழு தொடர்ந்து ஆய்வு செய்து ஆதாரத்தோடு அதை நிரூபித்து வருகிறது.இந்நிலையில் கேரளாவில் காங்கிரஸ் கட்சி அணையை உடைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் கொடுத்த தீர்மானத்தை அம்மாநில முதலமைச்சர் பிணராய் விஜயன் நிராகரித்துள்ளார்.
மேலும் அணை வலுவாக உள்ளது எனவும் அணை குறித்து விஷமப் பிரச்சாரம் செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளார். ஆனால் தொடர்ந்து ஏற்க மறுக்கும் காங்கிரஸ் கட்சி அணையை உடைக்க வேண்டும். புதிய அணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதனை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் மத்திய நீர்வள ஆணையம் முல்லைப்பெரியாறு அணையை மறு முழு மறுஆய்வு நடத்த வேண்டுமென மனு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி நீட் தேர்வை ரத்து செய்ய தமிழகத்தில் கோரிக்கையை ஏற்க வேண்டுமென்று ஆதரவு தெரிவித்து பேசியதோடு மட்டுமின்றி, நான் தமிழன் என்று தன்னை அடையாளப்படுத்தி பேசியிருப்பதை வரவேற்கிறோம். அதேநேரத்தில் கர்நாடக கேரள மாநில காங்கிரஸ் கட்சிக்கு காவிரி முல்லைப் பெரியாறு பிரச்சினையில் சட்டப்படி நடந்து கொள்ள அறிவுறுத்த முன்வரவேண்டும். பாராளுமன்றத்தில் மத்திய அரசின் தமிழகத்திற்கெதிரான சதிதிட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.
தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனத்தை கலைத்து விட்டு பாராளுமன்றத்தில் காவிரி முல்லைப் பெரியாறு பிரச்சனை எடுத்துவைத்து மேகதாது அணை முல்லைப் பெரியாறுபுதிய அணை கட்டுவதை தடுத்து நிறுத்தவலியுறுத்துவதோடு வரைவுத் திட்ட அறிக்கை தயார் செய்ய கொடுத்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி உரிய போராட்டங்களை துவக்க முன்வரவேண்டும். நீர்வள ஆணையத்தின் தன்னிச்சையான முல்லைப்பெரியாறு அணை மறுஆய்வு கோரும் மனுவை திரும்ப பெற வலியுறுத்த வேண்டும். இதனை வலியுறுத்தி விரைவில் மதுரையிலும், டெல்லி பாராளுமன்றம் முன் விரைவில் போராட்டங்கள் நடத்த உள்ளோம்…
மேற்கண்டவாறு தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் இணைப்பு குழுத் தலைவர் பிஆர் பாண்டியன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன் உடனிருந்தார்..