Fri. Nov 22nd, 2024

2022 – 23 ஆம் ஆண்டிற்காக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் உள்ளடக்கிய கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை உரையாற்றினார்.

முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த குடியரசுத்தலைவரை பாரம்பரிய மரபுபடி மக்களவை தலைவர், மாநிலங்களவை தலைவர் ஆகியோர் வரவேற்று மக்களவைக்கு அழைத்து வந்தனர்.

ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல்நாள் என்பதால் குடியரசுத்தலைவர் தனது உரையை தொடங்கினார். அப்போது அவையில் இருந்த திமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து, நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் திமுக எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால், குடியரசுத்தலைவர் உரையை தெளிவாக கேட்க முடியாத நிலை உருவானது.

மத்திய அரசு தலையிட்டு நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர், நாடாளுமன்றத்திற்கு வெளியே திரண்ட திமுக எம்.பி.க்கள் நீட் தேர்வு குறித்து தமிழக ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் விலக்கு மசோதா விவகாரத்தால், நடப்பாண்டிற்கான நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரே பரபரப்பாகிவிட்டதாக வடநாட்டு அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன.

திமுக எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்த அதேநேரத்தில், குடியரசுத்தலைவர் தனது உரையை தொடர்ந்து ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

நேதாஜி 125வது பிறந்தநாளை மத்திய அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. வரும் 25 ஆண்டுகளில் அனைத்துதரப்பு மக்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் மத்திய அரசு திட்டம் வகுத்து வருகிறது. மூத்த குடிமக்கள் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா 3வது அலைக்கு எதிராக இந்தியா தீரத்துடன் போராடி வருகிறது. உள்நாட்டு தயாரிப்பான தடுப்பூசிக்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்திய தடுப்பூசி 180 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதேபோன்ற முக்கிய அம்சங்கள் குடியரசுத்தலைவர் உரையில் இடம் பெற்றிருந்தன.