காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவரும்,தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான பிஆர் பாண்டியன் சமீபத்தில் கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி நடத்திய பேரணி, பாதயாத்திரையை எதிர்த்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை தமிழகத்தில் நடத்தினார்.
திருவாரூரில் தொடங்கி கர்நாடக எல்லை வரை ஒரு மிகப்பெரிய பேரணியை அமைதியான முறையில் நடத்தினார் .
இதில் காங்கிரஸ், பாஜக கட்சிகளின் இரட்டை வேடத்தையும் தமிழக மக்களுக்கு எதிரான இரு கட்சிகளின் கூட்டு சதியையும், துரோகத்தையும் அம்பலப்படுத்தி, அதற்கு நீதி கேட்கும் வகையில் பல்வேறு இடங்களில் பிஆர் பாண்டியன் இந்த பேரணி பிரச்சாரத்தை வழி நடத்தினார்.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சி கருத்து ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் அக்கட்சியின் தமிழக தலைவர் கேஎஸ்.அழகிரி உட்பட பலர் தொடர்ந்து இணைய தளங்களில் வன்ம பிரச்சாரம் செய்து வருகின்றனர் .
தமிழக மக்களுக்கு பதில் சொல்ல முடியாத காரணத்தினால் காங்கிரஸ் கட்சி இன்றைக்கு பிஆர் பாண்டியன் மீது கொலைவெறி வன்மத்தோடு பேசிவருகிறது .
சமூக வலைதளங்களில் பிஆர் பாண்டியன் அவ மரியாதையோடும் கண்ணிய குறைவோடும் பேசுவதோடு மட்டுமல்லாமல் பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு இனி வெளியில் வந்தால் நாங்கள் அதை சிகப்பு துண்டாக மாற்றி விடுவோம் என்று ஒரு கொலைவெறி வன்மத்தோடு பேசி ஒருவர் காணொலியாகவே பேசி அது சமூக வலைதளங்களில் இன்று பரவலாகி கொண்டிருக்கிறது. இதை தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது…
மேகதாதுவில் அணை கட்டி தமிழக மக்களுக்கு செய்யும் துரோகத்தை காங்கிரஸ் கட்சி வாதத்திறமையால் எதிர்கொள்ள முடியாததால் இப்படி கோழைத்தனமாக சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுப்பது என்பது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் சட்டப்படியும் தமிழக மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவித்து விடக்கூடாது என்பதற்காகவும் மிக பொறுப்புணர்வோடு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. எங்களின் போராட்டம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளது. புதிதாக பொருப்பேற்றுள்ள தமிழக அரசுக்கு காங்கிரஸ் கட்சி கொடுக்கும் நெருக்கடியை குறைக்கும் வகையிலும், மேகதாது அணைக்கு எதிரான பலம் வாய்ந்த ஒன்றுப்பட்ட அரசியல் சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் மிகவும் பொறுப்புணர்வோடு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்நிலையில் இப்படிப்பட்ட கொலை மிரட்டல்கள், தனிநபர் விமர்சனங்கள் இதையெல்லாம் கடந்து நாங்கள் முன்னேறுவோம் என்பதையும் , சட்ட ரீதியாக சந்திப்போம் என்பதையும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைமைக்கு தெரிவித்துக்கொள்கிறோம் .
தமிழக அரசு உடனடியாக இதுபோன்ற சமூக விரோத பேச்சுக்களையும் சமூக வலைதளங்களில் கொலை மிரட்டல் விடும் வகையில் பேசி பதிவிட்ட காங்கிரஸ் கட்சியின் நபரையும் உடனடியாகக் கைது செய்து தமிழகத்தில் வன்முறைக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளுக்காக பயணம் செய்து கொண்டிருக்கின்ற பிஆர் பாண்டியன் பாதுகாப்பு தேவையை உணர்ந்து காவல்துறை பாதுகாப்பு வழங்கி பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு தமிழக அரசை தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.