சென்னை தியாகராய நகரில் பிரபல நிறுவனமான பிரைம் சரவணா ஸ்டோர் செயல்பட்டு வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு பிரைம் சரவணா மற்றும் தங்க மாளிகை சார்பில் இந்தியன் வங்கியிடம், சொத்துகளை அடமானம் வைத்து ரூ.240 கோடி பெற்ற கடன் பெற்றது. வட்டியுடன் சேர்ந்து நிலுவை தொகையாக தற்போது ரூ. 400 கோடி வங்கிக்கு செலுத்த வேண்டும். ஆனால், பலமுறை வங்கி அதிகாரிகள் நேரில் வலியுறும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் நிலுவைத் தொகைக்கு உரிய பணத்தை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இதனையடுத்து, கடன் தொகையை முழுமையாக வசூலிக்க சட்ட உதவியை நாடிய இந்தியன் வங்கி, எழும்பூர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் பிரைம் சரவண ஸ்டோருக்கு சீல் வைக்க உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து ரங்கநாதன் தெருவிலுள்ள கடை மற்றும் உஸ்மான் சாலையிலுள்ள நகைக்கடை கட்டிடத்தை அதிகாரிகள் இன்று காலை அதிரடியாக சீல் வைத்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில் ஐ.டி ரெய்டு நடந்த நிலையில், பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் ஜப்தி செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாள்தோறும் கோடிக்கணக்கில் வியாபாரம் நடந்து வந்த நிலையில், கடன் நிலுவைத் தொகைக்காக ப்ரைம் சரவணா ஸ்டேர் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டதன் மூலம், அந்த நிறுவனத்தின் மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளதாக தொழில் முனைவோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.