சென்னை மாநகரை கடந்த பல நாட்களாக மிரட்டி வந்த கனமழை, நேற்றும் இன்றும் ஓய்வு எடுத்துக் கொண்டதால், மாநகரின் மையப்பகுதியில் உள்ள மக்கள் நிம்மதியடைந்தனர். இருப்பினும், புறநகரையொட்டியுள்ள பகுதிகளில் இன்னும் மழைவெள்ளம் முழுமையாக வடியவில்லை. குறிப்பாக, வடசென்னையின் எல்லையில் உள்ள மணலி பகுதியில் வெள்ள நீரில் வடியாததால், அப்பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் மணலி பகுதியில் நீண்ட நேரம் ஆய்வு மேற்கொண்டார். குதிக்கால் அளவு மழை நீரில் நடந்து சென்று அவர் ஆய்வு மேற்கொண்டதால், மாநகராட்சி அதிகாரிகள் திடுக்கிட்டனர்.
மணலி புதுநகரில் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள், பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு தங்கியுள்ள மக்களையும் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உணவு வகைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.
மேலும், மழைக்கால நோய் தாக்குதலில் இருந்து மக்களை காக்கும் வகையில், விவேகானந்தர் உயர்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாமிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த முகாமிற்கு சென்று ஆய்வு செய்த முதல்வர், நோயாய் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மணலி புதுநகர் உள்பட அனைத்து பகுதிகளிலும் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநகராடசி அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, கொசஸ்தலை ஆற்றுப்பகுதிக்கும் சென்றும் ஆய்வு மேற்கொண்டார். ஆற்றின் கொள்ளளவுக்கு நீர் மட்டம் உயர்ந்ததால், ஆற்றுக்கு வரும் மொத்த நீர் வரத்தும் அப்படியே திறந்து விடப்படுகிறது. ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, கரையோர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார். இந்த ஆய்வின்போது, நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் உள்பட பலர் உடனிருந்தனர்.
சென்னை மாநகரில் மட்டும் வெள்ளப்பாதிப்புகள் குறித்து 4 நாட்கள் தொடர்ந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதேபோல, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும் நேரில் சென்று மழை பாதிப்பை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், வெள்ளத்தில் பயிர் மூழ்கியதால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து விவசாயிகளின் கருத்துகளையும் கேட்டறிந்தார். மழை பாதிப்பு ஏற்பட்டவுடனேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டதால், பொதுப்பணி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் போர்க்கால அடிப்படையில், சென்னை உள்பட கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.