வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக பெய்த கனமழையால், பெரும்பான்மையான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. நேற்றிரவு விடிய விடிய பெய்த மழையால், பேரணாம்பட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழை நீர் புகுந்தது. இதனால், அஜிஜியா தெருவைச் சேர்ந்த பலர், அதே தெருவில் உள்ள அனிதா பேகம் என்பவருக்கு சொந்தமான 50 ஆண்டு கால பழமையான வீட்டில் தஞ்சம் புகுந்தனர். இன்று காலை திடீரென்று அந்த வீடு இடிந்து விழுந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்ற நிலையில், துரதிர்ஷ்டவசமாக 4 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
பேரணாம்பட்டு துயர நிகழ்வுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000ம் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டார்.
பேரணாம்பட்டு துயர நிகழ்வு பற்றிய தகவல் அறிந்தவுடன் விரைந்து சென்ற கைத்தறி துறை அமைச்சர் ஆர். காந்தி, கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளின் உடல்களைப் பார்த்து, கதறி அழுதார். அருகில் இருந்தவர்கள் அவரை ஆசுவாசப்படுத்திய போதும், துயரத்தை கட்டுப்படுத்தமுடியாமல் அமைச்சர் கண்ணீர் விட்டு கதறி அழுததை கண்டு, அங்கிருந்த திமுக நிர்வாகிகள் உள்பட பேரணாம்பட்டு மக்களும் கலங்கினர். சில நிமிடங்கள் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது. தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர், படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்குமாறு மருத்துவர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.