முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி, தனது துறையான ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் அளவுக்கு பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்டார் என்று புகார் கூறப்பட்டது. அதன்பேரில், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போலீசாரின் கைது நடவடிக்கைகயில் இருந்து தப்பிப்பதற்காக, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது காவல்துறை சார்பில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக பணமோசடி புகார் மட்டுமின்றி கொலை முயற்சி குற்றச்சாட்டும் உள்ளதாக தெரிவித்தார். விசாரணையின் போது இடையீட்டு மனுதாரர்கள், அவரவர் தரப்பில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதபதி, வழக்கு விசாரணையை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அதுவரை ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கைது போன்ற கடுமையான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் கைது நடவடிக்கையில் இருந்து ராஜேந்திர பாலாஜி ஒரு வாரத்திற்கு தப்பித்துக் கொண்டாலும் கூட, கொலை முயற்சி புகாரின் பேரில் அவருக்கு எதிரான வழக்கு மேலும் மேலும் கடுமையாகி கொண்டிருக்கிறது. அதனால், சிறைத் தண்டனையில் இருந்து ராஜேந்திர பாலாஜி அவ்வளவு எளிதாக தப்பித்துக் கொள்ள முடியாது என்று சட்ட வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.