தமிழ் நாடு அரசு மீனவர்களுக்கு வழங்கிய மழைக் கால நிவாரணத்தில் கல்விக் கடன், நகைக் கடன் உள்ளிட்டவற்றுக்கான பிடித்தங்களை வங்கி கிளைகளில் செய்யப்படுவதாக வந்த புகார்களை அடுத்து சு.வெங்கடேசன் எம். பி வங்கி அதிகாரிகளிடம் பேசியதில் அத்தகைய பிடித்தம் செய்யப்படாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
புகார்கள்
இத்தகைய பிடித்தங்கள் இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடத்தில் உள்ள ஒரு அரசு வங்கியில் செய்யப்படுவதாக ஒரு மீனவர் சு. வெங்கடேசன் சமூக வலைத் தளக் கணக்கில் பதிவிட்டு இருந்தார். உடனடியாக வங்கியின் மண்டல அதிகாரிகள் இடம் பேசியதில் அத்தகைய பிடித்தங்களை நிருத்துவதாகவும், பிடித்த பணத்தை மறு வரவு செய்வதாகவும் உறுதி அளிக்கப்பட்டது.
சு. வெங்கடேசன் கருத்து
“கந்து வட்டிக் காரர்களின் மன நிலை. அரசு வங்கிகளுக்கு கூடாது என்று பேசினேன். இது மீனவர்களின் உடனடி அன்றாட வாழ்க்கை செலவுகளுக்காக அரசால் தரப்படுவது ஆகும். இதைப் பிடித்தம் செய்து விட்டால் அப்படி ஏழை எளிய மீனவ மக்கள் வாழ்க்கையை ஓட்ட முடியும்?
எல்லா வங்கிகளும் இதை கருத்தில் கொள்ள வேண்டும். வேறு எந்த மீனவ கிராமங்களில் வழங்கப்பட்ட நிவாரணம் இவ்வாறு பிடித்தம் செய்யப்பட்டு இருந்தால் அதுவும் மறு வரவு வைக்கப்பட வேண்டும். அதற்கான உரிய அறிவுறுத்தல்கள் அனைத்து வங்கி கிளைகளுக்கும் சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகங்களால் உடன் வழங்கப்பட வேண்டும்”
இவ்வாறு சு. வெங்கடேசன் எம். பி தெரிவித்துள்ளார்.