Fri. Nov 22nd, 2024

DIPR-P.R.No-1044-I-PR-Department-Koyembedu-Photo-Exhibition-Press-Release-Date-Extension-Date-05.11.2021-1

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள விடுதலைப் போரில் தமிழகம் என்ற சிறப்பு மிகுந்த புகைப்படக் கண்காட்சியை கடந்த 1 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

மேலும், புகைப்பட கண்காட்சிகளின் சிறப்புகள் குறித்து பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் பணியை சமூக ஊடகங்களும் மேற்கொள்ள வேண்டும் என முதல்வர், தமது டிவிட்டர் பக்கத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கடந்த 4 நாட்களாக நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பார்வையிட்டுள்ள நிலையில், குறிப்பாக, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகள் தேர்வுக்கு தயாராகி வரும் இளம் தலைமுறையினர் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

நாள்தோறும் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையையும் பொருட்படுத்தாமல் அனைத்து தரப்பு மக்களும் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில், வரும் நவம்பர் 7 ஆம் தேதியுடன், ( ஞாயிற்றுக்கிழமை) புகைப்படக் கண்காட்சி நிறைவு பெறுகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள், புகைப்படக் கண்காட்சியை பார்வையிடும் காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கை, சமூக ஊடகங்கள் வாயிலாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸின் கவனத்திற்கு சென்றுள்ளது. இளம்தலைமுறையினரின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், விடுதலைப் போரில் தமிழகம் எனும் புகைப்படக் கண்காட்சியை மேலும் ஒருவாரத்திற்கு, வரும் 14 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக தலைமைச் செயலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வார கால நீட்டிப்பு வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவியர்களும் கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.