Sun. Nov 24th, 2024

‘பா.ஜ.க பாத்திரத்தில் நான்கு நண்டுகள்’ என்ற தலைப்பில் நல்லரசு தமிழ் செய்திகளில் வெளியான ஹாட் சிறப்புக் கட்டுரை, இளம் தலைமுறையினரின் கவனத்தை மட்டுமல்ல, அரசியல் வாழ்க்கையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வந்த மூத்த ஊடகவியலாளர்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.  80 வயதை எட்டியவர்கள், அதன் சாரம்சத்தை உள்வாங்கிக் கொண்டு ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைத்தது, நல்லரசு தமிழ் செய்திகள் தளம், சரியான பாதையில்தான் பயணிக்கிறது என்பதை உணர்த்தியுள்ளது. அந்தவகையில், பலரிடம் இருந்து கிடைத்த தகவல்களை தொகுத்து, இங்கே நாம், அதன் தொடர்ச்சியாக இந்த சிறப்புக் கட்டுரையை முன்வைக்கிறோம்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா நடராஜன், சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத்தண்டனையை முடித்துவிட்டு, கடந்த 8 ஆம் தேதி பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார். சத்தம் இல்லாமல் அவர் சென்னை திரும்பி, இருக்கும் இடமே தெரியாமல் சில, பல நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு, தமிழக அரசியல் கள நிலவரத்தையும், அ.தி.மு.க.வில் நிலவும் கோஷ்டிப் பூசல்களையும் ஆராய்ந்து அரசியலில் நுழையலாமா?, வேண்டாமா? என்று முடிவெடுத்திருந்தால், இத்தனை காலம் தான் ஒரு ராஜதந்திரியாக இருந்ததற்கான ஒரு அர்த்தம் கிடைத்திருக்கும். ஆனால், டி.டி.வி.தினகரன் பிடியில் சிக்கிக் கொண்டு, இன்றைக்கு புலி வாலை பிடித்த கதையாக,  தவித்து வருகிறார் சசிகலா என்கிறார்கள் அரசியல் அனுபவமிக்க கள ஆய்வாளர்கள்.

கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக செல்வி ஜெயலலிதாவின் நிழல் போல இருந்தவர்தான் சசிகலா நடராஜன் என்பதை, அவரது எதிரிகள் கூட மறுக்க மாட்டார்கள். பிரபலமான ஒருவருக்கு ஆத்மார்ந்தமான நட்பிற்குரியவராக இருக்கும் ஒருவர், அவரின் வளர்ச்சிக்கு தன்னையே உருவாக்கி கொள்வதை, கடந்த கால வரலாறுகள் உணர்த்துகின்றன. அந்த வகையில், பொதுவெளியில், அரசியல் தளத்தில், அதிகார மையங்களில் செல்வி ஜெயலலிதாவுக்கு என்ன வகையான முக்கியத்துவங்கள் கிடைத்தனவோ, அத்தனையும் சசிகலா நடராஜனுக்கும் கிடைத்தது. சாதாரண அரசு அலுவலரின் மனைவியாக இருந்த அவர், முதலமைச்சருக்கு இணையான அதிகார மையமாக பல காலங்கள் வாழ்ந்திருக்கிறார். அந்த சுகத்தை அணுஅணுவாக அனுபவித்தும் இருக்கிறார். அதையும் கடந்து, அவரது உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களும், ஆட்சி அதிகாரத்தின் பலனை, பத்து பதினைந்து ஆண்டுகாலம் அனுபவித்திருக்கிறார்கள்.

சாதாரண பொருளாதார நிலையில் இருந்து பல நூறு கோடிக்கு மேலான செல்வந்தர்களாக, சசிகலாவின் ரத்த பந்தங்கள் மடடுமல்ல, ஒன்றுவிட்ட உறவுகள், அவர்களின் உறவுகள் என ஆயிரக்கணக்கானோர் பல கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உடையவர்களாக இன்றும் செழிப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சசிகலாவின் கடைக்கண் பார்வை பட்டால் போதும், பரதேசி கூட கோடீஸ்வரராக ஒரிரு மாதங்களிலேயே ஆக முடியும் என்பதற்கு ஒரே ஒரு உதாரணத்தை இங்கே பார்ப்போம்.

சசிகலாவின் பிறந்த மண்ணில் இருந்து தூரத்து உறவாக 25 வயதுடைய பையன் ஒருவன், போயஸ் தோட்டத்திற்கு எடுபிடி வேலைக்கு வருகிறான். நேரம் காலம் பார்க்காமல் உழைத்து, சசிகலாவின் நேரடி கண்பார்வை தன் மீது விழும் அளவுக்கு நெருக்கமாக மாறுகிறான். அவரிடம் இருந்து சின்ன சின்ன பாராட்டுகளை பெற்ற அந்த பையன், 6 மாதங்களில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்னோவா கார் வாங்குகிறான். அடுத்த ஆறு மாதங்களில் தியாகராய நகரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு ஒன்றை விலைக்கு வாங்குகிறான். இதெல்லாம் சாத்தியமா?, உண்மையா? எப்படி நம்புவது? என்று இதை வாசிப்பவர்களுக்கு கேள்வி எழலாம். ஆனால், 100க்கு 1000 சதவிகிதம் உண்மையான தகவல் இது. இரவு நேரங்களில் அந்த பையன் உல்லாசமாக இருக்கும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், தன்னைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல், அல்லது அந்தளவிற்கு நிதானம் இல்லாத நேரத்தில் தனது நண்பர்களிடம் தனது சாதனையைப் பற்றி பீற்றிக் கொண்டபோது, அருகில் அமர்ந்திருந்த ஊடகவியலாளர் ஒருவரின் காதில் விழுந்தவை இவை. அந்த தகவலை விசாரித்து, அவை உண்மை என்றும் அவர் தனது நண்பர்களான மற்ற ஊடகவியலாளர்களிடம் அந்த பையனை அடையாளம் காட்டியிருக்கிறார்.  

அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் அழைப்பின் பேரில், போயஸ் கார்டன்களுக்கு வரும் அமைச்சர்கள், பல நேரங்களில் முதல்வரின் அர்ச்சனைகளை கேட்டு, வியர்த்துப் போய் சப்த நாடியும் ஒடுங்கி கார்டனை விட்டு வெளியேறுவார்கள். அப்படிபட்ட அமைச்சர்களை அணுகி, ஆசிரியர், மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பணிகளுக்கான பணியிட மாற்றம், பணி நியமனம் போன்றவற்றை பெற்று  பல கோடி ரூபாய் அளவுக்கு  குறுகிய காலத்திலேயே சொத்து சேர்த்திருக்கிறான். இப்படி எண்ணற்ற உண்மை கதைகள் போயஸ் கார்டனில் புதைத்து கிடக்கின்றன.

இதுவரை தூரத்து உறவினரின் கதையை பார்த்தோம். இப்போது சேம்பிளாக சசிகலாவின் ரத்த சொந்தத்தைச் சேர்ந்த ஒருவரின் திருவிளையாடல்களைப் பார்ப்போம். அவர் ஒரு அரசு அதிகாரி. 2016 தேர்தலின் போது, சசிகலாவிடம் சொல்லி அ.தி.மு.க.வில் வேட்பாளர் சீட் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண பேரம் பேசினார். அதற்காக சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த ஒரு சமூக விரோதியை தனது கையாளாக வைத்திருந்தார். வேட்பாளராக தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் 20 லட்சம் ரூபாய் தர வேண்டும். அதில், 5 லட்சம் ரூபாயை அந்த சமூக விரோதி எடுத்துக் கொள்வார். அன்றைய தேதியில் அண்ணா சிலை எதிரே உள்ள பிரியதர்ஷினி ஹோட்டல், தியாகராய நகர் பாண்டி பஜாரில் உள்ள பிரசிடென்ஸி ஹோட்டலில் அந்த அரசு அதிகாரி தங்கியிருந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், இன்றைக்கு முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, 2016 சட்டமன்றத் தேர்தலில் நின்று வெற்றிப் பெற்றார் அல்லவா, அதே தொகுதியை எடப்பாடியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஒருவர் தனக்கு (எடப்பாடி தொகுதி)பெற்று தர வேண்டும் என்று கேட்டு, பிரியதர்ஷினி ஹோட்டலில் 20 நாட்களுக்கு மேல் தங்கியிருந்து, அரசு அதிகாரியின் விருப்பத்தையெல்லாம் நிறைவேற்றினார். அவர் யாரென்றால், இ.பி.எஸ். கருணையால், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்று அதே ஊரில் முக்கியப் பதவியில் இருந்தவர். இப்போதும் அ.தி.மு.க.வில் செல்வாக்கு மிக்கவராக வலம் வந்து கொண்டிருப்பவர்.

அன்றைக்கு அந்த அரசு அதிகாரி வாக்குறுதி அளித்தபடி, எடப்பாடி பழனிசாமிக்கு அந்த தொகுதி கிடைக்காமல், தன்னை நாடி வந்த எடப்பாடி மக்கள் பிரதிநிதிக்கு எடப்பாடி தொகுதியைப் பெற்று தந்திருந்தால், இன்றைக்கு முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்திருக்க முடியாது. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் விசுவாசத்தின் மீது சசிகலா வைத்திருந்த நம்பிக்கையால், அவரின் குடும்ப உறவினரான அந்த அரசு அதிகாரியின் ஆசை ஈடேறவில்லை. அந்த அரசு அதிகாரியின் லீலைகளைப் பற்றி எழுத நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. இப்போதைக்கு இது போதும்.

இப்படி, சசிகலாவை சுற்றி சுற்றி வந்தவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாக மாறி இருக்கிறார்கள். திருப்பதி ஏழுமலையானை படியேறி சென்று பலமுறை தரிசித்தவர்கள் கூட, வாழ்க்கையில் இந்தளவிற்கு சிகரத்தை தொட்டிருக்க முடியாது.

“இப்படி ராஜபோகமாக வாழ்ந்த, ராஜமாதாவாக, வாழ்வதற்கான காலமும், பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளும் கண் முன்னே இருக்கும்போது, 70 வயதை நெருங்கும் சசிகலாவுக்கு இன்னும் அதிகார வெறி அடங்காமல் இருப்பதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது” என்கிறார், அவரால் அரசியலில் இன்றைக்கும் உச்சத்தில் இருக்கும் அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர்.

“தன் இறுதி மூச்சு வரை அதிகாரத்தின் உச்சியில் இருந்த ஜெயலலிதா, உடல்நலம் பாதிக்கப்பட்டு 70 நாட்களுக்கு மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுபவித்த வேதனைகளை கூடவே இருந்து பார்த்திருப்பவர் சசிகலா. எவ்வளவு சர்வதிகாரியாக இருந்தாலும், மரண தருவாயில் தன் நிலை உணர்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில், ஜெயலலிதாவின் கடைசி காலத்தை கூடவே இருந்து பார்த்த சசிகலா, அவர்பட்ட துயரங்களை எல்லாம் உள்வாங்கியிருந்தால், அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர துளியளவும் எண்ணியிருக்க மாட்டார். ஆனால், அவரது உறவுகளின் அரசியல், அதிகார ஆசைக்கு அடிபணிந்து, தன்னையே மீண்டும் பகடைக் காயாக மாற்றிக் கொண்டுள்ளார் சசிகலா. இன்றைய முடிவும், நிலையும் தற்கொலைக்கு சமமானது.

பெங்களூரில் இருந்து சசிகலா சென்னை திரும்பியபோது கொடுக்கப்பட்ட பிரமாண்டமான வரவேற்புக்கு சொந்தக்காரர், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்தான். அவரின் வேண்டுகோளை ஏற்றுதான், அ.ம.மு.க. மாவட்ட நிர்வாகிகள், தங்கள் கைகாசை செலவழித்து, சசிகலாவை வரவேற்க காரில் வந்தார்கள் என்பதுதான் உண்மை. சசிகலா சென்னை திரும்பிய அந்த நிமிடத்திலேயே அமைச்சர்கள் பலர் அவரது காலில் விழுவார்கள். மூத்த நிர்வாகிகள் சசிகலாவிடம் சரணாகதி அடைவார்கள் என்றெல்லாம் பல கதைகளை அவிழ்த்துவிட்டார்கள் தினகரனோடு உறவாடிக் கொண்டிருப்பவர்கள். அவர்களின் விருப்பம் எல்லாம், சசிகலா வருகையால் அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்படும். அதன் மூலம், அ.தி.மு.க. கட்சி மீண்டும் சசிகலாவின் கட்டுப்பாட்டிற்குள் வரும். அப்போது தாங்கள் நினைப்பதை எல்லாம் சாதித்துக் கொள்ள முடியும் என்ற அரசியல் ஆதாயத்திற்காகவே சசிகலாவை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, அவரின் மீதான உண்மையான அன்பின் காரணமாக அல்ல, என்பதை சசிகலா இந்த நேரத்திலாவது புரிந்து கொள்ள வேண்டும்” என்ற அக்கறையோடு பேசினார் அந்த மூத்த நிர்வாகி.

சிறிதுநேர மௌனத்திற்குப் பிறகு மீண்டும் அவர் பேசினார். “இனி வரும் நாள்களில் சசிகலா எந்த இடத்திற்குச் சென்றாலும், அவரின் வரவேற்பிற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்க வேண்டும். ஆர்ப்பரிக்கும் அளவுக்கு கூட்டம் வேண்டுமென்றால், அவருக்கு டி.டி.வி.தினகரனின் தயவு வேண்டும். அவரது உறவுகளிலேயே ஆள் பலத்தை கொண்டிருப்பவர் டி.டி.வி.தினகரன் ஒருவர் மட்டுமே. அவரின் ஆதரவு இல்லாமல், அரசியலில் சசிகலா எதையும் சாதிக்க முடியாது என்ற நிலைதான் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. அதனால், சசிகலா உறவுகளுக்குள்ளேயே இருக்கும் தினகரன் எதிர்ப்புக் கோஷ்டி, சசிகலாவின் அரசியல் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைப் போடுவார்கள்.

சென்னை திரும்பி பல நாள்கள் ஆகிவிட்டது, அதிகாரத்தில் உள்ளவர்களில் ஒருவர் கூட அவரை சந்திக்க துணியவில்லை. அவரால் கட்சியில் பதவி பெற்றவர்களும் சசிகலாவை நேரில் சந்திக்க விரும்பவில்லை. கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு சசிகலா எந்த பக்கம் திரும்பினாலும், அந்த பக்கம் தரையில் விழ ஆயிரம் கட்சிக்காரர்கள் தயாராக இருந்தனர். ஆனால், இன்றைக்கு மூடிய வீட்டிற்குள் தனிமையில் உட்கார்ந்துக் கொண்டிருப்பதை பார்த்து அவர் மீது பரிதாபம்தான் ஏற்படுகிறது. என்னைப்போன்ற மூத்த அரசியல்வாதிகளின் ஒரே விருப்பம், மீண்டும் அரசியல் ஆசையோடு களத்திலி இறங்கி சசிகலா அவமானப்படக் கூடாது என்பதுதான். அதற்கு காரணம், இப்போது அ.தி.மு.க.வின் உச்சத்தில் இருப்பவர்கள் எல்லாம் சசிகலாவிடம் அரசியல் பாடம் கற்றவர்கள்தான்.

இன்றைய நாளில், கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கவும், அ.தி.மு.க.வில் பதவி பெறுவதற்கும் முதல்வர் இ.பி.எஸ்.ஸை அண்டியிருப்பதை தவிர வேறு வழியில்லை என்று எல்லோரும் புரிந்து வைத்திருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை, அந்த முகாமில் இருந்து ஒருவர் கூட சசிகலா பக்கம் தாவ மாட்டார்கள். இலவு காத்த கிளி போல காத்திருக்காமல், எஞ்சிய காலத்தை கோயில், குளம் என்று சென்று, வாழ்க்கையை நிம்மதியாக சசிகலா அனுபவிக்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் நலம் விரும்பி என்ற அடிப்படையில் என்னைப் போன்ற ஏராளமானோரின் எண்ணமாக இருக்கிறது.

இத்தனை காலம் ஆட்சி அதிகாரத்தை அனுபவித்துவிட்டு, ஒரே நாளில் அதையெல்லாம் விட்டுவிட்டு துறவி போல எப்படி வாழ்வது என்ற கேள்வி எழலாம். அதற்கும் ஒரு முன்னூதாரணம் இருக்கிறது. மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவோடு எப்படி சசிகலா வாழ்ந்தாரோ, அதில் பாதியளவுக்காவது வாழ்ந்திருப்பவர், ஜெயலலிதாவின் விசுவாசமிக்க உதவியாளர் பூங்குன்றன். அம்மாவே தெய்வம் என்று தனது மனதை தேற்றிக் கொண்டு, பழைய நினைவுகளை எல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, ஆன்மிகப் பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்கத் தொடங்கிவிட்டார் பூங்குன்றன் அவரைப் பார்த்து, அவரது பாதையில் சசிகலா பயணித்தால், கடைசி காலத்தில் புண்ணியமாவது கிடைக்கும்” என்று அவரின் மீது மிகுந்த அக்கறையோடு பேசினார், அந்த அ.தி.மு.க. முன்னணி நிர்வாகி.