Sun. Nov 24th, 2024

மாவட்டந்தோறும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பகல்நேரம் முழுவதும் பொதுமக்களிடம் பேசுவதைவிட, ஓய்வுநேரங்களிலும், இரவு முழுவதும் அ.தி.மு.க.நிர்வாகிகளிடம்தான் அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறாராம். சசிகலா வருகைக்கு முன்பு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் பஞ்சாயத்துகளுக்கு அதிக நேரம் செலவிட்ட இ.பி.எஸ்., சசிகலா விடுதலையான நாளில் இருந்து, அவருக்காகவும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கும் ஒன்றிரண்டு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக முன்னணி நிர்வாகிகள் ஆகியோரிடம் சாந்தமாகவும், அனல் கக்கும் விதமாகவும் பேசி பேசியே களைத்துப் போவதாக, அவரது நிழலாக இருக்கும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

ஒட்டுமொத்த தனது அரசியல் வாழ்க்கையில், கடந்த நான்காண்டுகளில் கற்றுக் கொண்ட அரசியல் பாடம், என் ஆயுள் முழுவதும் அரசியலை எதிர்கொள்ளும் அளவுக்கு மன தைரியத்தை கொடுத்ததடன், அரசியல் வியூகங்களையும் கற்றுத் தந்துவிட்டது. அதனால், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசியாக நின்று, அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தை கட்டிக் காப்பேன். அதற்கு தடையாக சசிகலா மட்டுமல்ல, யார் வந்தாலும் தூக்கியெறிய தயங்க மாட்டேன் என தன்னை சந்திக்கும் சசிகலா ஆதரவு மனநிலையில் உள்ள முன்னணி நிர்வாகிகளிடம் கர்ஜனை புரிகிறாராம், எடப்பாடியார்.

நீங்கள் எல்லாம் சசிகலா என்ற ஒற்றை மனுஷியைப் பார்க்கிறீர்கள்.. பாவம் என்று சொல்கிறீர்கள், பரிதாபமாக பார்க்கிறீர்கள். உங்கள் அத்தனை பேரையும் விட, அந்தம்மாவைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அவரின் நல்லது, கெட்டதுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மன்னார்குடி குடும்பத்தின் அத்தனை அபிலாஷைகளையும் நிறைவேற்றி வைத்தவன் நான். அப்போது நான் பட்ட அவமானங்களை எல்லாம் வெளியே சொன்னால், உங்களில் ஒருவர் கூட அந்தம்மாவுக்காக பரிந்து பேச மாட்டீர்கள். அந்தம்மாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நான் செய்த பணிவிடை மாதிரி, மறைந்த முதல்வர் அம்மாவிற்குக் கூட நான் செய்தததில்லை. அதுபோன்ற ஒரு சூழ்நிலையையும் மறைந்த அம்மா எனக்கு தரவில்லை.  

அதே காலகட்டத்தில்தான், எந்த பிரதிபலனும் சசிகலாவிடம் இருந்தோ, மன்னார்குடி குடும்பத்திடம் இருந்தோ நான் எதிர்பார்த்ததில்லை. எனக்கிருந்தது ஒரே ஒரு கவலைதான். அம்மா கொடுத்த அமைச்சர் பதவிக்கும், என் மேல் அவர் கொண்டிருந்த நம்பிக்கைக்கும், சசிகலாவினாலோ  அவரது குடும்ப உறவுகளினாலோ எந்தவிதமான ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்று கருதியே, சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிதமிஞ்சிய விசுவாசத்தைக் காட்டினேன். முதலமைச்சராக நான் பதவியேற்பதற்கு முன்பு அந்த குடும்பத்தினரிடம் நான் காட்டிய விசுவாசத்தைப் பற்றி, சசிகலாவோ, அவரது குடும்ப உறவுகளோ என் மீது பழி சுமத்த சொல்லுங்கள் பார்க்கலாம். சசிகலாவை விட, அவரது குடும்ப உறவினர்களுக்கு நான் அதிகமாக செய்திருக்கிறேன்.

அதையெல்லாம் மனசாட்சியோடு அவர்கள் நினைத்துப் பார்த்தால், என் மீது அவர்களுக்கு கோபமே வராது. இந்த நிமிடம்கூட, சசிகலாவை நான் சந்தித்து அவர் என்மீது வைத்த நம்பிக்கைக்கு பாத்திரமானவனாக என்னால் மாற முடியும். ஆனால், சசிகலாவால், அவரது குடும்பத்தை விட்டோ, குறிப்பாக டி.டி.வி. தினகரனனை தள்ளி வைத்துவிட்டோ, அ.தி.மு.க.வுக்கு வர முடியாது. சசிகலா என்ற ஒற்றை மனுஷியை அ.தி.மு.க.வில் இணைத்தால், அவரது பெயரைச் சொல்லி, மாவட்டந்தோறும் நூற்றுக்கணக்கான அவரது உறவினர்கள், அ.தி.மு.க.வில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிடுவார்கள். ஒரு அ.தி.மு.க. நிர்வாகி கூட தன்மானத்தோடு வாழ முடியாது. மாவட்ட அளவில் கட்சிப் பதவியோ, மாநில அளவிலான கட்சிப் பதவியோ, யார் அதிகமாக பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு விற்றுவிடுவார்கள் சசிகலா உறவினர்கள்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா உயிரோடு இருந்தபோது, கட்சிக்குள் இதுதானே நிலைமையாக இருந்தது. இன்றைக்கு அந்தம்மாவே இல்லை என்ற நிலையில், சசிகலாவின் கையில் கட்சி சிக்கினால், ஒட்டுமொத்த அ.தி.மு.க.வின் நிலை என்னவாகும் என்று யோசியுங்கள். என்னை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்று எனக்குத் தெரியும். தனிப்பட்ட பழனிசாமி என்ற ஒருவனுக்காக நான் இவ்வளவு அவமானங்களை, கஷ்டங்களை தாங்கிக் கொள்ளவில்லை. அ.தி.மு.க.வில் உள்ள ஒரு கோடி தொண்டர்களின் எதிர்காலத்தை நினைத்துதான் நான் சசிகலாவை எதிர்க்கிறேன். அம்மா மறைவார், ஆட்சியும், கட்சியும் எனது கைக்கு வரும் என்று நான் ஒருபோதும் கனவுகூட கண்டதில்லை. ஆனால், அம்மா மறைந்தவுடனே, இக்கட்டான நேரத்தில்தான் என் கைக்கு கட்சியும், ஆட்சியும் வந்தது. கடந்த நான்காண்டுகளில், என்னைதான் வாரிசாக அம்மா அடையாளப்படுத்தினார் என்று இன்றைக்கும் கூறிக் கொண்டு நம் கூடவே இருக்கும் ஓ.பி.எஸ்., எனக்கு எவ்வளவு குடைச்சல்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் கொடுக்கிறார் என்பது என் கூடவே இருக்கும் அமைச்சர்களுக்கும், முன்னணி நிர்வாகிகளுக்கும் தெரியும்.

அவரின் அப்பாவித்தனமாக தோற்றத்தை நம்பிதான் பிரதமர் மோடியும், அவரால் அ.தி.மு.க. அரசையும், கட்சியையும் காப்பாற்றிவிட முடியும் என்று கருதினார். அதற்காக, மத்திய அரசின் பல்வேறு துறைகள் மூலம் எனக்கு அழுத்தமும் கொடுக்கப்பட்டது. ஆனால், அவற்றையெல்லாம் சமாளித்து, பிரதமர் மோடியின் நம்பிக்கையை நான் முழுமையாக பெற்று இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் நீடிக்கிறேன். என்னை நிம்மதியாக விட்டால், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க.வை வெற்றிப் பெற வைத்து, மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியையே தொடர வைத்து, மறைந்த நம் அம்மாவின் கனவான, எனக்குப் பின்னாலும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி தொடரும் என்ற சபதத்தை நிறைவேற்றிக் காட்டுவேன்.

ஆனால், அதற்கு மாறாக, சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம், அ.ம.மு.க.வை அ.தி.மு.க.வோடு இணைக்கலாம் என்று யாராவது பரிந்து பேசிக்கிட்டு என்னிடம் வந்தால், அவர்கள்தான் எனக்கு முதல் எதிரியாக மாறிப் போவார்கள். கடந்த பல மாதங்களாக நான் மாவட்டந்தோறும் ஆய்வுக் கூட்டங்களுக்கு சென்றபோதெல்லாம், மக்களின் மனநிலையை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அ.தி.மு.க. ஆட்சி மீதோ, என் மீதோ மக்களுக்கு வெறுப்பு இல்லை என்பதை புரிந்து கொண்டுள்ளேன். எனது மனநிலைக்கு ஏற்பதான், உளவுத்துறையும், கிராமங்களில் இன்றைக்கும், அ.தி.மு.க.வுக்கும், இரட்டை இலைக்கும் இருக்கும் செல்வாக்கு குறைந்துவிடவில்லை, அப்படியே இருக்கிறது என்று தகவல் தெரிவித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட சரிவு போல, வரும் சட்டமன்றத் தேர்தலில் பாதிப்பு இருக்காது என்று உளவுத்துறை அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் உள்ள அமைச்சர்கள், முன்னணி நிர்வாகிகள், ஒன்றிய அளவில் உள்ள கட்சிப் பொறுப்பாளர்களின் செயல்பாடுகளால்தான், ஆங்காங்கே மக்கள் அதிருப்தியுடன் இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பல்வேறு துறைகளின் உயர் பதவிகளில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் மாவட்டந்தோறும் ஆய்வுக் கூட்டங்களுக்கு சென்று வரும் நேரங்களில், மக்களிடம் எந்தவிதமான அதிருப்தியும் காணப்படாததை கண்டு ஆச்சரியம் அடைந்ததாக என்னிடமே சில அதிகாரிகள் நேரடியாக சொல்லியுள்ளனர். இன்றைக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள பெரும்பான்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், எனது செயல்பாடுகளை பாராட்டுகிறார்கள். அவர்களில் ஒருவரிடம் கூட நான் அதிகாரத்தை காட்டியதில்லை. ஆனால், மறைந்த முதல்வரம்மா இருந்தபோது, சசிகலாவும், அவரது குடும்பத்து உறவுகளும் எத்தனை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளை மிரட்டியிருக்கிறார்கள், அவமானப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையெல்லாம், உங்களுக்கு எந்த உயரதிகாரியாவது நெருக்கமாக இருந்தால் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மாவட்டச் சுற்றுப் பயணங்களின் போது, அ.தி.மு.க. ஆட்சியே தொடர வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புவதை நான் கண்கூடாக பார்க்கிறேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், நல்லது செய்வார்களோ இல்லையோ, அராஜகம் செய்வார்கள் என்ற அச்சம், பத்தாண்டுகள் ஆட்சியில் அவர்கள் இல்லாதபோதும் அந்த பயம் பொதுமக்களிடம் இன்றும் இருக்கிறது, இதுதான் அ.தி.மு.க.வுக்கு பலம். அதனால், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. அரசு மீது அதிருப்தி இல்லாதததை நமக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு நம்மிடையே ஒற்றுமை வேண்டும். கடந்த நான்காண்டுகளில் தமிழக மக்களுக்கு எவ்வளவோ நன்மைகள் செய்துள்ளோம். அதையெல்லாம் கிராமங்கள்தோறும் கொண்டு சென்று, கிராம மக்களின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்ய பாருங்கள். அதுதான் இப்போது முக்கியம். அதைவிட்டுவிட்டு, சசிகலா பற்றி பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள்.

கடந்த நான்காண்டுகளாக மத்திய அரசு கொடுத்த எவ்வளவோ நெருக்கடிகளையெல்லாம் சமாளித்துவிட்டேன். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்ற பா.ஜ.க மூத்த தலைவர்களுக்கு என் மீது இருந்த அவநம்பிக்கையை போக்கி, அ.தி.மு.க.வையும் ஆட்சியையும் என்னால் வழிநடத்த முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும் வகையில், எனது கடந்த கால செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன என்பதை பா.ஜ.க மூத்த தலைவர்கள் சிலரே என்னிடம் தனிப்பட்ட முறையில் பாராட்டும் விதமாக தெரிவித்துள்ளனர்.

அதனால், சசிகலா மிரட்டல் எல்லாம் எனக்கு தூசு மாதிரி. அதற்காக அந்த அம்மையாரை நான் மரியாதை குறைவாக பேசுகிறேன் என்று கருதி விடாதீர்கள். அவரது வாழ்க்கையில் என்னவெல்லாம் அவருக்கு கிடைக்க வேண்டுமோ, அதைவிட பலமடங்கு கடவுள் அருளால் அவருக்கு கிடைத்துவிட்டது. சிறை வாழ்க்கையில் அவர் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருப்பார். அதனால், இப்போது அவருக்கு முழுமையான ஓய்வும், அமைதியான வாழ்க்கையும்தான் தேவை. அதை அவர் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். அப்படிபட்ட வாழ்க்கை எனக்கு தேவையில்லை. அம்மா இருந்த காலத்தில் இருந்த மாதிரி ராஜமாதாவாகதான் நான் இருப்பேன். எனது குடும்ப உறவுகள் எல்லாம் தளபதிகளாக நின்று ஆட்சி, அதிகாரத்தை வழிநடத்துவார்கள் என்று அந்தம்மா நினைத்தால், அந்த கனவு நான் இருக்கும் வரை ஒருபோதும் நிறைவேறாது.

பழக்க தோஷத்தில் அவரின் காலில் யார் விழுந்தாலும் எனக்கு கவலையில்லை. என்னை நம்பி பெருங்கூட்டம் அதிமுக.வில் இருக்கிறது. மக்களும் என்னை நம்புகிறார்கள். அவர்களுக்காக நான் வாழ்வேனே தவிர, சசிகலா காலில் மீண்டும் விழுந்து, என் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அவமானகரமானதாக மாற்றிக் கொள்ள மாட்டேன்.. என நரம்பு புடைக்க மூச்சு விடாமல் ஆக்ரோஷமாக பேசும் முதல்வர் எடப்பாடி பழனிசாயைக் கண்டு, அவரது ஆதரவாளர்களே நடுங்கிப் போகிறார்கள் என்று தகவல் தெரிவித்த இ.பி.எஸ். ஆதரவுத் தலைவர்கூட, பேசி முடித்ததும், கொஞ்ச நேரம் இயல்பு நிலையிலேயே இல்லை.

நல்லா தானப்பா படம் காட்டுகிறார் எடப்பாடியார்…