மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள் வெகு வேகமாக நிரம்பி வருவதால், அந்த பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றலாத்தில் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால், பொதுமக்கள் அருவிகளில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆறுகளிலும், மிகவும் பிரபலமான தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை வித்து நெல்லை ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு இன்று கடைசி புரட்டாசி சனிக்கிழமை என்பதால் நூற்றுக்கணக்கானோர் சென்றனர். வனப்பகுதியில் உள்ள இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அவரவர் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியை கடந்து பிரதான சாலைக்கு மக்கள் வந்த போது, சிறிய பாலத்தில் மழை நீர் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால், பக்தர்கள் தங்கள் ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த மீட்புப்படையினர், கயிறு மூலம் பக்தர்களை பத்திரமாக மீட்டனர். மீட்புப் பணியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர்.